Google

விழிப்புணர்வோடிருக்கும் மனிதன் சுதந்திரமானவன் - OSHO



விழிப்புணர்வோடிருக்கும் மனிதன் சுதந்திரமானவன். அவன் செயல் செய்ய நினைக்கும்போது அவன் செய்கிறான். அப்போது அவன் அதை அனுபவித்து செய்கிறான், ஏனெனில் அது அவனுடைய இயல்பிலிருந்து தானாகவே வருகிறது.

ஆனால் உண்மையிலேயே இந்த மதங்கள் மக்களை மிகவும் மோசமாக குழப்பி வைத்திருக்கிறது. உன்னை விழிப்படைய செய்வதற்கு பதிலாக அவை உனக்கு பத்து கட்டளைகள் கொடுத்து வைத்திருக்கிறது. நீ எதை தேர்ந்தெடுக்க வேண்டும், எதை தேர்ந்தெடுக்கக் கூடாது என அவர்கள் தீர்மானித்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் உனக்கு பொறுப்புகளையும் கடமைகளையும் கொடுத்திருக்கிறார்கள்.

விழிப்புணர்வுள்ள மனிதனுக்கு பொறுப்புக்களோ, கடமைகளோ, தேர்ந்தெடுப்பதோ தேவையில்லை. அப்போதுதான் சரியான சமயத்தில் சரியான செயலை செய்ய அவன் திறமையுள்ளவனாக இருப்பான்.

நான் ஒரு சிறிய கிறிஸ்துவ பள்ளியைப் பற்றிய கதை ஒன்றை கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த பாதிரியார் வாரத்திற்கு ஒரு முறை வந்து அந்த குழந்தைகளை பார்த்துவிட்டுப் போவார். ஒருமுறை அவர் வந்த போது குழந்தைகளிடம், “வாரத்திற்கு ஒருமுறை ஏதாவது நல்ல செயல் செய்ய வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார். ஒரு பையன், “நல்லது என்றால் என்ன? அது நல்லது என்று நாங்கள் எப்படி தெரிந்து கொள்வது?” எனக் கேட்டான். எப்போதும் பாதிரியார்கள் பதில் சொல்வதுபோல அந்த பாதிரியாரும் “மக்களுக்கு உதவுவது நல்லது, உதாரணமாக ஒரு குருட்டு மனிதன் தெருவை கடக்க அவருக்கு உதவுவது நல்லது” என்று கூறினார், அடுத்த முறை அவர் வந்தபோது, “கடந்த வாரத்தில் ஏதாவது  நல்லது செய்தீர்களா?” என்று கேட்டார். மூன்று பையன்கள் எழுந்து நின்றனர். பாதிரியார், “சிறப்பாக இல்லை, எனினும் ஏதோ ஆரம்பிக்கபட்டுவிட்டது. நூறு பையன்களில் மூன்று பையன்கள் மட்டுமே ஏதோ நல்லது செய்திருக்கிறார்கள். அவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். ஒவ்வொருவராக சொல்லுங்கள், என்ன நல்லது செய்தீர்கள்?” என்று கேட்டார்.

முதல் பையன், “நான் நீங்கள் நல்லது என உதாரணம் கூறியபடியே ஒரு குருட்டு பெண் தெருவைக் கடக்க உதவி செய்தேன்.” என்றான். பாதிரியார், “மிகவும் நல்லது, நீ ஒரு உண்மையான கிறிஸ்துவன்” என சொன்னார்.

 இரண்டாவது பையனை, “நீ என்ன செய்தாய்?” எனக்கேட்டார். அவன், “நான் செய்ததும் அதுவேதான்! ஒரு குருட்டு பெண் தெருவை கடக்க உதவி செய்தேன்” எனக் கூறினான்.

பாதிரியாருக்கு ஒரு சிறிது சந்தேகம் வந்தது. இந்த சிறிய கிராமத்தில் எப்படி இரண்டு குருட்டு பெண்கள் உதவி செய்ய கிடைத்தார்கள்? ஆனால் அது சாத்தியம்தான், நடக்காத காரியம் அல்ல. அதனால் அவர், “நீ செய்ததும் நல்ல செயல்தான்! நீயும் ஒரு சிறந்த கிறிஸ்துவன்.” என்றார். அவர் மூன்றாவது பையனைப் பார்த்து, “நீ என்ன செய்தாய்?” எனக் கேட்டார்.

அவன், “நானும் அதையேதான் செய்தேன். ஒரு குருட்டுப் பெண் தெருவைக் கடக்க உதவி செய்தேன்” என்று கூறினான்.

இப்போது இது மிகவும் அதிகம். அந்த பாதிரியார், “எனக்கு இந்த முழு கிராமமும் தெரியும். மூன்று வயதான குருட்டு பெண்கள் யார்?” என்று கேட்டார்.

மூன்று பையன்களும் ஒரே நேரத்தில் சத்தமிட்டனர். “அது மூன்று பேர் அல்ல. அது ஒரே பெண்தான். அவள் ரோடை கடக்க விரும்பவில்லை. அதனால் போராட வேண்டியதாக இருந்தது. ஆனால் நாங்கள் மூன்று பேராக இருந்ததால்…….. அவள் கத்தி எங்களை அடித்தாள், ஆனால் ஒரு உண்மையான கிறிஸ்துவன் கஷ்டப்பட்டாக வேண்டும். இறுதியில் நாங்கள் அவளை தெருவைக்கடந்து கொண்டு சென்று விட்டோம்.”

விழிப்புணர்வில்லாத ஒரு குருட்டு மனிதன் இது போலத்தான் எதையாவது செய்வான். இவர்கள் இதை உலகம் பூராவும் செய்து கொண்டிருக்கிறார்கள். அது கதையல்ல, அது உண்மை.

மக்களில் ஆயிரக்கணக்கானவர்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் எல்லா மதத் தலைவர்களும் பிரசவ கட்டுப்பாட்டிற்கு எதிராக போதிக்கிறார்கள். கருக்கலைத்தலுக்கு எதிராக இருக்கிறார்கள். அவர்களது விவாதம் ஒன்றேதான் – பிரசவ தடை மூலமாக கடவுள் கொடுப்பதற்கு எதிராக இருக்கிறீர்கள். அது மதத்தன்மையுடையதல்ல. – ஆனால் இந்த வித்தியாசத்தைப் பாருங்கள். கடவுள் உனக்கு கேன்சரைக் கொடுக்கும்போது, உனக்கு இருதய நோயைக் கொடுக்கும்போது, உனக்கு ஓரினச் சேர்க்கையை கொடுக்கும்போது, இறுதியாக அவர் உனக்கு நோபல் பரிசு போன்ற எய்ட்ஸ் நோயைக் கொடுக்கும் போது நீ ஏன் அவற்றை மறுதலிக்கிறாய்?

எல்லாமும் கடவுளால் கொடுக்கப்படுகிறதென்றால், “கடவுளே நீ உயர்ந்தவன், நீ எனக்கு கேன்சரைக் கொடுத்திருக்கிறாய். நன்றி” என அவற்றை நாம் நன்றியோடு ஏற்றுக் கொள்ள வேண்டும். மருத்துவமனைக்குப் போகக் கூடாது, எந்த கேன்சர் சிறப்பு ஆஸ்பத்திரிக்கும் போகக் கூடாது, ஏனெனில் அது மதத்திற்கு எதிரானது, அது கடவுளுக்கு எதிரானது. கடவுள் உனக்கு கேன்சரைக் கொடுத்திருக்கிறார், நீ அதை ஆபரேஷன் செய்ய ஒரு மருத்துவரிடம் போவாயா? அப்படி போனால் நீ மதத்திற்கு எதிரான வழியில் செயல் படுகிறாய். ஆனால் யாரும் நீ ஏற்றுக் கொள்…… என இந்த மக்களை கேட்பதில்லை.

உண்மையில் மதம் மருத்துவமனைகளை நடத்துகிறது. குருடர்களின் கண் பார்வை திரும்ப கிடைக்க கண் மருத்துவமனைகளை நடத்துகிறது. கடவுள் அவனை குருடாக படைத்திருக்கிறார், ஆனால் கடவுளுக்கு சேவை புரியும் நீ அவனுக்கு பார்வை கிடைக்க செய்வாயா? ஆனால் இது போல விஷயங்கள் அவர்கள் மனதில் தோன்றுவதேயில்லை. அவர்கள் எதிர்க்கும் ஒரே விஷயம் பிறப்பு தடுப்புதான். ஏன்?

அது கடவுளுடன் எந்த விதத்திலும் சம்பந்தபட்டதல்ல. கடவுள் ஏதாவது பரிசு கொடுத்தால்கூட அதை – ‘நன்றி, தேவையில்லை’ – என திருப்பி கொடுக்க உனக்கு எல்லா உரிமையும் உண்டு. அதில் தவறென்ன இருக்கிறது?. உனக்கு அது தேவையில்லாவிடில் ……….அவர் ஏற்கனவே அதிக பரிசுகள் கொடுத்திருக்கிறார், நீ அதை ஏற்றுக் கொண்டும் இருக்கிறாய், அதனால் நீ சிரமப்பட்டுக் கொண்டும் இருக்கிறாய்.

நீ அவரிடம், “இது போன்ற பரிசுகள் அனுப்புவதை நிறுத்துங்கள். என்னிடம் ஏற்கனவே அதிகம் இருக்கிறது, தேவையை விட அதிகமாகவே இருக்கிறது. உன்னுடைய பரிசுகள் இறந்து கொண்டிருக்கின்றன. எத்தியோப்பியாவில் மட்டுமே நாளென்றுக்கு ஆயிரக்கணக்கில் இறக்கின்றன. உலகம் பூராவிலும் சேர்க்கும்போது எண்ணிக்கை அதிகமானதாக இருக்கும்.” என்று கூற வேண்டும்.

ஆனால் இது கடவுளுடன் சம்பந்தப்பட்டத்தல்ல. அது பாதிரியார்களுடன் சம்பந்தபட்டது. எல்லா மதங்களும் தங்களது எண்ணிக்கையை அதிகப் படுத்துவதில்தான் ஆர்வம் காட்டுகின்றன. அதிக எண்ணிக்கை என்றால் அதிக அதிகாரம் அவர்கள் கையில் வரும். இல்லாவிடில் இந்த போலந்து போப் – அவரைப் பற்றி யார் கவலைப் படுகிறார்கள்? ஒரு அதிசயம் நடந்து இந்த உலகத்திலுள்ள எல்லா கத்தோலிக்கர்களும் மறைந்து போய்விட்டால் இந்த போலக் போலந்துக்குத்தான் திரும்ப போக வேண்டும். அவர் என்ன செய்வார்?

அவருக்கு அதிக கத்தோலிக்கர்கள் தேவை. ஏற்கனவே ஆறுநூறு கோடி கத்தோலிக்கர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவருக்கு அந்த எண்ணிக்கை போத வில்லை. மக்கள் பிறப்பு கட்டுப்பாட்டை கடைபிடிக்க ஆரம்பித்தால், கருகலைப்பு செய்தால், பின் கத்தோலிக்கர்கள் அனாதை ஆஸ்ரமத்தை அமைக்க முடியாது. ஏழைகளை காண முடியாது, கத்தோலிக்கர்களாக மாற்ற பிச்சைக்காரர்களை காண முடியாது.

இந்த உலகத்தில் எந்த அளவு முடியுமோ அந்த அளவு ஏழைகள் இருக்க வேண்டும், எவ்வளவு அனாதை இல்லங்கள் இருக்க முடியுமோ அவ்வளவு இருக்க வேண்டும், கஷ்டப்படும் மக்கள் எவ்வளவு பேர் உண்டோ அவ்வளவு நல்லது, ஏனெனில் இவைதான் அவர்களுக்கு எண்ணிக்கைகளைக் கொடுக்கும். அதனால்தான் அவர்களுக்கு இதில் அக்கறை. இதே போல் ஒவ்வொரு மதமும் தங்களுக்கே உரிய வழிமுறையை வைத்துள்ளன.

உதாரணமாக முகம்மதியர்கள் நான்கு மனைவிகளை வைத்துக் கொள்ள அனுமதிக்கின்றனர். ஒரு பெண் நான்கு கணவன்களை வைத்துக் கொள்ள அனுமதித்தால் மக்கள் தொகை உயராது. ஏனெனில் ஒரு கணவனோ நான்கு கணவன்களோ அது எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது. அவள் ஒரே ஒரு கர்ப்பம்தான் தரிக்க முடியும். அதனால் எந்த மதமும் ஒரு மனைவிக்கு நான்கு கணவன்களை அனுமதிப்பதில்லை அப்படி இருந்தால் அது மக்கள் தொகையை சமன்படுத்தும்.

ஆனால் முகம்மதியர்கள் ஒரு கணவனுக்கு நான்கு மனைவிகள் இருக்க அனுமதிக்கின்றனர். அதனால் இப்போது அவன் ஒரு வருடத்திற்கு நான்கு குழந்தைகளை உருவாக்க முடியும். உதாரணமாக முகம்மதுவே ஒன்பது மனைவிகளை வைத்திருந்தார்.

இந்தியாவில் உள்ள ஒரு முகம்மதிய மன்னரான ஹைதராபாத் நிஜாம் ஐநூறு மனைவிகள் வைத்திருந்தார். கிட்டத்தட்ட முகம்மதியர்களை உற்பத்தி செய்யும் ஒரு தொழிற்சாலை. முகம்மதியர்கள் கிறிஸ்துவர்களை விட குறைவாகத்தான் இருக்கிறார்கள். அவர்கள் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்கள். அவர்கள் முதலிடத்திற்கு வர விரும்புகிறார்கள்.

இது எண்ணிக்கை அரசியல். இதில் இல்லாத கடவுளை இழுக்கவேண்டியதில்லை. அவர்கள் கருக்கலைப்பு வாழ்வுக்கு எதிரானது, கருகலைப்பு செய்வதும் பிறப்பு தடுப்பு செய்வதும் தவறு என்று அவர்கள் கூறுகின்றனர். தொடர்ந்து வாக்குவாத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு மனிதனின் உடலியல் புரியவில்லை. ஒவ்வொரு கலவியின் போதும் பத்து லட்சம் உயிர்கள் ஆண் விந்தில் வெளியேற்றப்படுகிறது. அதில் ஒன்றே ஒன்று கூட பிறக்காமல் போகலாம், ஏனெனில் பெண் ஒவ்வொரு முறையும் கர்ப்பமாவதில்லை. ஏதோ ஒரு தடவை ஆணின் ஏதோ ஒரு விந்து குறித்த காலநேரத்திற்குள் பெண்ணின் கர்ப்பமுட்டையை வந்தடைகிறது. அந்த காலநேரம் மிகவும் குறுகியது. வெறும் இரண்டு மணி நேரம்தான் அவற்றின் வாழ்க்கை– அதன் அளவையும் அது ஓடிக் கடக்க வேண்டிய தூரத்தையும் ஒப்பிட்டால் அது இரண்டு மைல் தூரம் ஓட வேண்டி வருகிறது. இரண்டு மைல் தூரம் எந்த வித பயிற்சியும் இல்லாமல் எந்த வித ஒத்திகையும் இன்றி, தகுதி பெறாமல், திறமையை வளர்த்துக் கொள்ளாமல் என்ன நடக்கிறதென்று கூட தெரியாமல் மற்றவர்கள் குதித்து ஓடுவதைப் பார்த்து தானும் ஓடியும் குதித்தும் கடந்து செல்ல வேண்டி வருகிறது. தாங்கள் எங்கு செல்கிறோம் என்று அவற்றிற்குத் தெரியாது, ஏன் போகிறோம் என்று தெரியாது. ஒரு விஷயம் உறுதி, அது அவர்கள் வேகமாக செல்ல வேண்டும், ஏனெனில் மற்றவர்கள் வேகமாக செல்கிறார்கள்.

அதனால்தான் இந்த உலகத்தில் ஏகப்பட்ட முட்டாள்கள் இருக்கிறார்கள், ஏனெனில் புத்திசாலி மக்கள் கூட்டத்தை தவிர்த்து விடுவர். மேலும் புத்திசாலிகள் முதலில் ஏன் என்று கேள்வி கேட்பார்கள். அவர்கள் தெருவோரமாக நின்றுகொண்டு நாம் எதற்காக ஓட வேண்டும் ஏன் ஓட வேண்டும் என்று நினைப்பார்கள். மேலும் புத்திசாலிகள் சிறிது சோம்பேறிகளாக இருப்பார்கள். இந்த போக்குவரத்து நெரிசலை தெருவோரத்தில் நின்று எல்லோரும் போகும் வரை வேடிக்கை பார்த்துவிட்டு பின் என்ன விஷயம் என்று தெரிந்து கொள்வர்.

ஆனால் வாழ்க்கை அவர்களுக்கு இரண்டு மணி நேரம்தான். இரண்டு மணி நேரத்திற்க்குள் அவர்கள் இறந்து போய் விடுவர். அதனால் ஒவ்வொரு கலவியின் போதும் லட்சக்கணக்கான உயிர்கள் இறக்கின்றன. ஒரு ஆண், தனது வாழ்நாளில் பதிநான்கு வயதிலிருந்து ஐம்பது வயது வரை பல தடவை கலவி செய்கிறான். ஒரு ஆணுடைய விந்துக்கள் அனைத்திற்க்கும் வாய்ப்பு கிடைக்குமானால் அவன் ஒருவனே போதும் இந்த உலகம் முழுவதும் இப்போதுள்ள மக்கள் தொகை எண்ணிக்கையை அடைய. ஆனால் பிரச்னை என்னவென்றால் பெண் ஒவ்வொரு மாதமும் ஒரே ஒரு கருமுட்டையைத்தான் விடுவிக்கிறாள்.

பெண் இந்த மனித குலத்திற்க்கே மிகப் பெரிய வரம். அவளும் ஒரு லட்சம் முட்டைகள் ஒவ்வொரு மாதமும் விடுவித்தால், பின் அப்போது இந்த உலகில் எங்கும் இடமே இருக்காது. நீ எப்போதும் கூட்டத்திற்கு இடையேதான் இருப்பாய், உனது படுக்கையறையில் கூட. மாதம் ஒரு முட்டை என்பதே இந்த உலகம் தாங்க முடியாத அளவு இவ்வளவு கூட்டத்தை உருவாக்கியுள்ளது.

கடவுள் எங்கேயும் இல்லை. இல்லாவிடில் ஏன் இந்த முட்டாள்தனம்? நீ எல்லா மடத்தனங்களையும் கணக்கிட்டால் அவை உனக்கு கடவுள் என்று ஒருவர் இல்லை என்ற கருத்தைத்தான் தரும். ஒரு கலவியின் போது லட்சக்கணக்கான விந்துக்கள் விடுவிக்கப்படுவதும் ஒன்றே ஒன்றுதான் அதில் பிறக்கக் கூடிய சாத்தியக்கூறு இருப்பதும் எதற்காக? ஏன் லட்சமோ அல்லது அதற்கு மேலோ உயிர்கள் அதில் இருக்க வேண்டும் ?

கடவுள் ஒன்று முட்டாளாக இருக்க வேண்டும், அல்லது கணக்கு தெரியாதவராக இருக்க வேண்டும்…… அடிப்படையான விஷயங்கள் கூட தெரியாத ஒருவரை மடையன் என்று சொல்வதற்கு பதிலாக ஏனெனில்  இப்படி சொல்வது கண்டனம் செய்வது போல இருப்பதால் இப்படி சொல்வதற்கு பதிலாக அவர் இல்லையென்று சொல்லிவிடலாம். கடவுள் இல்லையென்று சொல்வது அவரிடம் நாம் கருணையோடு இருப்பதாகும். அப்போது நாம் அவரை எல்லாவித மடத்தனத்திலிருந்தும், எல்லா வித குற்றங்களிலிருந்தும் கொலை, கொள்ளை, கற்பழித்தல் போன்ற எல்லாவிதமான செயல்களிலிருந்தும் நாம் அவரை விடுதலை செய்கிறோம், ஏனெனில் இவைதான் அவரது பரிசுகள்.

குருமார்களுக்கு உன் மேல் அக்கறை கிடையாது. அவர்கள் உன்னுடைய விழிப்புணர்வின் மீது அக்கறை படுவதில்லை, ஏனெனில் விழிப்பு பெற்ற மனிதன் இந்த உலகம் ஏற்கனவே அதிக மக்கள் தொகையால் அவதிப் படுவதைப் பார்ப்பான். இந்த உலகத்துக்கு மேலும் அதிக குழந்தைகளை கொண்டு வருவது மேலும் அதிக ஏழ்மையை, பசியை, படிப்பறிவின்மையை, பட்டினியைத்தான் கொண்டுவரும் என அவனுக்கு எடுத்து சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது.

விழிப்புணர்வுடைய மனிதனுக்கு பிறப்பு தடுப்பை உபயோகிப்பதைப் பற்றி  எந்த மாற்றுக் கருத்தும் இருக்காது, அதில் எந்த சந்தேகமும் இல்லை, அதற்கு அவனது விழிப்புணர்வே போதுமானது, அவன் அவனது விழிப்புணர்வு அனுமதிப்பதைத்தான் செய்வான்.

 From Death to Deathlessness Chapter #27                                                                                                          
Osho

Comments