ஓஷோவின் சுவாசத்தை கவனித்தல் தியானம்
ஓஷோவின்
சுவாசத்தை கவனித்தல் தியானம்
எப்போது – நீ அமைதியாக அமர்ந்திருக்கக் கூடிய எல்லா நேரங்களிலும், ரயிலிலோ, பஸ்ஸிலோ, விமானத்திலோ பயணம் செல்லும் சமயத்தில்..
காலம் – 2 நிமிடங்கள் முதல் எவ்வளவு நேரம் நீ செய்ய விரும்புகிறாயோ அது வரை.
முதல் படி – உனது கண்களை மூடி உனது சுவாசத்தை கவனி. உள்ளே செல்லும்போது நீயும் அதனுடன் உள்ளே செல், வெளியே வரும்போது நீயும் அதனுடன் வெளியே வா.
நீ சுவாசத்துடன் உள்ளே சென்று பின் அதனுடன் வெளியே வருவது என்பது போன்று செய்யும் சமயத்தில் நீ இரண்டு விஷயங்களைப் பற்றி உணர்வடைவாய். நீ சுவாசத்துடன் உள்ளே செல்லும்போது அது வெளியே வருவதற்காக திரும்பும் முன் ஒரு கணம் சுவாசத்தில் இடைவெளி வரும். இதேபோல சுவாசத்தை வெளியே விடும்போதும் நிகழும். திரும்பவும் உள்ளே இழுக்கும் முன் ஒரு கணம் இடைவெளி வரும். நீ அதை கவனிக்க கவனிக்க இந்த இரண்டு நிலைகளும் மேலும் மேலும் தெளிவாக, பெரியதாக மாறும். ஒரு சுவாசம் உள்ளே போய் ஒரு கணம் நிற்கும், பின் வெளி வரும். வெளியே வந்தது ஒரு கணம் நின்று பின் உள்ளே போகும். இந்த இடைவெளி பெரிதாகிக் கொண்டே போகும்.
பின் ஒரு சமயம் வரும். இந்த இடைவெளி மிகச் சரியாக நாற்பத்தி எட்டு நிமிடங்கள் இது 10,000 வருடங்களுக்கு முன்பே கணக்கிடப்பட்டுள்ளது. இந்த முறையை உபயோகித்த அத்தனை சாதகர்களாலும் மிகச் சரியாக இதே நேரம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அப்படி இடைவெளி வந்து விட்டால் நீ வீடு வந்து சேர்ந்து விடுவாய். தியானம் தரக்கூடிய எல்லாவற்றையும் நீ பெற்று விடுவாய்.
உன் பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர் யாருக்கும் நீ செய்வது என்னவென்று தெரியாது. அதை குறிப்பிட்ட நேரத்தில் மட்டும்தான் செய்ய வேண்டும் என்று கிடையாது. நீ இதை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம். ஒரு நாளில் எவ்வளவு முறை முடிகிறதோ அவ்வளவு தடவை செய்யலாம். சில சமயங்களில் வெறும் இரண்டு நிமிடங்கள் கூட செய்யலாம்.
சில நேரங்களில் படுக்கையில் படுத்திருப்பாய். ஆனால் தூக்கம் வராது. தூக்கத்தைப்பற்றி கவலைப்படாதே. அதைச் செய். இது இரண்டு வேலைகளையும் செய்யும். இது ஆழ்ந்த அமைதியான தியானத்தைத் தரும், இதைச் செய்வதன் மூலம் தூக்கமும் வந்து விடும். ஆனால் நீ எழுந்திருக்கும் போதுதான் தூங்கி விட்டிருப்பதே உனக்குத் தெரியும்.
ஆனால் மிகவும் வேறுபட்ட விஷயம் என்னவென்றால் நீ தியானம் செய்தவாறே தூங்கி விட்டிருந்தால் நீ காலையில் எழும்போதும் தியான தன்மையோடு எழுவாய். அப்படி என்றால் ஆழ் மனதில் எங்கோ ஆழத்தில் நீ அறியாவண்ணம் இந்த முறை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது என்றுதானே அர்த்தம். உனது இரவு முழுவதும் தியானமாக மாறி விட்டிருக்கிறது, இது உனக்கு கிடைக்கக் கூடிய மிக அதிக அளவு நேரமாகும். உனது தூக்கம் மிகவும் அமைதியானதாகவும், ஓய்வானதாகவும் புத்துணர்வு தரக்கூடியதாகவும் மிகவும் வேறுபட்ட குணத்தில் இருக்கும்.
ஆறு மணி நேரம் முதல் எட்டு மணி நேரம் வரை இந்த கவனித்தல் தொடர்கிறது. காலையில் நீ விழித்தெழுந்த உடன் உனது சுவாசத்தை கவனிப்பதை நீ தொடர்ந்து செய்ய ஆரம்பிப்பாய். அது உனக்கு வியப்பளிக்கும்.
-- ஓஷோ --
Comments
Post a Comment