Google

பாலியலும் அதன் தொடர்பானதும் மருந்துச்சீட்டு - OSHO



ஆன்மாவிற்கு ஒரு மருந்தகம்”.
அத்தியாயம் – 7- பாலியலும் அதன் தொடர்பானதும்
 மருந்துச்சீட்டு
 பகுதி-2 திறத்தல், மூடுதல்

.

நீங்கள் மூடியபடி இருந்தால் நீங்கள் இறந்தவர்களாகவே இருப்பீர்கள். அது நீங்கள் வெளியே வந்தால் முழுவானமும் பார்க்க கிடைக்கும்போது, நீங்கள் அதை உள்ளே இருந்தபடி சாவித்துவாரத்தை வழியாக பார்ப்பதைப்போல. கொஞ்சம் வானத்தை அந்த சாவித்துவாரத்தின் வழியாக பார்க்கலாம், சிலசமயங்களில் சிலஒளிக்கற்றைகள் அதன்வழியாக பாயும். . சிலசமயம் நீங்கள் மின்னும் நட்சத்திரத்தைகூட பார்க்கலாம். ஆனால் அது தேவையில்லாத கஷ்டம், நீங்கள் தேவையேயில்லாமல் ஏழையாக இருக்கிறீர்கள்.

அதிலிருந்து வெளியே வாருங்கள் - உங்களால் வெளியே வரமுடியும். ஒரு சிறிய பரிசோதனையை முயலுங்கள்.
 .
ஒவ்வொரு இரவும் நீங்கள் தூங்கச் செல்வதற்குமுன், அறையின் நடுவே நில்லுங்கள், சுவற்றை பாருங்கள். சுவற்றில் கவனத்தை செலுத்துங்கள், கதவிலல்ல, சுவர். உங்களையே ஒரு கதவுகளில்லாத முழுமையாக மூடிய சுவராக நினையுங்கள். யாரும் உங்களுக்குள் நுழையவும் முடியாது, நீங்களும் வெளியேற முடியாது - நீங்கள் சிறைபட்டிருக்கிறீர்கள். ஏறக்குறைய மனோரீதியாக ஒரு சுவராக ஆகிவிடுங்கள், உங்கள் முழுசக்தியுமே சுவராகட்டும், ஒரு சீனசுவர் போல.
 .
ஒரு பத்து நிமிடம் சுவராகி, இறுக்கமாகுங்கள். உங்களால் முடிந்தவரையில் இறுக்கமாகுங்கள். எல்லா திறப்புகளையும் மூடுங்கள், முற்றிலும் மூடியபடி ஆகிவிடுங்கள். லெய்பினிஸ் இதை `மோனாட்’’ என்று சொல்வார். திறப்பில்லாத அணு, உங்களுக்குள்ளே முற்றிலுமாக மூடிக் கொள்ளுங்கள். உங்களுக்கு வேர்க்க ஆரம்பிக்கும், நீங்கள் நடுங்கத் துவங்குவீர்கள், ஒரு அச்சவுணர்வு எழும். நீங்கள் இறக்கப்போவதாக உணர்வீர்கள். நீங்கள் ஏதோ கல்லறைக்குள் நுழைந்து விட்டதைப் போன்ற உணர்வு உங்களுக்கு வரும். கவலைப்படாதீர்கள் – அதற்குள் நுழையுங்கள். அதை – இந்த பதட்டம், இந்த இறுக்கம், இந்த சுருங்குதல் – உச்சக் கட்டத்திற்கு கொண்டு வாருங்கள்.
 .
பிறகு திரும்புங்கள், கதவைப்பாருங்கள் – கதவைத் திறந்துவையுங்கள் – ஒரு கதவாகுங்கள். நீங்கள் ஒரு கதவாகி விடுவதாக உணருங்கள், இனியும் நீங்கள் சுவரல்ல. யார் வேண்டுமானாலும் உங்களுக்குள் வரலாம்; தட்டவேண்டிய அவசியம்கூட கிடையாது. அவர்கள் வெளியேயும் போகலாம்; எந்த தடையுமில்லை. ஓய்வு கொள்ளுங்கள், உடல் முழுவதையும் உணர்வு முழுவதையும் தளர்த்துங்கள், விரிவுபடுத்துங்கள். அங்கேயே நில்லுங்கள் விரிவுபடுத்துங்கள். நீங்கள் அந்த முழு அறையையும் நிரப்புவதாக உணருங்கள். உங்கள் சக்தி கதவின் வழியே தோட்டத்திற்கு பாய்வதாக உணருங்கள். அந்த சக்தி வெளியே போகட்டும், வெளிஉலகம் உங்களுக்குள் வருவதாக நினையுங்கள்.
 .
ஒரு பத்து நிமிடம் சுவராகுங்கள், இருபது நிமிடங்கள் கதவாகுங்கள். பிறகு தூங்கச் செல்லுங்கள். இதை குறைந்தபட்சம் ஒரு மூன்று மாதத்திற்கு தொடருங்கள். மூன்றாவது வாரத்திற்கு பின் நீங்கள் திறந்திருப்பதாக உணர்வீர்கள்.. ஆனாலும் தொடர்ந்து செய்யுங்கள்.

நான் உங்களுக்கு இரண்டையும் தருகிறேன், சுவர், கதவு, அப்போது இந்த வித்தியாசத்தை நீங்கள் சுலபமாக உணரமுடியும்.
 .
ஒருமுறை உங்கள் சக்தியை நீங்களே புரிந்துகொண்டால் – அதுவே சுவராகிறது, அதுவே கதவாகிறது – என்பதை தெரிந்து கொண்டால் பிறகு உங்களுக்கு அந்த அழகான பரிமாணம் புரியும். பிறகு நீங்கள் மற்றவர்களின் சக்தியையும் உணர்வீர்கள். நீங்கள் தெருவில் ஒரு மனிதனை கடக்கிறீர்கள், நீங்கள் அந்த மனிதனை ஒரு சுவராகவோ, கதவாகவோ உணரலாம். இப்போது உங்களுக்கு அதைப்பற்றிய ஒரு உள்புரிதல் இருக்கும். நீங்கள் அந்த மனிதரோடு தொடர்பு கொள்ள விரும்பினால், அவர் ஒரு சுவர் என்பதை உணரும்போது அவரிடம் தொடர்பு கொள்ள வேண்டாம். ஏனெனில் அப்போது எதுவும் உள்ளே செல்லாது. அவர் கதவு என்று நினைக்கும்போது மட்டும் தொடர்பு கொள்ளுங்கள்.
 .
பல நேரங்களில் உறவில் இது ஒரு செழிப்பான அனுபவமாக இருக்கும், அதை நீங்கள் கற்பனைகூட செய்து பார்க்க முடியாது. ஒருவர் கதவாக இருக்கும்போது, அவரை அணுகுங்கள், அதேநபர் இப்போது முற்றிலும் வேறாக இருப்பார். உங்கள் குழந்தை கதவாக இருக்கும்போது, அணுகுங்கள் – பிறகு அது கேட்கும், அப்போது நீங்கள் சொல்வதை கேட்க அது தயாராக இருக்கும். இல்லையென்றால் நீங்கள் கத்திக் கொண்டேயிருப்பீர்கள், அது செவிடாக இருக்கும்; அது ஒரு சுவர் போல இருக்கும். நீங்கள் நேசிப்பவர் கதவாக இருக்கும்போது அவரிடம் பேசுங்கள். உங்கள் காதலருடன் அவர் கதவாக இருக்கும்போது உறவு கொள்ளுங்கள். அவர் சுவராக இருக்கும்போது அவரை தொந்தரவு செய்யாமல் இருப்பதே நல்லது.
 .
ஒருமுறை உங்களுடைய உள்உணர்வு தெரிந்து விட்டால், பிறகு நீங்கள் அதை எங்கு வேண்டுமானாலும் உணரலாம்.

.
-தொடரும்.

Comments