Google

உண்மையான ஆத்திகன் வாழ்வை ஏற்றுக் கொள்கிறவன். - OSHO



உண்மையான  ஆத்திகன் வாழ்வை ஏற்றுக் கொள்கிறவன். ஏனென்றால்  வாழ்க்கை, கடவுள்  தந்த வரம். இந்த  உலகம் சொர்க்கத்தின் ஒரு  பகுதி  என்பதால் உலகத்தை ஏற்றுக் கொள்கிறவன் சொர்க்கத்தையும் ஏற்றுக் கொள்கிறான்.
         இந்த உடலை மறுக்காதவன் ஆத்திகன். ஆத்மாவுக்கு இந்த உடல்தானே புகலிடமாக இருக்கிறது! அழகான புகலிடம். அருமையான  வீடு. நல்ல சேவகன். எல்லாவற்றையும்  ஏற்றுக்  கொள்வது எப்படி  என்று  தெரிந்தவனே உண்மையான  ஆத்திகன். அவன்  ஆமாம்  என்று  சொல்லும்போது  கடந்திருப்பதெல்லாம் கைக்கு அடக்கமாகிப் போகிறது.  தான் கழிந்த நிலை தருகிறது.  மனம் கழிந்த நிலையாகிப் போகிறது.
       இதையே இன்னொரு கோணத்தில் இருந்து பார். இல்லை என்று  சொல்லும்போது மனதுக்கு வேலை  வந்துவிடுகிறது.  எதையும்   மறுத்துப் பேசும் போது மறுப்புக்கான காரண காரியங்களைக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. இல்லை என்று  சொன்னால் விவாதம்தான். இல்லை என்று  சொன்னால் தர்க்கம்தான். எந்த அளவுக்கு  மறுத்துப் பேசுகிறாயோ அந்த அளவுக்கு  வாதம் புரிய வேண்டியிருக்கிறது.
        ஆமாம்  என்று  சொன்னால் வாதம் புரிய வேண்டியதில்லை. ஆமாம் என்பது ஒரு முற்றுப்புள்ளி.  இல்லை என்பது தர்க்க வாதத்துக்கு  ஓர் ஆரம்பம்.  மறுத்துப் பேசுகிறவன் மேலும் மேலும்  வாதிட்டுக் கொண்டே போகிறான். வாழ்வை ஏற்றுக்  கொள்கிறவன்,  அன்புக்கு ஆமாம் சொல்கிறவன், பிரபஞ்சத்தை ஏற்றுக் கொள்கிறவன் போகப் போக விவாதம்  ஏதும் செய்வதில்லை.
         எங்கே விவாதம் குறைகிறதோ அங்கே  ஒருமிப்பு கூடுகிறது.  எங்கே  விவாதம்  அதிகரிக்கிறதோ அங்கே  சச்சரவும்  வன்முறையும் வளர்கின்றன.  விவாதம்  மனதின்  சுருதி பேதத்துக்கு அடையாளம். விவாதம்  இல்லையெனும்போது மனதில் ஆழ்ந்ததோர் ஒத்திசைவு பிறக்கிறது. அந்தச் சுத்தச் சுருதியில் நலம் மிக அதிகம். உள்ளார்ந்த சுருதிபேதம் தீங்கானது. அல்லது செய்வதற்குக் காரணம் பிளவுபட்ட மனம் கொண்டிருப்பதுதான். ஒருமித்திருக்கும்போது உன் மூலமாக  நல்லதே விளைகிறது. நீ எதையும்  செய்ய  வேண்டியதில்லை.  தானாகவே நல்லது எல்லாமும் நடந்தேறுகிறது.

ஓஷோ

Comments