Google

****#கேள்வி பதில்கள்#***(Tantra) - ஓஷோ



***#ஓஷோ#***
****#கேள்வி பதில்கள்#***
#கேள்வி : ஓஷோ , பழங்காலம்தொட்டே எல்லா சமூகத்தினரிடமும் புனிதம் என்ற பெயரில் பாலுணர்வு தடுக்கப்பட்டிருக்கிறது . ஆனால் நீங்கள் மட்டும் இது மாபெரும் தவறு என்று கூறுகிறீர்கள் . அந்த காலம் தொட்டு இக்காலம் வரை இந்தப் பாலுணர்வு விஷயம் குழப்பமாகவே இருக்கிறது . அதைத் தள்ளவும் முடியவில்லை , மனதார ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை . இந்த மனிதகுலத்தின் முக்கியமான விஷயம் ஏன் இப்படி குழப்பத்தில் இருக்கிறது ?
#பதில் : " மனிதர்களிடம் உள்ள உணர்வுகளிலிலேயே மிகவும் சக்திவாய்ந்த உணர்வு பாலுணர்வுதான் ! இந்த உணர்வை ஆரம்பம் முதலே மதவாதிகளும் , அரசியல்வாதிகளும் மறைக்கவும் தடுக்கவும் மிகவும் முயன்றிருக்கிறார்கள் . சுதந்திரமான பாலுணர்வில் இருக்கும் மனிதனை அடக்க முடியாது , அடிமைப்படுத்த முடியாது என்பதை அவர்கள் நன்றாகப் புரிந்து வைத்திருந்தார்கள் .

உங்களுக்கு மிகவும் தெரிந்த விஷயத்தைச் சொல்லுகிறேன் . ஒரு காளையை ( Bull ) வண்டி இழுக்கப் பயன்படுத்த வேண்டுமானால் , நீங்கள் அதை காய் அடிக்கிறீர்கள் . இப்படியாக அதனுடைய பாலுணர்வு சக்தியை அழிக்கிறீர்கள் . நீங்கள் இயல்பான காளையையும் ( OX ) காயடிக்கப்பட்ட காளையையும் பார்த்திருக்கிறீர்களா ? இரண்டுக்கும் எவ்வளவு வித்தியாசம் ? காயடிக்கப்பட்டது ஒரு அடிமையைப்போல இருக்கும் . ஒரு இயல்பான காளை எவ்வளவு அழகாக கம்பீரமாக இருக்கும் !

மனிதர்களை இப்படி காயடிக்க முடியாது ! அதற்குப் பதிலாக குற்ற உணர்வும் , பாலுணர்வை அடக்குதலும் கற்பிக்கப்பட்டிருக்கிறது ! இது கிட்டத்தட்ட காயடிப்பதற்குச் சமம்தான் . இந்த முடமாக்கப்பட்ட மனிதர்களை அடிமையாக்குவது எளிது , உங்களால் ஏன் இயல்பான காளையை பழக்கப்படுத்த முடியவில்லை ? இயல்பான காளை மிகவும் சக்திவாய்ந்தது . அது ஒரு பசுவைப் பார்த்தால் , உடனே அது உங்கள் வண்டியையும் , உங்களையும் உதறிவிட்டு அதன் பின்னால் ஓடும் ! அப்பொழுது அது உங்கள் கட்டளையை ஒருக்காலும் மதிக்காது !
பாலுணர்வு சக்தி என்பது வாழ்வு சக்தி . அதை அடக்கி முழுமையாக வெற்றி கொள்ள முடியாது . ஆகவே , அவனை ( மனிதர்களை ) முடமாக்க அவர்கள் ஐந்து தந்திரங்களைக் கையாண்டிருக்கிறார்கள் !

#முதல் தந்திரம் : நீங்கள் ஒருவனை அதிகாரம் செய்ய விரும்பினால் அவனை சக்தியற்றவனாக இருக்கச் செய்ய வேண்டும் . அதில் ஒருவழி , அவன் காதலிக்க முழுமையான சுதந்திரத்தை அளிக்காமல் இருந்தால் போதும் . அன்பும் , காதலும்தான் அவனுடைய சக்தியை வளர்க்கிறது . ஆகவே ஜாதியை மையமாக வைத்து , காதலை அழிக்கிறது . இது சரிதான் என்று இப்பொழுது மனநல வைத்தியர்கள் ஒப்புக்கொள்கிறார்கள் .

அடுத்து அன்பு , நீங்கள் ஒரு குழந்தையிடம் அன்பு செலுத்தாவிட்டால் , அது மெல்ல மெல்ல சுருங்கி , சக்தியற்றதாகிவிடுகிறது . நீங்கள் என்ன சத்துள்ள உணவு கொடுத்தாலும் பிரயோஜனமில்லை . அதற்கு அன்புதான் டானிக் ....அதை அன்போடு கொஞ்சி , முத்தம் கொடுத்து , உங்களுடைய உடல் கதகதப்பை அதற்கு உணரச்செய்தால் , அது ஏழையாக இருந்தாலும் மிக வலுவாக வளரும்.
         ஆண் , பெண் உடலும் , மனமும் 14 வயது காலகட்டத்திலேயே உடலுறவுக்குத் தயாராகி வருகிறது . ஆனால் சமூகத்தில் மதிப்புடன் வாழ பணம் தேவையாக இருக்கிறது . பணம் சம்பாதிக்க படிப்பு தேவையாக இருக்கிறது . இதனால் சுமார் 10 , 20 , 25 வருடம் என்று ஆண் , பெண் உடலுறவைத் தள்ளிப்போட வேண்டியதாகிறது . இப்பொழுது பாலுணர்வு சக்தி படிப்பில் பாய்கிறது . காதலிப்பது தடைபடுகிறது .

கிட்டத்தட்ட 18 வயதில்தான் பாலுணர்வு தன் உச்சத்தில் இருக்கிறது . ஆனால் சமூகம் இந்த வயதில் உடலுறவில் ஈடுபட ஒருக்காலும் அனுமதிப்பது இல்லை . பெண்களையும் , ஆண்களையும் பிரித்தே வைக்கிறோம் . இதற்கு காவலர்கள் , கல்வி மேலாளர்கள் , பெற்றோர்கள்தான் காரணம் . மொத்தத்தில் அவர்கள் காயடிக்கப்பட்ட எருதுவாக மாற்றப்படுகிறார்கள் !

எந்த அளவுக்கு ஒரு நாடு நாகரீகம் மிக்கதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு நீங்கள் காத்திருக்க வேண்டும் . இந்த கம்ப்யூட்டர் உலகத்தில் அப்பொழுதுதான் உங்களால் சம்பாதிக்க முடியும் . ஆனால் அப்பொழுது உங்களுடைய பாலுணர்வு சக்தி இறங்கு முகத்தில் இருக்கும் . நீங்கள் அப்பொழுது காதல் செய்யலாம் . ஆனால் அது அவ்வளவு உணர்ச்சிகரமாக ( கதகதப்பாக ) இருக்காது .

#இரண்டாவது தந்திரம் : ஒருவனை எந்த அளவுக்கு அறியாமையிலும் மயக்க நிலையிலும் வைக்க முடியுமோ அந்த அளவுக்கு மயக்க நிலையில் வைத்திருப்பது . அப்பொழுதான் , அவர்களை நன்றாக ஏமாற்ற முடியும் . உங்களுடைய கொள்கைகளையும் , கோட்பாடுகளையும் மற்றும் ஏமாற்று வேலைகளையும் அவர்களிடம் திணிக்க வேண்டுமானால் அவர்கள் தீவிரமான காதலில் விழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் . ஒருவனுடைய அறிவுக்கூர்மைக்கு இந்தக் காதல் உணர்வு மற்றும் பாலுணர்வுதான் காரணம் .

நீங்கள் கவனித்திருக்கிறீர்களா ? ஒருவனுடைய காதல் உணர்வில் , அவனுடைய திறமை , அறிவுக்கூர்மை எல்லாம் உச்சத்தில் இருக்கும் ! ஏனென்றால் காதலியை வசீகரிக்க வேண்டுமல்லவா ! நீங்கள் அப்பொழுது ஒரு உயிரோட்டமுள்ள சுடர்போல பிரகாசிப்பீர்கள் .

திறமையானவர்கள் , அறிவுக்கூர்மை உள்ளவர்கள் அனைவரும் மிகவும் பாலுணர்வு கொண்டவர்களாகவே இருப்பார்கள் . அதைப்போல ஒரு பெண் காதல் உணர்வில் இருந்தால் அவள் முகத்தில் என்ன பூரிப்பு , என்ன அழகு ! அதைப்போல ஒரு செடி , ஒரு விலங்கு , ஒரு மரம் , பாலுணர்வு சக்தி மிகும்பொழுது எப்படி பூத்துக் குலுங்குகிறது , என்ன அழகு ! சுருக்கமாகச் சொன்னால் இயற்கை , இந்த உலகத்தை பாலுணர்வு சக்தியால்தான் ஆட்டிப்படைக்கிறது ! அது இல்லாவிட்டால் , இந்த உலகம் எப்பொழுதோ பாலைவனமாக மாறியிருக்கும் .

நீங்கள் காதல் உணர்வில் இருக்கும்பொழுது , சொர்க்கம் இங்கே இப்பொழுது இருக்கிறது . பின்பு எதற்காக நீங்கள் பாதிரியார்களிடம் போகவேண்டும் ? அதற்கு என்ன அவசியம் ? உங்களுடைய பாலுணர்வு சக்தி அடைக்கப்பட்டால் , குறைக்கப்பட்டால் , அப்பொழுது அதைத்தேடி , பாதிரிமார்களிடம் செல்லத்தான் வேண்டும் . அப்பொழுது அவர் , " அதோ , அங்கே இருக்கிறது பாருங்கள் ! " என்பார் .
#மூன்றாவது தந்திரம் : எப்பொழுதும் ஒருவனை ஒருவித பயத்திலேயே வைத்திருக்க வேண்டும் . அதற்கும் காதலை அழிக்கத்தான் வேண்டும் . அதற்கு ஜாதியை வைத்து மிரட்டுவது , பொருளாதார உதவியைத் தடுப்பது எப்படியோ காதலை அழிக்க வேண்டும் . அதுதான் எல்லா சுயசிந்தனைகளுக்கும் தைரியம் , ஊக்கம் , செயல்திறன் எல்லாவற்றிற்கும் காரணம் . இதை எல்லா பழைய மதங்களும் புரிந்தே வந்திருக்கின்றன .

இந்தியாவில் ஒருவருடைய மகள் , காதல் வயப்பட்டு ஒருவரோடு சென்றுவிட்டாள் என்றால் , அந்தக் குடும்பமே தூக்குப் போட்டுக்கொண்டுவிடும் . அப்படி இல்லாவிட்டால் , சமூகம் அவர்களை ஒதுக்கி வைக்கும் . இப்பொழுது இது இன்னும் கிராமங்களில் அப்படியேதான் இருக்கிறது .

நீங்கள் காதலின் உச்சத்தில் இருக்கும்பொழுது உங்களால் எத்தனை பேரை வேண்டுமானாலும் சமாளிக்க முடியும் . அவ்வளவு வீரம் எங்கிருந்து வருகிறது ? அந்தக் காதல் அன்பிலிருந்து வந்ததுதான் ! தன் குழந்தையை ஒருவன் தீங்கு செய்யும்பொழுது , ஒரு தாய்க்கு எப்படி வீரம் வருகிறது ? தாய்க் கோழியை கவனித்திருக்கிறீர்களா ? அது பருந்து அளவுக்குப் பறந்து அதனிடமிருந்து தன் குஞ்சுகளைக் காப்பாற்ற முயலும் ! இதற்குப் பெயர்தான் பரிபூரண அன்பு என்பது . இது காதலின் உச்சத்தில் ஏற்படும் . அன்புக்கு ஒருநாளும் அணைபோட முடியாது . இதைப் புரிந்துகொண்டு , இதை ஆரம்பத்திலேயே கிள்ளி எடுக்க எல்லா மதங்களும் வரிந்துகட்டிக்கொண்டு வேலை செய்தன .

#நான்காவது தந்திரம் : மனிதனை எவ்வளவு தூரம் துன்பத்தில் வைத்திருக்க வேண்டுமோ அவ்வளவு தூரம் துன்பத்தில் வைத்திருத்தல் . இந்த நிலையில் இருக்கும் ஒருவனால் , உறுதியாக எதையும் சிந்திக்க முடியாது . தன்னம்பிக்கை இழந்து தன்னிடமே குற்றம் காணுபவனாக இருப்பான் . ' தான் செய்த பாபம்தான் ' என்ற ஒருவித குற்ற உணர்வில் எப்பொழுதும் இருப்பான் . அவனுடைய தைரியம் எல்லாம் வடிந்து , எதைக்கண்டாலும் பய உணர்வில் இருப்பான் . உங்கள் உத்தரவுக்கு எப்பொழுதும் அடிபணியத் தயாராக இருப்பான் .

இவனை உங்கள் இஷ்டப்படி ஆட்டி வைக்கலாம் . இவன் ஒரு சுத்தமான காயடிக்கப்பட்ட எருதுதான் !

#ஐந்தாவது தந்திரம் : எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு மக்களைப் பிரித்து வைப்பது . மனுவுக்கு இதில் பெரும்பங்கு இருக்கிறது . இப்படி இதில் இவர் வெற்றி கண்டது மிகவும் மகத்தானது ! இதற்காகவே இவனுக்கு ஒரு நோபல் பரிசு கொடுக்கலாம் ! ஹிந்து மதத்தில் உள்ள ஜாதி வேற்றுமைகளைப் போல வேறு எந்த மதத்திலும் காண முடியாது ! தீண்டத்தகாத கடைசிநிலையில் உள்ள சூத்திரர்களிடமும் எத்தனை பிரிவுகள் !

நீங்கள் கவனித்திருக்கிறீர்களா ? இரண்டு ஆண்கள் கைகளைக் கோர்த்துக்கொண்டு வீதியில் இயல்பாகச் சென்றால் அவர்களிடம் ஒரு குற்ற உணர்வு தானே கிளம்பும் ! எப்படி என்றால் , தங்களைப் பிறர் ஓரினச்சேர்க்கையாளர்கள் என நினைத்துவிடுவார்களோ என்ற அச்சம் காரணமாக !

ஆகவே , கிட்டத்தட்ட உங்களுடைய சகல பிரச்சனைகளுக்கும் பாலுணர்வு சக்திதான் காரணம் ! ஆனால் , பாலுணர்வு பிரச்சனையைத் தீர்ப்பது அவ்வளவு சுலபமல்ல . அதன் வரலாறு ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முந்தியது ! மனிதகுல பிரக்ஞையற்ற தன்மையில் அது மிக ஆழமாகப் பதிந்துவிட்டது . அதற்குத் திறமையான - நுட்பமான முறை ஒன்று தேவையாக இருக்கிறது . அதுதான் தந்திராமுறை . இதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முயலுங்கள் " ......

- OSHO_Tamil

Comments