மனநிலை நிர்வாகம்- ஒன்பதாம் மேகம் - OSHO
6.7. ஆன்மாவிற்கு ஒரு மருந்தகம்”.
அத்தியாயம் – 6- மனநிலை நிர்வாகம்
பகுதி7- ஒன்பதாம் மேகம்.
.
பரவசம் என்பது ஒளிமயமானது, அது ஒரு மேகத்தைப்போல, வர்ணிக்க முடியாதது, தொடர்ந்து மாறுவது: அது தாற்காலிகமானதுமல்ல, நிரந்தரமானதுமல்ல. அது அழியாதது. ஆனால் அது இறந்தவை அல்ல: அது மிக, மிக உயிரோட்டமானது. அதுவே வாழ்க்கை. அது தேக்கமல்ல; துடிப்பானது. அது மாறிக்கொண்டேயிருக்கிறது. அதுதான் பரவசத்தின் முரண். அது அழியாதது ஆனாலும் மாறிக்கொண்டேயிருக்கிறது. ஒவ்வொரு தருணமும் புதிது, இருந்தாலும் அது எப்போதும் பழையது. ஒருவகையில், அது அப்படித்தான் இருந்திருக்கிறது. ஒருவகையில், ஒவ்வொரு தருணமும் நீங்கள் பரவசமும், உற்சாகமும் அடைவீர்கள். ஒவ்வொரு தருணமும் நீங்கள் அதனால் வியந்து போவீர்கள். அதனால் அது மிகவும் ஒளிமயமானது, அதனால் அதை அந்த தருணத்திற்கானது, அல்லது நிரந்தரமானது என்று வகைப்படுத்த முடியாது.
.
இந்த பரவசமேகம் உங்களைச் சுற்றி இருப்பதாக உணர ஆரம்பியுங்கள்.
.
அமைதியாக அமர்ந்தபடி, ஒருமேகம் உங்களைச் சூழ்வதாக உணருங்கள். அந்தமேகத்தில் ஓய்வாக இருங்கள், பிறகு சிலநாட்களில் அது உண்மையானது என்கிற உணர்வு உங்களுக்கு வரும்…..காரணம் அது இருக்கிறது: நீங்கள் இதுவரையில் அது இருப்பதை உணரவில்லை. அது இருக்கிறது. எல்லாருமே பரவசத்தில் வாழ்கிறார்கள் … அதை ஒருவர் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும், அவ்வளவுதான். நாம் அதனுடன் பிறந்திருக்கிறோம். அது நமது ஹரா. அது நமது உள்ளார்ந்த இயல்பு. அது நமது கூடப்பிறந்த குணம். சிலசமயங்களில், ஓய்வாக அமர்ந்து நீங்கள் உங்களை சுற்றியுள்ள அந்த ஒளிமேகத்தில் நீங்கள் உங்களை இழப்பதாக உணருங்கள். தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கிறது, இருப்பினும் அது உங்களுடனேயே இருக்கிறது.
.
நீங்கள் உங்களை இழக்கத் துவங்கியவுடன் நீங்கள் மேலும் மேலும் பரவசமாக இருப்பதாக உணர்வீர்கள். சில அபூர்வமான தருணங்களில் நீங்கள் முற்றிலுமாக தொலைந்து போவீர்கள், அந்த மேகம் இருக்கும், ஆனால், நீங்கள் இருக்கமாட்டீர்கள். அந்த தருணங்கள்தான் சடோரி அல்லது சமாதி எனப்படுபவை. அதுதான் முதல்தரிசனம், அது தொலைதூரத்திலிருந்து பார்க்கும்பார்வை தான், ஆனாலும் அது உண்மையின் தரிசனம்.
.
ஒருமுறை விதை விழுந்துவிட்டால், மரம் வந்தே தீரும்.
.
அதை கற்பனை செய்யுங்கள் !
.
உங்களுக்கு ஒரு கற்பனை வலு இருந்தால், நீங்கள் அந்த திறனை தொடர்ந்து உணர்வோடு பயன்படுத்தினால், அது அளவற்ற உதவி புரியும். நீங்கள் உணர்வோடு அதை பயன்படுத்தாவிட்டால், அதுவே ஒரு தடையாக மாறும். ஒருவருக்கு ஏதாவது திறன் இருந்தால், அதை அவர் பயன்படுத்தவேண்டும். இல்லையென்றால் அது பாதையில் இருக்கும் கல்லைப்போல ஆகிவிடும். ஒருவர் அதில் ஏறி, அதையே ஏறுவதற்கான முதல்படியாக மாற்றவேண்டும்.
.
மூன்று விஷயங்களை செய்ய துவங்குங்கள்.
.
முதல் விஷயம்: நீங்கள் எவ்வளவுதூரம் முடியுமோ அந்தஅளவிற்கு சந்தோஷமாக இருப்பதாக கற்பனை செய்யுங்கள். ஒரு வாரத்திற்குள் எந்தக் காரணமுமே இல்லாமல் நீங்கள் சந்தோஷமாக இருப்பதாக உங்களுக்கு ஒரு உணர்வு வரத்துவங்கும். உள்ளே அழுந்திக்கிடந்த உங்கள் திறனுக்கு அதுதான் ஆதாரம். ஆகவே காலையில் முதல்வேலையாக நீங்கள் அளவு கடந்த மகிழ்ச்சியில் இருப்பதாக கற்பனை செய்துகொள்ளுங்கள்.
.
படுக்கையைவிட்டு சந்தோஷமான மனநிலையில் - களிப்போடு, பொங்கி எழுபவனாய், ஏதோசரியான, எல்லையற்ற மதிப்பான ஒரு விஷயம், அன்றைக்குத்தான் நிகழப்போகிறது என்ற எதிர்பார்ப்போடு எழுந்திருங்கள். படுக்கையைவிட்டு, எதிர்கால நம்பிக்கையுடனான மனநிலையில் எழுந்திருங்கள், இந்தநாள் ஒரு சாதாரண தினமாக இருக்கப்போவதில்லை என்கிற எண்ணத்தோடு –ஏதோ தனித்தன்மையாக, அசாதாரணமானது உங்களுக்காக காத்திருப்பதைப்போல, ஏதோஒன்று அருகிலிருப்பதைப் போல ஆக்கப் பூர்வமான எண்ணத்தோடு எழுந்திருங்கள். மறுபடியும் மறுபடியும் அந்த முழுநாளும் இதையே நினைவில் வைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். ஏழு நாட்களுக்குள் உங்கள் முழுபாணியும், உங்கள் போக்கு, உங்கள் அதிர்வுகள் ஆகிய அனைத்தும் மாறியுள்ளதை நீங்கள் பார்ப்பீர்கள்.
.
இரண்டாவது விஷயம் : நீங்கள் தூங்கப் போகும்போது, நீங்கள் கடவுளின் கைகளில் விழுவதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். பிரபஞ்சம் உங்களுக்கு உதவி புரிவது போல, நீங்கள் அதன் மடியில் விழுந்து தூங்குவதைப்போல நினைத்துப்பார்த்தபடி உறங்கச் செல்லுங்கள். இந்தகற்பனையை தொடர்ந்து செய்தபடி, தூங்க செல்லவேண்டும். அப்போதுதான் கற்பனை உங்கள் தூக்கத்திற்குள் நுழையும், அவை ஒன்றின் மீது ஒன்று பதியும். இதுதான் இரண்டாவதுவிஷயம்.
.
மூன்றாவதுவிஷயம் : எந்த எதிர்மறையான விஷயத்தையும் கற்பனை செய்யாதீர்கள், காரணம் கற்பனைவளம் உள்ள மக்கள் எதிர்மறையான விஷயங்களையே கற்பனை செய்வார்கள், அது நடக்கத் துவங்கும். நீங்கள் நோய்வாய்படப் போவதாக நினைத்தால், நீங்கள் நோய்வாய்ப்படுவீர்கள். யாரோ வரப்போகிறார், அவர் உங்களிடம் கடுமையாக இருக்கப்போவதாக நினைத்தால், அவர் அப்படித்தான் இருப்பார். உங்களுடைய கற்பனையே அந்தச்சூழலை உருவாக்கும்.
.
முதலில் காலையிலும், இரவிலும் கற்பனை செய்ய ஆரம்பியுங்கள். எந்த எதிர்மறையான கற்பனையும் செய்வதில்லை என்பதையும் அந்தநாள் முழுவதும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அது போல யோசனை வந்தால், அதை உடனடியாக ஆக்கபூர்வமான விஷயமாக மாற்றுங்கள். எதிர்மறையை அணுக விடாதீர்கள். அதை உடனடியாக கீழே விட்டுவிடுங்கள், அதை தூக்கியெறிந்து விடுங்கள்.
.
-தொடரும்.
-OSHO_Tamil
Comments
Post a Comment