தியானம் – ஓஷோ கதைகள்
தியானம் – ஓஷோ கதைகள்
ஒரு இளவரசன் ஒரு ஜென் குருவிடம் வந்து தியானம் கற்றுக்கொள்ள விரும்புவதாகக் கூறினான். ஆனால் அவனுக்கு அவசரம். ஏனெனில் அவனது தந்தைக்கு வயதாகி விட்டது. அவர் இவனை இந்த ஜென்குருவிடம் தியானம் கற்றுக்கொள்ள அனுப்பியிருக்கிறார்.
உனது காலத்தை வீணடிக்காதே”. என தன் மகனிடம் கூறிவிட்டு, “நீ இந்த குருவிடம் சென்று தியானம் செய்ய கற்றுக்கொண்டு நான் இறப்பதற்குள் திரும்பி வா. நீ தியானம் செய்ய தெரிந்து கொண்டு விட்டால் நான் சந்தோஷமாக இறப்பேன். நான் இதை தவிர வேறு எதையும் கொடுக்கமுடியாது. இந்த ராஜ்ஜியம் சிறிதும் மதிப்பற்றது.
அதனால் இளவரசன் இந்த ஜென்குருவிடம் வந்து, நான் அவசரத்திலிருக்கிறேன். எனது தந்தைக்கு வயதாகிவிட்டது. அவர் எந்த விநாடியும் இறந்து விடுவார். எனக் கூறினான்.
குரு, தியானத்திற்கான முதல் அடிப்படையே அவசரப்படக்கூடாது என்பதுதான். பொறுமையில்லாதது வேலைக்காகாது. போ வெளியே, இங்கிருந்து போய்விடு திரும்பவும் இங்கே வராதே. யாராவது ஒரு போலி குருவை கண்டுபிடிக்க முயன்று பார். அவர் ஜபிக்க ஒரு மந்திரம் சொல்லித் தருவார், இதை காலை பதினைந்து நிமிடம், மாலை பதினைந்து நிமிடம் அமர்ந்து சொல்லி வா. உனக்கு முக்தி கிடைக்கும் என்று உனக்கு ஆறுதலாகக் கூறிவிடுவார்.
ஆனால் நீ இங்கிருக்க விரும்பினால் கால நேரத்தை மறந்து விடு. ஏனெனில் தியானம் அழிவற்றதை தேடுவது. உனது வயதான தந்தையை பற்றி மறந்து விடு. – எப்போதும் யாரும் இறப்பதில்லை. என்னை நம்பு. ஒருநாள் நான் கூறுவதை உண்மை என நீ உணர்வாய். யாருக்கும் எப்போதும் வயதாவதுமில்லை, யாரும் இறப்பதுமில்லை. கவலைப்படாதே. எனக்கு உன் தந்தையை தெரியும். ஏனெனில் அவர் என்னிடம்தான் தியானம் கற்றுக்கொண்டார். அவர் இறக்கப்போவதில்லை – அவரது உடல் அழியலாம். ஆனால் நீ தியானம் கற்றுக்கொள்ள விரும்பினால் நீ உனது தந்தை உனது அரசாங்கம் ஆகிய எல்லாவற்றையும் மறந்து இருக்க வேண்டும். அதற்கு ஒருமுனைப்பட்ட அர்ப்பணிப்பு வேண்டும். என்றார்.
அந்த குரு அப்படிப் பட்டவர். அவரது இருத்தல் வலிமையானது. அந்த இளைஞன் தங்க முடிவெடுத்தான்.
மூன்று வருடங்கள் கடந்துவிட்டன. குரு தியானத்தைப் பற்றி ஒரு வார்த்தைகூட பேசவில்லை. அந்த இளைஞன் குருவுக்கு எல்லாவழிகளிலும் சேவை செய்து வந்தான். காத்திருந்தான், காத்திருந்தான், இங்கிருந்து வெளியே போய்விடு , நீ மிகவும் அவசரப்படுகிறாய் எனக் கூறிவிட்டால். அதனால் அவன் அதைப் பற்றி பேசக் கூட இல்லை.
ஆனால் மூன்று வருடங்கள் என்பது மிக அதிகம். முடிவில் ஒருநாள் காலை குரு மரத்தடியில் அமர்ந்து கொண்டிருக்கும் போது, குருவே, மூன்று வருடங்கள் கடந்து விட்டன. நீங்கள் இன்னும் எனக்கு தியானம் என்பது என்ன. அதற்கு என்ன செய்ய வேண்டும் எனக்கூட கூறவில்லை. எனக் கேட்டான்.
குரு அவனை திரும்பி பார்த்துவிட்டு, பின்னர், நீ இன்னும் அந்த அவசரத்திலேயே இருக்கிறாய். சரி, இன்று உனக்கு நான் தியானத்தை சொல்லித் தருகிறேன். என்றார்.
அவர் மிகவும் வேறுபட்ட வித்தியாசமான வழியில் கற்றுத் தர ஆரம்பித்தார். இளைஞன் கோவிலின் தரையை சுத்தம் செய்து கொண்டிருக்கும்போது, பின்புறமாக வந்து மரக்கத்தியினால் மிக பலமாக அவனை தாக்கினார். மிகவும் பலமாக தாக்கினார். அந்த இளைஞன் புத்தமத சாரங்களை படித்துக் கொணடிருக்கும்போது வந்து குரு தாக்கினார். அவர் மிகவும் அமைதியான மனிதர். அவருடைய காலடி ஒசையை கூட உன்னால் கேட்க முடியாது. திடீரென, எங்கிருந்தோ அந்த மரக்கத்தி அவன் மீது இறங்கும்.
இளைஞன், என்ன வகையான தியானம் இது என நினைத்தான். ஏழு நாட்களில் அவன் மிகவும் சோர்ந்து போனான். காயங்களும் சிராய்ப்புகளும் அடைந்த அவன் குருவிடம், என்ன செய்கிறீர்கள் நீங்கள் ஏன் என்னை தொடர்ந்து அடித்துக் கொண்டே இருக்கிறீர்கள். எனக் கேட்டான்.
குரு இதுதான் நான் கற்றுக்கொடுக்கும் முறை. கவனமாயிரு, தன்ணுணர்வோடு இரு, அப்போது நான் உன்னை அடிப்பதற்கு முன் நீ நகர்ந்துகொள்ளலாம். அதுதான் ஒரே வழி என்றார்.
தப்பிக்க வேறு வழியில்லை. அந்த இளைஞன் கவனமாக இருக்க ஆரம்பித்தான். அவன் புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தாலும் சுதாரிப்பாக கவனமாக இருந்தான். மெதுமெதுவாக இரண்டு மூன்று வாரங்களுக்குள்ளாகவே அவன் குருவின் காலடி ஒசையை கேட்க ஆரம்பித்தான். அவர் ஒரு பூனையைப் போல வருவார். பூனை எலியை பிடிக்க போகும்போது மிகவும் மெதுவாக சப்தமின்றி போகும். குரு உண்மையிலேயே வயதான பூனை போல.
ஆனால் இளைஞன் கவனமாகி விட்டான். அவன் அவருடைய காலடி ஒசையை கேட்க ஆரம்பித்தான். மூன்று மாதங்களுக்குள் குருவால் அவனை ஒருமுறை கூட அடிக்க முடியாமல் போய்விட்டது. இருபத்தி நான்கு மணி நேரத்தில் அவர் எப்போது முயற்சி செய்தாலும் அவன் என்ன செய்துகொண்டு இருந்தாலும் குதித்து தப்பித்து விடுவான்.
அப்போது குரு, முதல்பாடம் முடிந்தது. இப்போது இரண்டாவது பாடம் ஆரம்பிக்கிறது. இப்போது நீ உன்னுடைய தூக்கத்திலும் விழிப்போடு இருக்கவேண்டும். உன்னுடைய கதவுகளை திறந்து வைத்திரு. ஏனெனில் நான் எப்போது வேண்டுமானாலும் வருவேன். என்றார்.
இது உண்மையிலேயே கடினமானது. ஆரம்பத்தில் அவர் வந்து அவனை கடினமாக அடித்தார். வயதானவருக்கு இரண்டு மணி நேர தூக்கம் போதுமானது. ஆனால் இவன் இளைஞன். இவனுக்கு எட்டு மணி நேர தூக்கம் தேவை. ஆனால் முழு இரவும் போராட்டமாக இருந்தது. பலமுறை குரு வந்து அவனை அடித்தார். ஆனால் முதல் பாடம் மிகவும் சிறப்பாக அவனை மிகவும் கவனமானவனாகவும் அமைதியானவனாகவும் மாற்றியிருந்ததால் அவன் இந்த முறை அவரை, இது என்ன மடத்தனம், ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என கேட்கவில்லை.
குருவோ, கவலைப்படாதே. தூக்கத்தில் கூட கவனமாக இரு. நான் எவ்வளவு கடினமாக உன்னை அடிக்கிறேனோ அவ்வளவு விரைவாக தூக்கத்தில் கூட சுதாரிப்பாவாய். சூழ்நிலை உருவாக்கப் பட வேண்டும், அவ்வளவுதான். என்றார்.
மூன்று மாதங்களுக்குள்ளாகவே அவன் தூக்கத்தில் கூட கவனமடைந்தான். அவன் உடனடியாக தனது கண்களை திறந்து, இருங்கள். இதற்கு அவசியமில்லை. நான் விழித்திருக்கிறேன். என்பான்.
மூன்று மாதங்களுக்கு பிறகு குரு, நீ இரண்டாவது பாடத்திலும் தேர்ந்து விட்டாய். இப்போது மூன்றாவதும் கடைசியுமானது. என்றார்.
இளைஞன், இரண்டு நிலைகள் – நடப்பது, தூங்குவது – தானே இருக்கின்றன. மூன்றாவது என்னவாக இருக்கும் என்றான்.
குரு, இப்போது நான் உன்னை உண்மையான கத்தியினால் அடிக்கப்போகிறேன். – இதுதான் மூன்றாவது. என்றார்.
மரக்கத்தியினால் அடிக்கப்படுவது பரவாயில்லை. ஏனெனில் அதிகபட்சமாக பலமாக அடிபடும் அவ்வளவே. நீ இறந்து விடமாட்டாய். இப்போது குரு உண்மையிலேயே அசல் கத்தியை கொண்டு வந்தார். அவர் உறையிலிருந்து அசல் கத்தியை எடுத்தவுடன் இளைஞன் முடிந்தது நான் செத்தேன். இது ஒரு அபாயகரமான விளையாட்டு. அவர் இப்போது உண்மையான கத்தியினால் குத்தப் போகிறார். நான் கவனமின்றி ஒருமுறை இருந்தால்கூட அவ்வளவுதான் நான் முடிந்தேன். என நினைத்துக் கொண்டான்.
ஆனால் அவன் ஒருமுறை கூட தவற விடவில்லை. விஷயம் மிகவும் அபாயமானதாக இருக்கும்போது நீயும் அந்த அபாயத்தை சந்திக்கும் அளவு சக்தி பெற்று விடுவாய். மூன்று மாதங்களில் குருவால் அவனை ஒருமுறை கூட உண்மையான கத்தியால் அடிக்க முடியவில்லை.
பின் குரு, உன்னுடைய மூன்றாவது பாடமும் முடிந்தது. – நீ தியானிப்பவனாக மாறி விட்டாய். நாளை காலை நீ புறப்படலாம். நீ போய் உன் தந்தையிடம் எனக்கு உன்னைப் பற்றி முழுத் திருப்தி என்பதை சொல். என்றார்.
நாளை காலை அவன் புறப்படப் போகிறான். அன்று மாலை சூரியன் மறைந்துக் கொண்டிருந்தான். குரு மரத்தடியில் அமர்ந்து புத்தமத சூத்திரத்தை படித்துக் கொண்டிருந்தார். இளைஞன் வேறு எங்கோ அமர்ந்திருந்தான். அவன் மனதில், நான் போவதற்கு முன் ஒருமுறை இந்த கிழவனை அடிக்க வேண்டும். என்று தோன்றியது. இந்த எண்ணம் பலமுறை அவன் மனதில் ஓடியது. இதுதான் கடைசி சந்தர்ப்பம். இதை விட்டால் இனி முடியாது. நாளை காலை நான் புறப் பட வேண்டும் என எண்ணினான்.
அதனால் அவன் போய் மரக்கத்தியை எடுத்துவந்து ஒரு மரத்தின் பின் ஒளிந்து கொண்டான். அப்போது குரு, நிறுத்து எனக் கூறினார். அவர் அவனை பார்க்கக் கூட இல்லை. இங்கே வா. நான் வயதானவன், என்னை அடிக்க வேண்டுமென்ற எண்ணம் நல்லதல்ல – அதிலும் நான் உன் குரு என்றார்.
இளைஞனுக்கு மிகவும் ஆச்சரியமாகி விட்டது. ஆனால் நான் எதையும் சொல்லவில்லையே எனக் கேட்டான்.
குரு, ஒருநாள் உண்மையிலேயே நீ மிகவும் விழிப்புணர்வு அடையும்போது சொல்லாததும் கேட்கும். முன்பெல்லாம் என்னுடைய காலடி ஓசையை உன்னால் கேட்க முடியாது. பின் கவனமாக இருந்து அவற்றை கேட்க ஆரம்பித்தாய். முன்பெல்லாம் எனது காலடி சத்தத்தை உனது தூக்கத்தில் உன்னால் கேட்க முடியாமலிருந்தது. ஆனால் இப்போது தூங்கிக் கொண்டிருக்கும்போது கூட எனது காலடி ஓசையை உன்னால் கேட்க முடியும். அதைப்போல ஒருநாள் உனக்கு தெரியும். உனது மனது அமைதியாக மெளனத்தில் இருக்கும்போது உச்சரிக்காத வார்த்தைகளையும் உன்னால் கேட்க முடியும். சொல்லப்படாத எண்ணங்களையும் உன்னால் படிக்க முடியும். உள்ளுணர்வை தெரிந்து கொள்ள முடியும். உணர்வுகளை அறிந்து கொள்ள முடியும். அது உனது முயற்சியினால் அல்ல – நீ ஒரு கண்ணாடி போல மாறிவிடுவாய். அதனால் பிரதிபலிப்பாய். அவ்வளவே. என்றார்.
-OSHO_Tamil
Comments
Post a Comment