Google

ஆம், எங்கும் நிற்காதீர்கள். ஓஷோ கூறுவதைப் போல – பயணமே இலக்கு,



ஆம், எங்கும் நிற்காதீர்கள். ஓஷோ கூறுவதைப் போல – பயணமே இலக்கு, சென்றடையும் இடம் ஏதுமில்லை – என்பதை நினைவில் வையுங்கள். ஆம், இதுவுமல்ல, அதுவுமல்ல, எதுவுமல்ல என்று எல்லாவற்றையும் கடந்து கடந்து தாண்டித் தாண்டி போங்கள். போவதில், போய்க் கொண்டிருக்கிறோமா என்பதில் மட்டும் கவனம் வையுங்கள். எல்லாவற்றிற்கும் சாட்சிபாவமாக மாறிக் கொண்டே வருவதை உணருங்கள். வேடிக்கை பார்ப்பது மட்டுமே நமது வேலையாக இருக்க வேண்டும். நடப்பது எதனோடும் நம்மை தொடர்பு படுத்திக் கொள்ளக் கூடாது. இப்படியே போய்க்கொண்டேயிருந்தால், கணத்திற்குக் கணம் இறந்துகொண்டேயிருந்தால், எதையும் பிடிக்காமல் விட்டுக் கொண்டேயிருந்தால் என்ன நடக்கும்?

எது நடக்க வேண்டுமோ அது நடக்கும். நிச்சயமாக நடக்கும். அப்படி நிச்சயம் நடக்கப்போகிறது என்பதன் அறிகுறிகளை நீ பார்ப்பாய். நீ இல்லாமல் போகும், கேள்வி கேட்கவும், அனுபவப்படவும் ஆளில்லாமல் போவது நடக்கும். பயணத்தின் போதே அது நடக்கும். அது நடக்கையில் வந்து சேர்ந்து விட்டாய். ஆனால் நீ இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக நான் கரைவதுதான் பயணம். நானற்ற நிலைதான் இலக்கு. ஆகவே இலக்கை அடையும் எந்த முயற்சியும் வேண்டாம், ஏனெனில் முயற்சியில் நீ வலிமையடைவதுதான் நடக்கும், நடக்க வேண்டியது நடக்காமல் போய்விடும் என்கிறார் ஓஷோ.

மாறாக ஆடலோடு, பாடலோடு, இலகுவாக, விளையாட்டாக, சிரித்துக் கொண்டு, கொண்டாடிக்கொண்டு, சாட்சிபாவம் மேலும் மேலும் பெருகுவதைக் கொண்டாடுபவனாக பயணத்தில் ஆழ்ந்துவிடு என்கிறார் ஓஷோ.

Comments