உன்னுடைய சுய சிந்தனையின், உனக்குள்ளேயே மின்னலாய் வெட்டும் சுய விருப்பத்தின் அடிப்படையில் தெரிவு செய்ய முடிகிறதா? - OSHO
உன்னுடைய சுய சிந்தனையின், உனக்குள்ளேயே மின்னலாய் வெட்டும் சுய விருப்பத்தின் அடிப்படையில் தெரிவு செய்ய முடிகிறதா?
குழந்தைப் பருவத்தில் வலுவாக இருக்கும் இந்தச் சுய ஆசை நாளாக நாளாக, மெல்ல மெல்ல, தேய்ந்து ஓய்ந்து விடுகிறது.
பெற்றோர்கள்,ஆசிரியர்கள்,பாதிரிகள்,பூசாரிகள்,சமுதாயம் என்ற இவர்களின் குரல்தான் மேலும்,மேலும் ஓங்கி ஒலிக்கிறது.
இந்த குரல்களுக்குத்தான் நீ வாயசைக்கிறாய்.
உன்னுடைய குரலை நீ கண்டுபிடிக்க ஆசைப்பட்டால், கூட்டத்திலே கோவிந்தா போடும் ஏகப்பட்ட குரல்களை நீ தாண்டி வர வேண்டி இருக்கும்.
உங்களுக்குள்ளே ஒலிக்கும் குரல் யாருடையது என்று கவனித்துப் பார்ப்பது தியானிப்பவர்களுக்கு அற்புதமான, ஆனந்த அனுபவம்.
சில சமயங்களில் உன்னுடைய தந்தையின் குரலாக ஒலிக்கும்.
வேறு சில சமயங்களில் உன்னுடைய தாயின் குரலாகவும்,இன்னும் சில சமயங்களில் உன்னுடைய தாத்தாவின் குரலாகவும் ஒலிக்கும்.
மற்ற சில சமயங்களில் உன்னுடைய ஆசிரியரின் குரலாக ஒலிக்கும்.
இவை எல்லாமே வெவ்வேறு விதமான குரல்கள்.
ஒரே ஒரு குரலை மட்டும் உன்னால், அவ்வளவு சுலபமாகக் கண்டுபிடிக்க முடியாது.
அது வேறு யாருடைய குரலுமல்ல. உன்னுடைய சொந்தக் குரல்தான் அது.
எப்போதுமே அது, அடக்கி ஒடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.பெரியவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும்;
பாதிரிகளின்,பூசாரிகளின் பேச்சைக் கேட்க வேண்டும்;
ஆசிரியர்களின் பேச்சைக் கேட்க வேண்டும் என்று அடிக்கடி புத்திமதிகளைக் கேட்டிருப்பாய்.
ஆனால்,உன்னுடைய சொந்த இதயத்தில் ஒலிக்கும் குரலை காதுகொடுத்துக் கேட்க வேண்டும் என்று உனக்கு யாருமே, எப்போதுமே எடுத்துச் சொல்லியிருக்க மாட்டார்கள்.
உனக்குக் கேட்காத, உனக்குச் சொந்தமான அந்த சன்னமான குரல்,இன்னமும் உன்னுடன்தான் வந்து கொண்டிருக்கிறது. உன் மீது திணிக்கப்பட்டு இருக்கும் கூட்டத்தின் கூச்சல் கூப்பாடுகளுக்கிடையே அதை அடையாளம் காண்பது கிட்டத்தட்ட முடியாத காரியம்.
முதலில் நீ எல்லாவிதமான இந்தக் கூச்சல், இரைச்சல்களிலிருந்து விடுபட்டு வெளியே வந்தாக வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட அமைதி நிலையை, தெளிவு நிலையை, மௌன நிலையை நீ எட்ட வேண்டும்.
அதன் பிறகே அந்த அதிசயத்தை,உனக்கென்று சொந்தக் குரல் இருப்பதை உன்னால் காண முடியும்.
ஓர் அடிநாதமாக உனக்குள்ளே எப்போதுமே ஒலித்துக் கொண்டிருந்த குரல்தான் அது.
--ஓஷோ--
-OSHO_Tamil
Comments
Post a Comment