தாகமுள்ள மீன் ஒன்று - RUMI
தாகமுள்ள மீன் ஒன்று
நான் உன்னால் சோர்வடைவதில்லை. என்மீது
கருணைகொள்வதால் நீ களைத்துப் போய்விடாதே!
தாகத்தைத் தணிப்பதற்கான இந்த உபகரணங்கள்
நிச்சயம் என்னிடம் சலிப்படைந்திருக்க வேண்டும்.
இந்த நீர்க்குவளை, அந்த நீர்க்குடம்.
தாகமுள்ள மீனொன்று எனக்குள் இருக்கிறது.
அதன் தாகம் தணியப் போதுமானது
அதற்கு என்றும் கிடைப்பதில்லை.
கடலுக்குச் செல்லும் திசையை எனக்குக் காட்டு!
இந்த அரைகுறைத் தீர்வுகளை,
இந்தச் சிறிய பாத்திரங்களை உடைத்தெறி.
இந்த மனக்கோட்டைகளையும்
இந்தத் துயரத்தையும்கூட.
எனது நெஞ்சின் நடுவில் மறைந்திருந்த
முற்றத்திலிருந்து நேற்றிரவு எழுந்த
அலையில் என் வீடு மூழ்கட்டும்.
நண்பன் ஒரு நிலவுபோல என் கிணற்றுக்குள் விழுந்தான்.
நான் எதிர்பார்த்திருந்த விளைச்சல் அடித்துச் செல்லப்பட்டது.
ஆனால் பாதகமொன்றுமில்லை.
நான் அணிந்திருக்கும் தொப்பியையும் தாண்டி
தீ வளர்ந்துவிட்டது.
எனக்கு இந்த இசையும் இந்த அதிகாலைப் பொழுதும்
என் கன்னத்தோடு உரசும் உன் கன்னத்தின் கதகதப்பும்
வேண்டும்.
துயரப் படைகள் ஒன்றுகூடுகின்றன,
ஆனால் நான் அவற்றுடன் செல்வதாக இல்லை.
ஒவ்வொரு கவிதையை எழுதிமுடித்த பின்னும்
இப்படித்தான் இருக்கிறது.
ஒரு பேரமைதி என்னை ஆட்கொண்டுவிடுகிறது.
பின் மொழியை ஏன் பயன்படுத்த நினைத்தேன்
என்றெண்ணி வியக்கிறேன்.
-ரூமி.
Comments
Post a Comment