சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு உலகமே ஒருவரை கவனித்தது- கண்டித்தது- களிப்புடன் கொண்டாடியது.
ஓஷோ :
சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு உலகமே ஒருவரை கவனித்தது- கண்டித்தது- களிப்புடன் கொண்டாடியது. அவரோ எவ்வித அச்சுறுத்தலுக்கும் செவி சாய்க்காமல், மனித பரிமாணம் மேல் நோக்கி நகர, தன்னால் இயன்றதை மற்ற எந்த ஒரு மறைஞானியும் செய்யத் துணியாத செயல்களை- விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாது செய்யத் துணிந்தார். பகவான் ரஜனீஷ் என்று எல்லாராலும் அறியப்பட்ட ஓஷோ ஒரு அபாயகரமான கிளர்ச்சியாளர். தன் 21-ஆவது வயதில் தன்னையுணர்ந்த ஞான அனுபவ நிலையை அடைந்தபின், அதனை உலகிற்கு உணர்த்திட வற்றாத வார்த்தைகளை வாரி வழங்கினார். உலகெங்கும் உள்ள "மாற்றம்' விரும்பிய மனிதர்கள் அவரது சொற் பொழிவுகளைக் கேட்க வந்து கூடினர்.
தத்துவத் துறையில் பி.எச்டி. பட்டம் பெற்ற ஓஷோவுக்கு பேச்சும் வாதமும் அபாரமான ஆயுதங்களாகும். தான் சந்திக்கும் எந்த ஒரு மத வாதியையும் அறிவுஜீவியை யும் ஆழமான - அழுத்த மான வாதத்தால் வீழ்த்தி விடுவார். இதனால் ஓஷோ வின் கல்லூரிப் பேராசிரியர் கள் பலர் ராஜினாமா கடிதங் களைக் கொடுத்துவிட்டு, இவரது வாதத் தாக்குதலில் இருந்து தப்பியோடியிருக்கிறார்கள்.
இந்தியா முழுக்க பயணம் செய்து பேருரைகளை நிகழ்த்திய ஓஷோ, சிறு வயது முதலே கிளர்ச்சி செய்யும் குழந்தையாகத் தான் வளர்ந்ததை குறிப்பிடத் தவறவில்லை. இவரை ஆதரித்தவர்களைவிட எதிர்த்தவர்கள் பல மடங்கு. "அது, புரிந்துகொள்ளக் கூடியதுதான். நான் அவர்களின் அடிப்படையின்மீது கை வைக்கிறேன். அதனால் அவர்கள் வீழ்த்தப்படுவது உறுதி. எனவே தங்களை - தங்கள் அகங்காரத்தைக் காத்துக்கொள்ள அவர்கள் என்னை எதிர்க் கிறார்கள்' என்று கூறினார்.
பழமையான மத பாரம்பரியங்களைக் கேள்விக்கு உள்ளாக்கினார். "மதவாதிகள் மக்களைச் சுரண்டுகிறார்கள். மக்கள் மலர்ச்சி அடையாமல், மந்தத் தன்மையில் சலிப்பான வாழ்க்கையைத் தொடர்ந்து வாழ, மத விதிகள் என்ற போலி காரணங்களால் பழக்கப்படுத்தி விட்டார்கள்' என்று சாடினார். அற்புதமான ஞானக் கருத்துகளை வெடிகுண்டுகளைப் போல் உலகை நோக்கி வீசிக் கொண்டேயிருந்தார். இதனால் உலகின் பல மத போதகர்கள் கலக்க மடைந்தனர். மறைக்கப்பட்ட ஆன்மிக மூலத்தின் அத்துணை அம்சங்களையும் ரகசியங்களையும் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தார் ஓஷோ.
"மனித இனம் அடுத்த பரிணாமத்திற்குச் செல்வது தவிர்க்க முடியாதது. அதைத் தொடக்கி வைக்கும் முதல் நபர் நானாகத்தான் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். அதனால்தான் உலகெங்கும் இருந்து இத்தனை எதிர்ப்புகள் என்னை வந்தடைகின்றன. ஆனால் நான் என் பணியில் உறுதியாக - மனித மனங்களில் பல நூற்றாண்டுகளாக நிரப்பப்பட்டுள்ள குப்பைகளை அகற்றி, உண்மையைக் கண்டடையும் வழிகளைப் பகிர்ந்து கொள்கிறேன். கிருஷ்ணர், புத்தர், இயேசு, முகமது, டயோஜீனஸ், சாக்ரடீஸ் போன்ற துருவங்கள் இப்பிரபஞ்சத்தின் அழகைப் பன்மடங்கு உயர்த்திவிட்டுச் சென்றனர். ஆனால் அவ்வழகை ரசிக்கும் கண்கள் இன்றைய நவீன மனிதனுக்கு இல்லாமல் போய்விட்டது. அதனை ரசிக்க முற்றிலும் மனிதத் தன்மை கொண்ட மெய்யுணர்வின் ஆரம்பமே நான்' என தனது வருகையைக் குறிப்பிடுகிறார்.
"எனது செய்தி ஒரு கொள்கையோ ஒரு தத்துவமோ அல்ல. எனது செய்தி ஒரு குறிப்பிட்ட நிலை மாற்றம். ஒரு மாற்றத்தைக் கொண்டு வரும் விஞ்ஞானம். ஆகவே யார் இப்போது இருக்கும் நிலையிலிருந்து இறந்து, முற்றிலும் புதிதாக - கற்பனைகூட செய்ய முடியாத அளவுக்குப் புதிதாகப் பிறப்பதற்குத் தயாராக இருக்கிறார் களோ அவர்கள் மட்டுமே- கேட்பதற்குத் தைரியமுள்ள ஒரு சில மக்களால் மட்டுமே இது இயலும். ஏனெனில் கேட்பது மிகவும் ஆபத்தானதாகிவிடும். கேட்டல் என்பது, மீண்டும் நீ பிறப் பதற்கான முதல் படி. இது உனது கொத்தி எடுக் கும் கேள்விகளுக்குச் சமாதானம் கண்டுகொள்ள உதவும் ஒரு கொள்கையோ கோட்பாடோ அல்ல. அது இறப்பதும் மீண்டும் பிறப்பதும் அல் லாமல் ஆகாது' என்று எச்சரிக்கை செய்கிறார்.
பாலுறவு என்ற ஒன்றை மறைக்க வேண்டிய தில்லை என்று, அதைப் பகிரங்கமாகப் பேசிய முதல் ஆன்மிகக் கிளர்ச்சியாளர். "மற்ற எல்லா வற்றைப் போலவே- யோகா, தந்த்ரா, சூஃபிசம் போன்ற புனித பாதைகளைப் போலவே பாலுறவு என்பதும் புனிதப் பாதைதான். மற்றவற்றோடு கூட (யோகா, தந்த்ரா) மனிதன் தொடர்பு கொள்ளாது- அதன் தாக்கம் இல்லாது வாழ்ந்து விடுவான். ஆனால் இந்தப் பாலியல் உணர்வை ஒவ்வொரு மனித உயிரும் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் அனுபவிக்கத் துடிக்கிறது. அது இயற்கையின் உந்துதல். உங்களால் யாதொன்றும் இல்லை. குற்ற உணர்வு என்ற பேச்சுக்கே இட மில்லை. ஏழு வயதில் வரும் பாலியல் உணர்வு பற்றி உங்களுக்கு ஒன்றும் தெரியாது. இப்போது அதன் முறை. மனித உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும் செல்களும் உச்ச நிலையில் இரு உயிர்கள் கலந்து வெளியேற்றிய சக்தியின் வெளிப்பாடுதான் இன்றைய உங்களது உடல். அதனால் உருவாக்கப்பட்ட உடலையே - அது தவறு என்று ஒதுக்கிவிட முடியாது. அதன் முழு செயல்பாட்டையும் கவனிக்க வேண்டும். அதீத விழிப்புணர்வு ஒன்றே அதனைக் கடக்கும் கருவியாகும்' என்று விலக்கப்பட்ட மர்மங்களை உடைத்தெறிந்தார்.
ஓஷோவின் புதிய மனிதன் "ஜோர்பா தி புத்தா' எப்படிப்பட்ட மனிதன் எனில், அவன் ஜோர்பாவைப்போல உலகியல் வாழ்க்கையின் முழு இன்பத்தையும் நுகர அறிந்திருக்கிறான். கௌதம புத்தரைப்போல மௌனத்தைப் பின்பற்றி தியானத்தில் இறக்கும் திறன் பெற்றிருக் கிறான். உலகியலிலும் ஆன்மிகத்திலும் நிறைவு. "ஜோர்பா தி புத்தா' ஒரு பிளவுபடாத முழுமை யான மனிதன்.
அவருடைய சொற்பொழிவில் வாழ்க்கையில் தொடப்படாத எந்த எல்லைகளும் கிடையாது. யோகா, தந்த்ரா, ஜென், ஹஸீஸ், சூஃபி போன்ற தனிப்பட்ட சாதகங்கள்மீது- பரம்பரையின் புரிந்துகொள்ள முடியாத ரகசியங்கள்மீது அவர் மிகவும் தெளிவாக வியாக்கியானம் செய்துள்ளார். மேலும் அரசியல், கலை, விஞ்ஞானம், மனோ வியல், கம்யூனிசம், தரிசனம், கல்வி, குடும்பம், சமுதாயம், ஏழ்மை, மக்கள் கூட்டம், சூழ்நிலை சம்பவிக்கக் கூடிய யுத்தம் மட்டுமின்றி, இன்றைய உயிர்க்கொல்லியான எய்ட்ஸ் போன்ற நச்சு நோயின்மீதும் அவருடைய புரட்சிகரமான ஜீவ திருஷ்டி பட்டிருக்கிறது. அவரது பேச்சுக்கள் அறுநூறுக்கும் மேற்பட்ட புத்தகங்களாக வெளிவந்துள்ளன. இந்தியாவிலேயே அதிக புத்தகங்கள் இருப்பது ஓஷோவுக்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
இதோ அந்த மறைஞானியின் இறுதி வார்த்தைகள்:
"இயற்கையின்பால் எனது நம்பிக்கை முழுமையானது. நான் சொல்வதில் ஏதாவது உண்மை இருக்கும் பட்சத்தில் அது தொடரும். எனது வேலையில் ஈடுபாடு கொண்டவர்களாக உள்ள மக்கள் தொடர்ந்து அந்த ஜோதியை எடுத்துச் செல்வார்கள். ஆனால் எவர்மீதும் எதுவும் திணிக்கப்பட மாட்டாது.'
ஓஷோ கல்லறைமீது உள்ள வாசகங்கள்:
"ஓஷோ பிறக்கவுமில்லை; இறக்கவுமில்லை.
Comments
Post a Comment