மனிதன் சூழ்நிலையின் கைதி
மனிதன் சூழ்நிலையின் கைதி” என்றொரு கூற்று நிலவுகின்றது. கூர்ந்து கவனிப்போமாயின் மனிதரின் வாழ்வின் பெரும்பாலான படிகளை நிர்ணயிப்பது அவர் வாழும் சமுதாயத்தில் நிலவிடும் புறச்சூழல்தான். இச் சூழலின் தாக்கம் அல்லது பாதிப்பு ஒவ்வொரு மனிதரின் மீதும் ஒரே விதமான தாக்கத்தினை வெளிப்படுத்துவதில்லை. மாறாக அவரது உடனடிச் சூழலான குடும்பச் சூழல், அவரது அகச்சூழல், என்பவற்றிற்கேற்பவே இப்பாதிப்பும் அவரிடத்தில் ஏற்படுத்தும் விளைவுகளும் இருந்து விடுகின்றன. வர்க்கங்களால், ஏற்றத்தாழ்வுகளால் பிளவுண்டு கிடக்கும் புறச்சூழல் மனிதரில் ஏற்படுத்தும் பாதிப்புகள் மிகவும் வலியவை. பெரும்பாலான தெளிவுள்ள மனிதர்களே இச்சூழலின் தாக்குதல்களிற்கு ஈடுகொடுக்க முடியாமல் நீரோட்டத்தில் அள்ளுப்பட்டுச் செல்லும் கட்டையைப் போல் அள்ளுண்டு போகும்போது சாதாரணமனிதர்களின் நிலை என்ன? இத்தகைய பாதிப்புகளிலிருந்து தப்பிப் பிழைத்த ஒருசிலரே சூழலை மீறிய சரித்திர புருஷர்களாக, மானிட வழிகாட்டிகளாக உருவாகுகின்றார்கள்.
இவ்வாறு மனிதரைப் பல வழிகளிலும் ஆட்டிப்படைக்கும் இம் மனதினை மனோவியல் அறிஞரான சிக்மண்ட் பிராய்ட் இரு பகுதிகளாகப் பிரிக்கின்றார். 1. உணர்வு மனம் (அல்லது புற மனம்) 2. உணர்விற்கப்பாற்பட்ட மனம் (அல்லது ஆழ் மனம்) மனிதரின் மனதின் முக்காற் பங்கினை உள்ளடக்கியிருப்பது இந்த உணர்ச்சிக்கப்பாற்பட்ட ஆழ் மனமே. சகல விதமான அபிலாஷைகள், எதிர்பார்ப்புகளைப் புதைத்து வைத்துள்ளது. இந்த ஆழ்மனம்தான் மனிதரது சகல விதமான பிரச்னைகளிற்கும் காரணம். பகுத்தறிவு பேசுவது மனிதரின் உணர்வு மனம். ஆனால் அவரது உணர்விற்கப்பாற்பட்ட மனமான ஆழ்மனதினிலே அவர் பேசும் பகுத்தறிவிற்கேற்ற கொள்கைகள், எண்ணங்கள் பதிந்திராவிட்டால்..அவர் எவ்வளவு பகுத்தறிவு வாதம் புரிந்தும் பயனில்லை. இன்றைய பெரும்பான்மையான சமய , அரசியல் தலைவர்களுட்பட சாதாரண மக்களினதும் நிலை இதுதான். உணர்ச்சிகரமாகப் பேசுவதொன்று, செய்வதொன்றாக இருப்பதைப் பார்த்துப் பார்த்து அலுத்துக் கிடக்கின்றோமே.இந்நிலைக்குக் காரணம் இந்தப் புற , அக (ஆழ்)மனங்களிற்கிடையிலான போராட்டம்தான். புறச்சூழல், அகச்சூழலின் விளைவுகள் மனிதரில் புறமனதினில் ஏற்படுத்தும் பாதிப்பு செயலுருப் பெற வேண்டுமானால் அவரது ஆழ்மனமும் புறமனமும் ஒன்றாக இயங்க வேண்டியது அவசியம்.
மனிதரின் மனம் பற்றிய ஆய்வுகளில் பல புரட்சிகரமான கோட்பாடுகளைக் கண்டு பிடித்தவர் சிக்மண்ட் பிராய்ட். வீயன்னாவில் மருத்துவப் பட்டப்படிப்பை முடித்து மருத்துவராகக் கடமையாற்றிய பிராய்ட்டினைப் பாதித்த முக்கிய விடயங்களாகப் பின்வருவனவற்றைக் கூறலாம். இவையே இவரது மனம் பற்றிய பல்வேறு கோட்பாடுகள் தோன்றுவதற்குக் காரணங்களாகவிருந்தன என்று துணிந்து கூறலாம்.
1. டார்வினின் கூர்ப்புக் கொள்கை. ( இக்கொள்கையின் முன்னர் ஏனைய மிருகங்களிருந்து பிரித்துப் பார்க்கப் பட்ட மனிதர் இதன் அறிமுகத்தின் பின்னரோ மிருகங்களில் ஒன்றாகக் கருதப்பட்டனர். அதே சமயம் மனிதர் பற்றிய ஆய்வுகளை இயற்கை விஞ்ஞான முறைகளிற்கேற்ப மேற்கொள்ளக் கூடிய சாத்தியக் கூறுகளை இக்கோட்பாடு உருவாக்கியது ).
2. கஷ்டாவ் பெச்னோவின் (Gustav Fechneo- பிரபல்யமான ஜேர்மானிய தத்துவஞானி) கண்டுபிடிப்பான உளவியல் விஞ்ஞானம் (Science of Psychology). இது மனமும் விஞ்ஞான பூர்வமாக ஆய்வு செய்யப்பட முடியுமென்பதை நிலை நாட்டியது.
3. நவீன பெளதிகத்தின் புதிய கண்டுபிடிப்புகளான சக்தி பற்றிய குவாண்டம் கொள்கைகளும் பிராய்டின் மனம் பற்றிய ஆய்வுகளிற்குப் பெரிதும் உதவின. இக்குவாண்டம் கொள்கையின் படி சக்தியும் பொருளைப் போல் அளக்கப்படக் கூடியதெனவும் அதே சமயம் சக்தி அழிக்கப் பட முடியாதெனவும் அறியப் பட்டது. மேலும் இப்புதிய கண்டுபிடிப்புகளின் வாயிலாக மனிதரும் சக்தியின் வடிவம் (Energy System) என்பதும், எந்த விதிகள் பெளதீகத்தில் உள்ளனவோ அதே விதிகளிற்கமையவே மனிதரும் இயங்குகின்றாரெனவும் நிரூபணமாயிற்று.
இதுதவிர பிராய்டின் வளர்ச்சிக்கு அவரது மருத்துவத் தொழிலும், அவரது ஆழ்ந்த அறிவும் பெரிதும் காரணங்களாகவிருந்தன. பிராய்டின் முக்கிய கண்டுபிடிப்பு ‘இயக்கவியல் மனோவியல்’ அல்லது ‘இயக்க உளவியல்’ ( Dynamic Psychology) ஆகும். இயக்கவியல் விதிகளை மனிதரின் ஆளுமைக்கும் (Personality) அவரது உடலிற்கும் பாவிக்க முடியுமென்பதைக் கண்டுபிடித்ததே இவரது மிகப் பெரிய சாதனையாகும். நவீன விஞ்ஞான வளர்ச்சியிலும் இது ஒரு மைல்கல்லே. இயக்கவியல் உளவியல் மனிதரில் ஆளுமையிலேற்படுத்தும் மாற்றங்களை விளக்குவதாகும். இங்கு மனிதரின் ஆளுமையென நான் கூறுவது ஒரு மனிதரின் குணவியல்புகளையே குறிக்கின்றது.
பிராய்டின் கருத்துப்படி ஒரு மனிதரின் மன இயல்புகள் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன அல்லது அவரது மனவியல்புகள் மூன்று வடிவங்களில் செயற்படுவதாகக் கூறலாம். 1. உணர்வு உந்தும் இயல்பு (id) 2. நான் என்னும் முனைப்பு (Ego) 3. அதியுயர் மனக் கூறு (Super Ego)
1. உணர்வு உந்தும் இயல்பு (id)
இந்த உணர்வு உந்தும் இயல்பென்றாலென்ன? மனிதரில் ஏற்படும் சகல விதமான ஆசைகள், உணர்வுகள் (உதாரணமாகப் பசி, பாலுணர்வு போன்றவற்றினைக் கூறலாம்) என்பவற்றிற்குக் காரணம் இந்த உணர்வு உந்தும் இயல்புதான். இவ்வாறு உருவாகும் உணர்வுகளிற்கு வடிகாலொன்றினைத் தேடுவதுதான் இந்த உணர்வு உந்தும் இயல்பினது பிரதான செயற்பாடாகும். பிராய்டின் கருத்துப்படி இந்த உணர்வு உந்தும் இயல்பின் செயற்பாடானது மனிதரின் வாழ்வின் பிரதான நோக்கமான இன்பத்தினை அடைதலைப் (Pleasure Principle) பூர்த்தி செய்வதாகவேயுள்ளது. ஆனால் மேற்படி உணர்வு உந்தும் இயல்பின் பிரதான குறைபாடென்னவென்றால்..இது வெளி உலகைப்பற்றி , யதார்த்த நிலைமைகளைப் பற்றிக் கவலைபடுவதேயில்லை. உதாரணமாகப் பசியினால் பீடிக்கப்பட்டுள்ள குழந்தையொன்றினை நோக்குவோம். முதலாவதாக இத்தகைய பசி உள் உணர்வு (Hungry Instinct) எவ்விதம் குழந்தையிடம் உருவாகின்றதென்ற கேள்விக்குப் பிராய்டின் விடை, இவ்விதமான உள்ளுணர்வுகள் மனிதரின் பிறவியிலேயே உருவாகின்றன என்பதுதான். பசியால் பீடிக்கப்பட்டுள்ள குழந்தை அதனைப் பூர்த்தி செய்வதற்காக அழுகின்றது. இவ்விதம் அழும் குழந்தையிலேற்படும் பாதிப்புகள் அதன் உணர்வுகள் உந்தும் இயல்பு (id) வளர்ச்சிக்கு மேலுமுதவுகின்றன. இவ்விதம் அழும் குழந்தையிலேற்படும் உணர்வு உந்துமியல்பானது இருவிதமான செயல்முறைகளில் அல்லது படிகளில் உருவாகுகின்றன. ஆரம்பப் படிமுறை (Primary Process). இக்கட்டமானது குழந்தையின் மனதில் அப்பசி உணர்வினைத் தீர்க்கக் கூடிய உணவு பற்றிய பிம்பத்தினை (image) இனங்காட்டி விடுகின்றது. இவ்விதம் உணர்சிகளிற்கு வடிகாலான தீர்வினை பிம்பத்தின் மூலம்மனதில் உருவாக்கும் செயற்பாட்டினை பிராய்ட் ஆசையைப் பூர்த்தி செய்யும் செயற்பாடென்கின்றார் (Wish Fullfillement). பிராய்டின் கருத்துகளின்படி நாம் காணும் கனவுகளெல்லாம் இத்தகைய ஆசையைப் பூர்த்தி செய்யும் செயற்பாடுகளே. ஆனால் இவ்வுணர்வு உந்தும் இயல்பானது உள்ளத்தில் ஆசையினைப் பூர்த்தி செய்யத் தூண்டும் அக பிம்பத்தினையும்(Subjective memory image), அப்பிம்பத்தின் உண்மையான புற வடிவத்தினையும் (மேற்படி குழந்தை உதாரணத்தில் ‘உணவினையும்’) வேறுபடுத்திப் பார்க்கும் தனமையற்றதாகவே இருந்து விடுகின்றது. அதிலும் இத்தகைய ஆசையினைப் பூர்த்தி செய்யும் பொருளின் பிம்பத்தினை மனதினில் இனக்காணுவதால் மட்டும் அக்குழந்தையின் பசி தீர்ந்து போய்விடுவதில்லை. உண்மையான உணவினை அதற்கு ஊட்டுவதால் மட்டுமே அதன் பசி தீர்ந்து விடுகின்றது. பசியால் அழும் குழந்தையின் பசியினைத் தீர்க்கும் உணவின் விம்பம் உள்ளத்தில் உருவாகுவது ஆரம்பப் படியென்றால் அப்பசி உணர்வினை உண்மையில் பூர்த்தி செய்வதற்கு இரண்டாவது படியொன்றின் (Secondary Process) அவசியமும் தேவையாகின்றது. மனதின் மற்றொரு இயல்பான ‘நான் என்னும் முனைப்புடன்’ (Ego) அது சம்பந்தப் பட்டுள்ளது.
2. நான் என்னும் முனைப்பு (Ego)
உணர்வு உந்தும் இயல்பானது பாலியல் உணர்வு அல்லது பசி உணர்வு அல்லது வேறெதாவது உணர்வுகள் தோன்றும் பொழுது அதனைத் தீர்ப்பதற்கு தவிக்கின்றது. அது வெளியுலகைப் பற்றியோ வேறெதனைப் பற்றியோ கவலைப் படுவதில்லை. அதே சமயம் அது மேற்படி உணர்வுகளிற்கு தீர்வினைத் தரக்கூடிய வடிகாலின் உண்மை வடிவினையும், உள்ளத்தே உருவாகும் அது பற்றிய விம்பத்தினையும் வேறு படுத்திப் பார்க்கும் தன்மையினயும் கொண்டிருக்கவில்லை. அதனால் தான் பசியால் அழும் குழந்தை கைக்குக் கிடைத்ததை வாயினுள் போட்டு விடுகின்றது. இச்சமயத்தில் தான் மனதின் ஆளுமையினை உருவாக்கும் மற்றொரு இயல்பான ‘நான் என்னும் முனைப்பு’ (Ego) முக்கியத்துவம் பெறுகின்றது. இது உணர்வு உந்தும் இயல்பினைப் (id) போலல்லாது உலகினைப் பற்றிய யதார்த்த நிலையினைக் கவனத்தில் எடுத்துக் கொள்கின்றது. ஆனால் ‘உணர்வு உந்தும் இயல்போ’ இதற்கு மாறாக ‘இன்பத்தை அடைதல்’ பற்றியே கவனத்தில் எடுத்துக் கொள்கிறது. இந்த ‘நான் என்னும் முனைப்பே’ ‘உணர்வு உந்தும் இயல்பினால்’ உருவான ஆசைகள், அபிலாஷைகள் போன்ற உணர்வுகளிற்குத் தீர்வினை வடிகாலினைக் கூறுகின்றது. உண்மையில் ‘இந்த நான் என்னும் முனைப்பு’ வழிமுறைகளைத் தான் கூறுகின்றதேயொழிய அம்முறை சரியா அல்லது தவறா அல்லது நன்மை பயக்குமா தீமையினை ஏற்படுத்துமா என்றெல்லாம் வேறுபடுத்திப் பார்க்கும் தன்மையற்றதாகவே இருக்கின்றது. இத்தகையதொரு நிலையில் தான் மனம் செயற்படும் முறைகளில் மூன்றாவதான ‘அதியுயர் மனக் கூறு’ (Super Ego) முக்கிய பங்கினை வகிக்கத் தொடங்குகின்றது.
3. ‘அதியுயர் மனக் கூறு’ (Super Ego)
உதாரணமாகப் பாலியல் உணர்வுகளால் தீவிரமாக பாதிக்கப் பட்ட ஒரு மனிதன்ஒருவன் நிலையினைப் பார்ப்போம். அவனில் கிளர்ந்தெழும் உணர்வுகள் உணர்வு உந்தும் இயல்பின் விளைவினால் ஏற்படுவதாகும். அதனை அடைவதற்குரிய வழிமுறைகளை அடையாளம் கண்டு அவனைச் சிறிது தடுத்து வைப்பது ‘நான் என்னும் முனைப்’பின் தன்மையாகும். அம்மனிதன் ஒரு பெண்ணுடன் உறவு கொள்ள விழைகின்றான். அதனை அவன் பலாத்காரமாகவும் பெற்றுக் கொள்ள முடியும். அல்லது அவன் வாழும் சமூகத்தில் நிலவும் சட்ட திட்டங்களிற்கேற்பவும் அவனால் அவனது உணர்வுகளிற்கு வடிகாலினைத் தேட முடியும். இச்சமயத்தில் தான் ‘அதியுயர் மனக்கூற்றின்’ (Super Ego) பங்களிப்பு அவசியமாகின்றது.இவ்’வதியுயர் மனக்கூறான’து மேற்படி மனிதனின் குழந்தைப் பருவத்திலிருந்தே பெற்றோர்கள், ஆசிரியர்கள், மத குருமார்கள் முதலான அவன் மேல் ஆதிக்கம் செலுத்தும் மனிதர்களினூடாகவும், சமுதாயத்தில் நிலவும் சட்ட திட்டங்களின் விளைவாகவும் அவனடைந்த பாதிப்புகளிற்கேற்பவே நன்மை தீமைகளைச் சீர்தூக்கிப் பார்க்கின்றது.
மனித ஆளுமை….
ஆக மொத்தத்தில் மனிதரின் ஆளுமையினை நிர்ணயிப்பவை உணர்வு உந்தும் இயல்பிற்கும், நான் என்னும் முனைப்பிற்கும், அதி யுயர் மனக் கூறிற்கும் இடையிலேற்படும் மோதல்களின் விளைவேயென்று துணிந்து கூறலாம்.
இவ்விதம் மனதின் செயற்பாடுகளைச் செய்வதற்குரிய சக்தியினை மனம் எவ்வாறு பெற்றுக் கொள்கின்றது? பிராய்ட் இச்சக்தியினை ‘மனச் சக்தி ‘ என்கின்றார். மின்சக்தி காந்த சக்தி வெப்பச் சக்தி என்பதைப் போல் இம் மனச் சக்தியும் சக்தியின் ஒரு வடிவமே.உடலினை இயக்கும் உடற் சக்திதான் தேவைப்படும் போதெல்லாம் மனச் சக்தியாகவும் மாறிக்கொள்கின்றதென்று கருதினார் சிக்மண்ட் பிராய்ட். மின்சக்தி பல்வேறு வேலைகளைச் செய்யப் பயன்படுத்த்தப் படுவதைப் போல், மனச் சக்தியும் உளவியல் வேலைகளான் சிந்தித்தல், உணர்தல், ஞாபகப் படுத்துதல் முதலானவற்றை செய்வதற்கு உதவுகின்றது என அவர் நம்பினார். அன்றாடம் பல்வேறு வகைப் பட்ட நெருக்கடிகளிற்கிடையில் அகப்பட்டுத் தத்தளிக்கும் நாம் அந்நெருக்கடிகளிருந்து தப்புவதற்கு மூடத்தனமான கோட்பாடுகளையெல்லாம் துணைக்கழைத்து ஆறுதல் அடைகின்றோம். இத்தகையதொரு சூழலில்தான் எம்மன இயல்புகளை, அது செயற்படும் போக்குகளையெல்லாம் அறியவேண்டுவதன் அவசியம் அதிகமாகின்றது. இவ்விதம் எம்மை நாமே அறிந்து கொள்வதன் மூலம், சுத்திகரித்துக் கொள்வதன் மூலம்புறச் சூழலின் பாதிப்புகளிற்குச் சரியாக முகம் கொடுத்துச் செயற்படக் கூடிய அகச் சூழலை உருவாக்குவதன் மூலம் எம்வாழ்வு பயன் பெறுவது மட்டுமல்ல எம் சமுதாயப் பங்களிப்பினையும் செய்யக் கூடியதாகவிருக்கும். ம்வாழ்வு பயன் பெறுவது மட்டுமல்ல எம் சமுதாயப் பங்களிப்பினையும் செய்யக் கூடியதாகவிருக்கும் .
Comments
Post a Comment