சும்மா இரு என்றால் எப்படி இருப்பது ?
சும்மா இரு என்றால் எப்படி இருப்பது ? எதுவுமே பேசாமல், செய்யாமல் சும்மாவே இருந்தால், அது சோம்பேறித்தனமாகி விடாதா ? என்பது தோழியின் கேள்வி. உண்மைதானே ! சும்மா இருந்தால் சோறு எப்படி கிடைக்கும் ? ஆனால், இது சரியான புரிதல் இல்லாததால் எழுகின்ற கேள்விதான். தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைக்காமல், மரத்திற்கு மரம் தாவும் குரங்கைப் போல மனதை தாவ விடாமல், தேவைப்பட்டால் ஒழிய பேசாமல் இருப்பதுதான் சும்மா இருப்பது. எண்ணம், சொல், செயல் மூன்றிலும் அடக்கத்தை கடைபிடிப்பதைத்தான் அவ்வாறு குறிப்பிடுகிறார்கள். தாயானவர் பிள்ளையை கண்டிக்கிறார். அது ஓ...வென்று அழுகிறது. உடனே அந்தத் தாய் ''சத்தம் ! மூச்! மூச்சு விடக் கூடாது !'' என்று குச்சியை கையில் வைத்துக் கொண்டு கண்களை உருட்டுகிறார். பிள்ளை வையைப் பொத்திக் கொண்டு மிரள மிரள விழித்தபடி உட்கார்ந்திருக்கிறது. அம்மா மூச்சு விடாதே என்று சொன்னார்களே என்று மூச்சு விடாமல் போனால் என் ஆகும் ?
அது போலத்தான் இதுவும். அருணகிரி நாதரைப் பார்த்து முருகப் பெருமான் சொன்னார். தாயுமானவரைப் பார்த்து அவருடைய குரு சொன்னார். சும்மா இரு!!
பிறர் விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் இருப்பதுவும் கூட சும்மா இருப்பதுதான். இரண்டு பேருக்கான பிரச்சனையில் நாம் தலையிடும் பொழுது, அது யாரேனும் ஒருவருக்குதான் சாதகமாக அமையும். நாம் நமக்கு எது நியாயம் என்று படுகிறதோ அதைச் சார்ந்து நின்று பேசுவோம். ஆனால், கூர்ந்து கவனித்தால் அவர்கள் இருவருமே தங்கள் தரப்பில் ஆளுக்கொரு நியாயத்தை வைத்திருப்பார்கள். ஒருவருக்கு நன்மை செய்யப் புகுந்தால் அது வேறொருவருக்கு துன்பமாகப் போய் விடுகிறது. இது போல பல சிக்கல்கள் இருக்கின்றன.
யோகி என்ற நிலையில் எண்ணங்களை அடக்கி, மௌனமாக ஒரு இடத்தில் அமர்ந்திருப்பதில் அவர்களுக்கு எந்தப் பிரச்சனையுமில்லை. ஆனால், ஒரு சராசரி மனிதன் என்ற நிலையில் அவ்வாறெல்லாம் இருக்க முடியாது. எனவே நாம் செய்ய வேண்டியதெல்லாம். எண்ணங்களைக் கட்டுப்படுத்துவது ! தேவைப்பட்டால் மட்டும் பேசுவது! தேவையற்ற வீணான செயல்களைச் செய்யாமல் இருப்பது ! இந்த மூன்றும்தான். ஒரு சராசரி மனிதன் என்ற நிலையில் தேவைக்கு மட்டும் இந்த மூன்றையும் பயன்படுத்துவதே சும்மாயிருப்பது. வீணான செயல்கள் என்று பல இருக்கின்றன. குறிப்பாக கால்களை ஆட்டுவது, கைகளை ஆட்டிக் கொண்டேயிருப்பது, மூக்கை குடைவது, காதைக் குடைவது, மண்ணைக் கிளறிக் கொண்டேயிருப்பது இப்படிப்பட்ட வீணான செயல்களைச் சிலர் செய்து கொண்டேயிருப்பார்கள். இது வீணான செயல்கள்தான்.
இனி ஒரு காரியத்தை செய்ய ஆரம்பிக்கும் முன்பே அது தேவையா ? தேவையில்லையா ? என்று யோசித்துப் பார்த்து, தேவைப்பட்டால் மட்டுமே செய்ய வேண்டும். சும்மாதானே இருக்கிறோம் என்று சொல்லி எதையாவது செய்து கொண்டே இருந்தால் உயிராற்றல் விரையம்தான் ஏற்படும். ஆன்மீக உலக வாழ்க்கையில் நாட்டமுடையவர்கள் இத்தகைய கட்டுப்பாடுகளைக் கடைபிடிப்பதே சும்மாயிருப்பது. சும்மாயிருப்பவருடைய மனமானது சலனமற்று அமைதியுடன் விளங்கும். இதனால் புத்தித் தெளிவு ஏற்படும். எடுக்கிற முடிவுகள், செய்கிற காரியங்கள் அனைத்தும் சிறக்கும். மனம் அலையில்லாத கடல் போல அமைதியில் ஆனந்தத்தில் திளைத்து நிற்கும்.
எனவே தேவைக்கு அதிகமாகப் பேசாமல் இருப்பது, தேவையற்ற செயல்களைச் செய்யாமலிருப்பது, தேவைக்கு அதிகமாகப் பொருட்களை தன்னிடத்தில் சேர்த்து வைத்துக் கொள்ளாமலிருப்பது இவைகளை ஒருவர் கடைபிடித்தால் போதும், அதுதான் உலகாயத்தைப் பொருத்த வரை சும்மாயிருப்பது.
Comments
Post a Comment