Google

பணத்தை பற்றி ஓஷோ என்ன கூறுகிறார் ? - OSHO



பணத்தை பற்றி ஓஷோ என்ன கூறுகிறார் ?

1.
நீ பணத்தை ஒரு பிரச்சனையாக்கினால் ஒழிய அது ஓரு பிரச்சனையே அல்ல, காலங்காலமாக, தன்னை மதவாதிகள் என கூறிகொள்ளும் மக்கள், பணத்தைப் பற்றி மிகவும் கவலை கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள், பணம் பற்றி கவலைப் படுவது ஒரு முட்டாள்தனமான விஷயம்! அதனோடு விளையாடுங்கள் ! அது உன்னிடம் இருந்தால் அதை ஆனந்தமாக அனுபவி! அது உன்னிடம் இல்லாவிட்டால் அது இல்லாத சுதந்திரத்தை ஆனந்தமாக அனுபவி! அது இல்லாதபோது நீ வேறு என்ன செய்யமுடியும் ? ஆனந்தமாக அனுபவி! அது உன்னிடம் இருக்கும்பொழுதும் வேறு என்ன செய்யமுடியும்? ஆனந்தமாக அனுபவி! அதைப் பற்றி தேவையில்லாத பிரச்சனைகளை உருவாக்காதே. பணம் ஒரு பொம்மை. சில சமயங்களில் உன்னிடம் அது இருக்கும், அப்போது அதனோடு விளையாடு.
.
ஆனால் என்னுடைய உணர்வு என்னவென்றால் : பணத்தோடு விளையாடமுடியாத மக்களே, பணத்தை துறக்கிறார்கள்- அவர்கள் அதைப்பற்றி மிகவும் இறுக்கமாக இருக்கிறார்கள். அவர்கள் பணத்தைப் பற்றி மிகவும் பயப்படுகிறார்கள், ஏனெனில் ஆழமாக அடியில் அதனை பிடித்துகொண்டிருக்கிறார்கள்.
.
உனக்கு தெரியுமா? மகாத்மா காந்தியின் தலைமை சீடர் வினோபா பாவேவால் பணத்தை பார்க்க இயலாது. நீ வெறும் ஒரு ரூபாய் தாள் - மதிப்பற்றது, அதை அவர் பார்வைக்கு கொண்டுவந்தால் – அவர் தனது கண்களை மூடிக்கொள்வார். இது எந்த வகையான மனோபாவம்? இது துறவியின் செய்கையாக கருதப்படுகிறது ; நாடு முழுவதும் இவர் பணத்தை துறந்தவர் என பாராட்டபடுகிறார். நீ உண்மையிலேயே பணத்தை துறந்திருந்தால், எதற்காக நீ கண்களை மூடவேண்டும்?
.
நீ கண்களை மூடும் அளவிற்கு அந்த ஒரு ரூபாய் தாள் ஈர்ப்பு உடையதாகவா உள்ளது? நீ கண்களை மூடாவிட்டால் அந்த ஆளின் மீது குதித்துவிடுவாய் என பயமாக உள்ளதா? கண்டிப்பாக ஏதோ ஒன்று இருக்கவேண்டும். இது சிறிது அதிகப்படியாக தோன்றுகிறது. அதிக பயம் உள்ளது – இல்லாவிட்டால் எதற்காக உன் கண்களை மூடவேண்டும்? பல விஷயங்கள் கடந்து செல்கின்றன, ஆனால் நீ உனது கண்களை மூடுவதில்லை – இது வெறும் பணம்.
.
பணம் என்பது ஒன்றுமில்லை – பொருட்களை பரிமாற உதவும் வெறும் ஒரு கருவி. ஆனால் மக்கள் உண்மையிலேயே அடி ஆழத்தில் கஞ்சர்கள். பிடித்து தொங்குபவர்கள், அவர்களின் பிடித்துவைக்கும் தன்மையாலும், அவர்களின் கஞ்சதனத்தாலும், அவர்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள், துன்பப்படுகிறார்கள். முடிவில் ஒருநாள் அவர்கள் பணம்தான் அவர்களுக்கு துன்பத்தை விளைவிக்கிறது என நினைத்துக் கொள்கிறார்கள். பணம் உனக்கு துன்பத்தை விளைவிப்பதில்லை, பணம் எப்படி உனக்கு துன்பம் விளைவிக்கமுடியும்? கஞ்சத்தனம்தான் உனது துன்பத்தை விளைவிக்கிறது. பணம்தான் துன்பத்தை விளைவிக்கிறது என நினைத்துக்கொண்டு, அவர்கள் பணத்தை துறக்கிறார்கள். அவர்கள் பண உலகிலிருந்து தப்பி செல்கிறார்கள், பிறகு அவர்கள் தொடர்ந்து பயந்துகொண்டிருக்கிறார்கள், அவர்களின் கனவுகளில் அவர்கள் வங்கிகளுக்குள் நுழைந்து பெட்டகத்தை திறப்பது போன்ற விஷயங்கள் நடக்கும் – பணத்தின் மீது இச்சை கொள்வதால் – அது கண்டிப்பாக நடக்கும்.
.
பணம் ஒரு பிரச்சனை அல்ல! அதனை உபயோகபடுத்தலாம்.
உன்னிடம் அது இருந்தால் உபயோகப்படுத்து ; உன்னிடம் பணம் இல்லாவிட்டால், பணம் இல்லாதபோது உனக்கு இருக்கும் சுதந்திரத்தைப் பயன்படுத்து. இதுதான் என்னுடைய வழிமுறை. நீ பணக்காரனாக இருந்தால் ஆனந்தமாக அனுபவி. ஏழை மனிதன் அனுபவிக்கமுடியாத சில இன்பங்களை செல்வம் கொண்டுள்ளது. நான் செல்வத்தோடும் இருந்திருக்கிறேன், ஏழையாகவும் இருந்திருக்கிறேன், நான் உண்மையாக கூறுகிறேன், பணக்காரர்கள் மட்டுமே அனுபவிக்ககூடிய ஒரு சில விஷயங்கள் இருக்கின்றன. உன்னிடம் செல்வம் இருக்கும்பொழுது ஆனந்தமாக அனுபவி. நான் திரும்பவும் உன்னிடம் கூறுகிறேன், நான் செல்வத்தோடும் இருந்திருக்கிறேன், ஏழையாகவும் இருந்திருக்கிறேன், ஏழை மக்கள் மட்டுமே அனுபவிக்ககூடிய விஷயங்கள் சில இருக்கின்றன. இரண்டையும் ஒரே சமயத்தில் அனுபவிக்கமுடியாது.
.
எனவே எப்போதானாலும், நடப்பது என்னவாக இருந்தாலும், ஆனந்தமாக அனுபவி. ஏழை மனிதன் ஒரு வகையான சுதந்திரத்தைக் கொண்டுள்ளான். வறுமை ஒரு வகையான தூய்மையை, ஒரு ஓய்வுதன்மையை, திருப்தியான தன்மையை கொண்டுள்ளது. மனம் மிகவும் கவலைபடுவதில்லை. கவலைபட ஏதுமில்லை, நீ நிம்மதியாக உறங்கலாம். ஏழை மனிதனுக்கு தூக்கமின்மை இயலாதது. எனவே குறட்டை விட்டு நன்றாக தூங்கு. ஏழ்மையிலிருந்து வரும் சுதந்திரத்தை ஆனந்தமாக அனுபவி.
.
சில சமயங்களில் நீ செல்வந்தனாக இருந்தால், செல்வத்தை அனுபவி, ஏனெனில் பணக்காரர்கள் மட்டுமே அனுபவிக்ககூடிய சில விஷயங்கள் இருக்கின்றன. சிறந்த ஓவியங்களை உனது சுவற்றில் நீ மாட்டலாம். ஏழை அவ்வாறு செய்ய இயலாது. உனது வீட்டில் நீ சிறந்த இசையை வைத்திருக்கலாம். ஏழை அவ்வாறு செய்ய இயலாது. உன்னுடைய வீட்டை சுற்றி நீ ஜென் தோட்டம் அமைக்கலாம், ஏழை அவ்வாறு செய்ய இயலாது. நீ கவிதை படிக்கலாம், நீ வரையலாம், நீ கிதார் வாசிக்கலாம், நீ ஆடலாம், பாடலாம், தியானம் செய்யலாம் ஆயிரக்கணக்கான விஷயங்கள் கிடைக்கின்றன.
.
என்னுடைய வழி: எது எப்படியிருந்தாலும், நீ அதன் மூலம் என்ன செய்யமுடியும் என்று பார். அது வறுமையாக இருக்குமானால் புத்தராக ஆகிவிடு. ஊர் சுற்றத் தொடங்கு, ஓரு பிச்சை பாத்திரத்தை எடுத்து கொள். பிச்சைக்காரருக்கு மட்டுமே இருக்ககூடிய அந்த அழகை அனுபவி. அவர் எந்த இடத்தையும் சேர்ந்தவரல்ல, இன்று இங்கே இருக்கிறார், நாளை அவர் போய்விடுவார். அவர் ஒரு ஓட்டம். அவருக்கு எந்த வீடும் இல்லை. மழை வரபோகிறது கூரையை சரிசெய்யவேண்டும் என்ற கவலை அவருக்கு இல்லை. யாராவது எதையாவது திருடிவிடுவார்களோ என்னும் பயம் அவருக்கு இல்லை. அவரிடம் எதுவும் இல்லை.
.
வறுமையாக இருக்கும்பொழுது வறுமையை ஆனந்தமாக அனுபவி. செல்வம் இருக்கும்பொழுது ஜனகராக ஆகிவிடு, அரசனாக ஆகிவிடு, பணத்தினால் கிடைக்கும் அனைத்து அழகுகளையும் அனுபவி.
.
என்னுடைய வழி முழுமையானது. நான் உனக்கு தேர்ந்தெடுக்க கற்றுத் தரவில்லை, நான் வெறுமனே ஒரு புத்திசாலியான மனிதன் எது எப்படியிருந்தாலும் அதனை அழகாக்கிவிடுவான் என கூறுகிறேன். புத்தியில்லாத மனிதன் சிரமப்படுகிறான். அவனிடம் பணமிருந்தால் அவன் சிரமப்படுகிறான் ஏனெனில் பணம் கவலைகளை கொண்டுவருகிறது. அவன் பணம் கொண்டுவரக்கூடிய இசையை, நடனத்தை, ஓவியத்தை இரசிப்பதில்லை. அவனிடம் பணம் இருந்தால் அவன் ஓய்வெடுக்க, தியானம் செய்ய, பள்ளதாக்குகளில் கத்திப் பாட, மற்றும் நட்சத்திரங்களோடு பேச அவன் செல்வதில்லை, அவன் கவலைபடுகிறான், தனது உறக்கத்தை இழந்துவிடுகிறான், பசியை இழந்துவிடுகிறான். பணம் இருக்கும்பொழுது அவன் தவறானதை தேர்ந்தெடுக்கிறான். இந்த மனிதன் எப்படியோ ஏழையானால், கடவுளின் அருளால் ஏழையானால், பிறகு அவன் ஏழ்மையில் சிரமப்படுகிறான், பிறகு அவன் தொடர்ந்து “அது இல்லை, இது இல்லை” எனக் கவலைப்படுகிறான். உன்னிடம் வறுமை உள்ளது!
அதனை ஆனந்தமாக அனுபவி!

Source: Take It Easy vol # 1 Chapter # 8 Question # 7

Comments