Google

“நான் யார்?” இதற்கு, யாரால் பதில் அளிக்க முடியும்? - லின்-சீ


லின்-சீ, ஒருநாள் காலையில் சொற்பொழிவாற்றிக் கொண்டிருக்கும்போது, திடீரென்று யாரோ ஒருவர், “எனக்கு ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் அளியுங்கள்:

நான் யார்?” என்று கேட்டார்.

லின்-சீ கீழே இறங்கி வந்து அந்த மனிதரை நோக்கி சென்றார்.

 அந்த முழு அறையும் மிகவும் அமைதியானது. அவர் என்ன செய்யப் போகிறாரோ? இது ஒரு எளிய கேள்விதான். இதற்கு அவர் தனது இருக்கையில் இருந்தே பதில் அளித்திருக்கலாம்.

 அவர் அந்த ஆளிடம் வந்தார். அந்த அறையே அமைதியாக இருந்தது. லின்-சீ கேள்வி கேட்டவரின் முன்பு, அவரின் கண்களையே பார்த்துக் கொண்டு நின்றார்.

 அது ஒரு ஊடுருவிச் செல்கிற தருணமாக இருந்தது. எல்லாமே நின்று விட்டது.

கேள்வி கேட்டவருக்கு வியர்த்துக் கொட்ட ஆரம்பித்தது. லின்-சீ அவரது கண்களை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.

 அப்போது லின்-சீ அவரிடம், “என்னிடம் கேட்காதே. உனக்குள் சென்று இந்தக் கேள்வியைக் கேட்பவன் யார் என்று கண்டுபிடி.

 உனது கண்களை மூடிக் கொள். ‘நான் யார்’ என்று கேட்காதே. உனக்குள் சென்று, இந்தக் கேள்வியைக் கேட்பது யார் என்று கணடுபிடி. உள்ளே உள்ள கேள்வி கேட்பவர் யார்?

 என்னை மறந்துவிடு. கேள்வியின் மூலத்தைக் கண்டுபிடி. உனக்குள் ஆழ்ந்து செல்!” என்றார்.

அப்போது அந்த மனிதன் கண்களை மூடிக் கொண்டு, அமைதியாகி விட்டதாகவும், மேலும் திடீரென்று அவன் மெய்ஞானம் பெற்றவன் ஆகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

 அவன் கண்களைத் திறந்தான், சிரித்தான், லின்-சீயின் காலைத் தொட்டு வணங்கினான். மேலும் அவரிடம், “நீங்கள் எனக்கு பதிலளித்துவிட்டீர்கள். நான் ஒவ்வொருவரிடமும் இந்தக் கேள்வியைக் கேட்டு வந்தேன். அப்போது எனக்கு அநேக பதில்கள் கொடுக்கப் பட்டன.

 ஆனால் எதுவும் அதற்கான பதிலாக நிரூபணம் ஆகவில்லை. ஆனால் இப்போது நீங்கள் எனக்கு பதிலளித்துவிட்டீர்கள்.” என்றான்.

“நான் யார்?” இதற்கு, யாரால் பதில் அளிக்க முடியும்? ஆனால், அந்தக் குறிப்பிட்ட சூழ்நிலையில் – கிட்டத்தட்ட ஆயிரம் பேர் அமைதியாக இருக்கும்போது, குண்டூசி விழும் சப்தம்கூட கேட்கும். அந்த அமைதியில் – லின்-சீ கீழே இறங்கி வந்து, தனது ஊடுருவும் கண்களால் அவனைப்பார்த்து, அதன்பிறகு அவனிடம், “உனது கண்களை மூடிக்கொள். உனக்குள் போ. போய், கேள்வி கேட்கும் அந்த நபர் யார் என்று கண்டுபிடி. நான் பதில் சொல்ல வேண்டும் என்று காத்திருக்காதே. கேள்வி கேட்டவர் யார் என்று கண்டுபிடி.” என்றார். அப்போது, அந்த மனிதனும் கண்களை மூடிக் கொண்டான். அந்தச் சூழ்நிலையில் நடந்தது என்ன? திடீரென்று அவன், அவனது மையத்திற்குச் சென்றுவிட்டான். திடீரென்று அவன் தனக்குள் உள்ள அந்த நடுப்பகுதி குறித்து விழிப்புணர்வு பெற்று விட்டான்.

இது, நீங்கள் கண்டுபிடிக்க வேண்டியது. மேலும், விழிப்புணர்வு என்பதற்கு இப்படி உங்களுக்குள் உள்ள அந்த நடுப்பகுதியை கண்டுபிடிப்பதற்கான வழிமுறை என்று அர்த்தம். நீங்கள் எந்த அளவுக்கு தன்னுணர்வு இல்லாமல் இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு நீங்கள் உங்களிடமிருந்து மிகவும் அதிக தூரம் விலகி இருக்கிறீர்கள். அதே போன்று, நீங்கள் எந்த அளவுக்கு அதிக தன்னுணர்வுடன் இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு நீங்கள் உங்களுக்கு மிகவும் நெருக்கமாக வருவீர்கள். உங்களது தன்னுணர்வு முழுமையாக ஆகிவிடும்போது, நீங்கள் உங்களது மையத்தில் இருப்பீர்கள். உங்களது தன்னுணர்வு குறைவாக இருந்தால், நீங்கள் வெளிவட்டப் பரப்பில் இருப்பீர்கள். நீங்கள் தன்னுணர்வு இல்லாமல் இருந்தால், நீங்கள் வெளிவட்டப் பரப்பில் இருப்பதால், அங்கே உங்களது மையம் முற்றிலுமாக மறக்கப் பட்டு விடுகிறது. எனவே இந்த இரண்டு வழிகளில் தான் நீங்கள் நகர்ந்து செல்வது சாத்தியமாகும்.

Comments