Google

சங்கிலித் தொடராய் புகை பிடிப்பவர் தியான நிலைக்கு வரமுடியுமா? - OSHO



சங்கிலித் தொடராய் புகை பிடிப்பவர் தியான நிலைக்கு வரமுடியுமா? நான் இருபத்தைந்து வருடங்களாகப் புகை பிடித்திருக்கிறேன், புகை பிடிக்கும்போது தியானத்திற்குள் ஆழமாகப் போவது தடை படுவதாக உணர்கிறேன். இருந்தும், என்னால் புகை பிடிப்பதை நிறுத்த முடியவில்லை. இதைப் பற்றி நீங்கள் எதாவது சொல்ல முடியுமா?

           ஓஷோ பதில்: தியானம் செய்கிறவர் புகை பிடிக்க முடியாது. காரணம் சாதாரணமானது. அவருக்கு நரம்பு தளர்ச்சி, எதிர்பார்ப்பு, பதற்றம் இருக்காது.

           புகை பிடித்தல் உதவும் -- தற்காலிகமாக, உங்களுடைய மனக்கவலை, உங்களுடைய பதற்றம், உங்களுடைய நரம்புத் தளர்ச்சியை மறக்க உதவும். மற்றவையும் அதையே செய்ய முடியும்,  சூயிங்கம் அதையே செய்ய முடியும். ஆனால் புகைபிடித்தால்தான் இதில் சிறந்தது.

            உங்களுடைய ஆழ்ந்த உள்ளுணர்வில், புகை பிடித்தல் என்பது தாயிடம் முலைப்பால் குடிப்பதற்குத் தொடர்புடையது. நாகரீகம் வளர்ந்தபோது தாய், குழந்தைகள் தாய்ப்பால் குடித்து வளர்வதை விரும்பவில்லை. நியாயம்தானே!  அதனால் மார்பகங்கள் உருக்குலைந்து விடுமே. மார்பகங்கள் அதன் வட்ட அமைப்பை, அழகை இழந்துவிடும். மார்பகங்கள் வட்டமாக இருந்தால் குழந்தை இறந்துவிடும். மார்பகங்கள் வட்டமாக இருந்தால் பால் குடிக்கும்போது குழந்தையால் சுவாசிக்க முடியாது. குழந்தையின் மூக்கை மார்பகங்கள் தடுக்கும். அதற்கு மூச்சுமுட்டல் வரும்.
   ஓர் ஓவியனின் தேவையை விட, ஒரு கவிஞனின் தேவையை விட, ஒரு மனிதனின் கலை உணர்வின் தேவையை விட ஒரு குழந்தையின் தேவை வித்தியாசமானது. ஒரு குழந்தைக்கு நீண்ட மார்பகங்கள் தேவை. அதனால் அதன் மூக்கு சுதந்திரமாக இருக்கும். அதன் மூலம் அது உண்ணவும் முடியும், அதை அதனால் உணரவும் முடியும். அதனால் ஒவ்வொரு குழந்தையும் தன் தேவைக்கேற்ப அந்த மார்பகங்களைப் பயன்படுத்திக் கொள்ளும். எந்தப் பெண்ணுக்கும் தன் மார்பகங்கள் சீரழிந்து போவது பிடிக்காது. அது அவள் அழகின் ஒரு பகுதி, உடலின், அதன் அமைப்பின் ஒரு பகுதி.    

               நாகரீகம் வளர்ந்தபோது, குழந்தையைத் தாயின் மார்பகத்திலிருந்து விரைவாக, சீக்கிரமாகத் தள்ளி எடுத்துக்கொண்டு போனார்கள். மார்பகத்திலிருந்து குடிக்க வேண்டுமென்கிற ஏக்கம் மனதிற்குள் ஓடிக்கொண்டே இருக்கும். எப்போதெல்லாம் மக்கள் ஒரு வித நரம்பு தளர்ச்சியில் இருக்கும்போதும், ஒரு பதற்றத்தில், ஒரு மனக்கவலையில், இருக்கும் பொது சிகரெட் உதவுகிறது. அது அவர்கள் மீண்டும் ஒரு தாயின் மடியில் ஓய்வெடுத்துக்கொள்ளும் குழந்தையாக உதவுகிறது. அதன் அடையாளம்தான் சிகரெட். அது ஒரு தாயின் முலைக்காம்பைப் போல, உள்ளே போகிற புகையும் கதகதப்பாக இருக்கிறது. பாலைப் போல.  இரண்டிற்கும் ஒரு குறிப்பிட்ட ஒத்திசைவு இருக்கிறது.  அதனால் நீங்கள் அதில் ஈடுபடுகிறீர்கள். அந்தத் தருணத்தில் மனக்கவலையில்லாத பிரச்சனைகள், பொறுப்பில்லாத குழந்தையாகிறீர்கள்.

             நீங்கள் சொல்கிறீர்கள். கடந்த முப்பது வருடங்களாக புகை பிடித்து வருவதாக, ஒரு சங்கிலித் தொடர் புகை பிடிப்பாளர். நீங்கள் அதை நிறுத்த வேண்டும். ஆனால் உங்களால் நிறுத்த முடியவில்லை. உங்களால் முடியாது -- காரணம் அதை உருவாக்கும் காரணத்தை நீங்கள் மாற்றியாக வேண்டும்.
           என்னுடைய பல சந்நியாசிகளிடம் நான் வெற்றி கண்டிருக்கிறேன். முதலில் இந்த யோசனையை சொன்னபோது அவர்கள் சிரித்தார்கள். ஒரு சாதாரண தீர்வு அவர்களுக்கு உதவ முடியும் என்பதை அவர்களால் நம்ப முடியவில்லை. நான் சொன்னேன், "புகை பிடிப்பதை நிறுத்த முயலாதீர்கள், ஆனால் குழந்தைகளுக்குப் பால் கொடுக்கிற சின்ன பாட்டிலைக் கொண்டு வாருங்கள். இரவில் யாரும் உங்களைப் பார்க்காத பொது உங்கள் போர்வைக்கு அடியில் அந்தப் பாலை வைத்துக்கொண்டு ரசித்துக் குடியுங்கள். சூடான பால். குறைந்த பட்சம் அது எந்தத் தீங்கையும் விளைவிக்கப் போவதில்லை.

          அவர்கள் சொன்னார்கள், "ஆனால் அது எப்படி உதவப்போகிறது? "

           நான் சொன்னேன், "எப்படி, ஏன் என்பதையெல்லாம் மறந்து விடுங்கள் -- நீங்கள் செய்யுங்கள். அது தூங்கபோவதற்கு முன்பு உங்களுக்கு சிறந்த உணவாக இருக்கும். அதில் எந்தத் தவறும் இல்லை. என்னுடைய எண்ணமெல்லாம் அடுத்த நாள் உங்களுக்கு சிகரெட் அவ்வளவு தேவையாக இருக்காது. அதனால் எண்ணிப்பாருங்கள்". அவர்கள் வியந்து போனார்கள். மெதுவாக, மெதுவாக, சிகரெட் காணாமல் போய்க் கொண்டிருந்தது. காரணம் நடுவில் தொங்கிக் கொண்டிருந்த அவர்களது அடிப்படைத் தேவைகள் நிறைவேறிவிட்டன. அவர்கள்  இனி குழந்தைகளில்லை. அவர்கள் வளருகிறார்கள், சிகரெட் காணாமல் போகிறது. அதை உங்களால் நிறுத்த முடியாது. தீங்கில்லாத ஏதாவது ஒன்றை நீங்கள் செய்தாக  வேண்டும். அது ஆரோக்கியமானதாக, இப்போதைக்கு ஒரு மாற்றாகவும் இருக்கும். சிகரெட் தானாகவே நின்று விடும்.
        சின்னக் குழந்தைகளுக்கு இது தெரியும். நான் இந்த ரகசியத்தை அவர்களிடம்தான் கற்றுக்கொண்டேன். ஒரு குழந்தை அழுதாலோ, கண்ணீர் விட்டாலோ, பசியிலிருந்தாலோ -- தாய் எங்கோ இருக்கிறாள், உடனே அது கட்டை விரலை வாயில் போட்டுக் கொள்ளும்; அதை உறிஞ்ச ஆரம்பிக்கும். அதற்கு பசியும், அழுகையும், கண்ணீரும் மறந்து போகும். அப்படியே அயர்ந்து தூங்கிவிடும். அது ஒரு மாற்றைக் கண்டுபிடித்துவிட்டது. அந்த மாற்று அதற்கு உணவை கொடுக்கப் போவதில்லை. குறைந்த பட்சம் அதற்கு இணையாக ஒன்று நடக்கிறதே என்கிற உணர்வில் அது ஓய்வெடுக்கிறது. இதை நான் என்னுடைய சில சந்நியாசிகளுக்குத்  தெரிவித்தேன். விரலைக் கூட சூப்பச் சொன்னேன். ஒரு பாட்டிலைக் கொண்டு வந்து அதில் பாலை நிரப்ப பயமாக இருந்தால், உங்கள் மனைவி பார்த்துவிடலாம். குழந்தைகள் பார்த்து விடலாம், அப்படியானால் வாயில் விரலைப் போட்டுக்கொண்டு தூங்குவதுதான் சிறந்த வழி. உறிஞ்சுங்கள், அதை ரசியுங்கள்.

             இதைக் கேட்டுச் சிரித்திருக்கிறார்கள், ஆனால் எப்போதுமே திரும்பி வந்து சொல்வார்கள், " அது உதவுகிறது, அடுத்த நாள் சிகரெட்டின் எண்ணிக்கை குறைந்துவிட்டது, அது இன்னும் குறையப்போகிறது. "சில வாரங்களெடுக்கலாம். பிறகு சிகரெட் காணாமல் போகும்.
--ஓஷோ --
(மருத்துவத்திலிருந்து மனமற்ற நிலை)
-OSHO_Tamil

Comments