Google

ஏற்பதும் மறுப்பதும் உங்கள் விருப்பம் - BUDDHA



ஏற்பதும் மறுப்பதும் உங்கள் விருப்பம்
===================================
ஒருநாள் கௌதம புத்தர் பிக்சைக்கு சென்று கொண்டிருந்த நேரத்தில் அவர் உபதேசங்களில் உடன்பாடில்லாத ஒருவன் அவரைக் கண்டபடி ஏசினான். அவன் திட்டத் திட்டப் புன்னகை மாறாமல் புத்தர் சென்று கொண்டிருந்தார்.
பின்னாலேயே வந்து திட்டி ஓயந்தவனுக்கு அவர் புன்னகை சகிக்க முடியாததாகவும் வியப்பைத் தருவதாகவும் இருந்தது. என்ன மனிதனிவர் என்று வியந்தவன் "ஏனய்யா இத்தனை நான் திட்டியும் கொஞ்சமும் சூடு சுரணை இல்லாத ஆளாய் இருக்கிறாயே?" என்று கேட்டான்.
கௌதமர் அமைதியாகக் கேட்டார். "ஐயா, ஒரு பொருளை ஒருவர் மற்றவருக்குக் கொடுக்கையில் அவர் வாங்கிக் கொள்ள மறுத்தால் அப்பொருள் யாருக்குச் சொந்தம்?"
"கொடுக்க முயன்றவருக்குத் தான் சொந்தம். இதிலென்ன சந்தேகம்?" என்றான் அவரைத் திட்டியவன்.
"ஐயா. அது போல நான் தாங்கள் வழங்கிய ஏச்சுக்களை ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே அதெல்லாம் தங்களுக்கே" என்று சொல்லிய கௌதமர் புன்னகை மாறாமல் அங்கிருந்து நகர, அவரைத் திட்டியவன் பேச்சிழந்து நின்றான்.
மற்றவர்கள் தருவதை எல்லாம் நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும் என்ற கட்டாயமில்லை.
ஒவ்வொருவர் கருத்துக்கும் பதில் சொல்ல வேண்டுமென்ற அவசியமில்லை.
எதையும் ஏற்றுக் கொள்வதும், ஏற்க மறுப்பதும் நம் விருப்பப்படி இருக்க வேண்டும்.
ஏற்றுக் கொள்ளாதது புத்தர் கூறியது போல நம்முடையதாகாது. ஆனால் பொதுவில் நம்மில் பெரும்பாலானோர் மற்றவர் தருவதை எல்லாம் ஏற்றுக் கொண்டு கோபமோ, வருத்தமோ பட்டு, புலம்பி, பதில் என்ற பெயரில் என்னென்னவோ சொல்லி வருந்தி, மற்றவர்களையும் வருத்தி செய்யும் அனர்த்தங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
நம்மையும் அறியாமல் நாம் அடுத்தவர் கைப்பாவை ஆகி விடுகிறோம் என்பதை விலகி நின்று பார்த்தால் நம்மால் உணர முடியும். இதை நாம் அனுமதிக்கக் கூடாது.
ஒருவர் கூறுவதில் உண்மை உள்ளதா என்று மட்டும் சிந்தித்து உண்மை இருந்தால் ஏற்றுக் கொண்டு நம்மை சரி செய்து கொள்வதே புத்திசாலித்தனம்.
உண்மையில்லாதவற்றை ஏற்றுக் கொள்ள மறுத்து புத்தரைப் போல புன்னகை செய்து நகர்வதே தக்க பதில்.
இப்படிச் செய்யப் பழகிக் கொள்ளுங்கள். இது இயல்பாக உங்களுக்கு முடியும் போது மற்றவர்கள் மதிப்பில் உயர்வீர்கள். தேவையில்லாத சண்டை சச்சரவுகளைத் தவிர்ப்பீர்கள். மன அமைதி அடைவீர்கள்.
- Buddha _ Tamil

Comments