Google

இணைப்புணர்வின் கதை - ஓஷோ


.
இணைப்புணர்வின் கதை - ஓஷோ
.
இந்த குறிப்பிட்ட வகையான சூழ்நிலைகள்தான் முக்தி நிலையை அடைய உதவும் என்று எதுவும் கிடையாது. உன்னுடைய தேடல், உனது ஆழ்ந்த ஏக்கம், அதற்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் உனது நிலை – இவை அனைத்தும் ஒருங்கிணைந்து உன்னைச் சுற்றி உருவாக்கும் ஒரு சக்தி நிலைதான் அது நிகழக்கூடிய சாத்தியக்கூறை உருவாக்கும்.
.
அதை நீ உருவாக்க முடியாது. ஒவ்வொரு சாதகனும் ஆரம்ப நிலையில் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். இதில் மற்றவரை பார்த்து நீ எதையும் கற்றுக் கொள்ள முடியாது. அப்படித்தான் எல்லா மதங்களும் செய்து கொண்டிருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட பிராத்தனை, ஒரு குறிப்பிட்ட விதமாக உட்காருவது, ஒரு குறிப்பிட்ட செயல், ஒரு குறிப்பிட்ட விதமாக சுவாசிப்பது என. ஆனால் எதுவும் உதவப் போவதில்லை.
.
ஒரு கதை இது எனக்கு எப்போதும் மிகவும் பிடிக்கும்.... ஒரு தீவில் உள்ள மூன்று பேர் மிகவும் சிறந்த புனிதர்கள் என மக்களிடம் பிரபலமடைந்து வந்தனர். இதை அறிந்த ரஷ்யாவின் ஆர்ச் பிஷப் மிகவும் ஆத்திரமடைந்தார். இது கிறிஸ்துவ மதத்துக்கு எதிரானது. மதங்களிலேயே கிறிஸ்துவ மதம்தான் மிகவும் முட்டாள்தனமானது. புனிதர் என்பது ஏதோ ஒரு பட்டம் போல, ஒரு படிப்பு தகுதி போல, அது சர்ச் அமைப்பினால் அங்கீகரிக்கப் பட வேண்டும் என்பர். சர்ச் அங்கீகரிக்கும்போதுதான் ஒருவர் புனிதர் ஆகிறார்.
.
தன்னிடம் அங்கீகாரம் பெறாமலேயே இந்த மூன்று பேரும் புனிதர்கள் என்று பெயர் பெறுவதை ஆர்ச் பிஷப்பால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. மிகவும் கோபமடைந்தார். ஆயிரக்கணக்கான மக்கள் அவர்களிடம் ஆசி பெறவும் காலை தொட்டு வணங்கவும் செல்வது அவருக்கு மிகவும் கோபமூட்டியது. ஒருநாள் அவர்கள் என்ன வகையான புனிதர்கள் என்று பார்ப்பதற்காக நேரில் போய் பார்ப்பது என முடிவு செய்தார்.
.
அவர் மோட்டார் படகில் சென்று அந்த தீவை அடைந்தார். அது ஒரு மிகச் சிறிய தீவு. இந்த மூவர் மட்டுமே அங்கு வசித்து வந்தனர். அது ஒரு காலை நேரம். இந்த மூவரும் ஒரு மரத்தின் கீழ் அமர்ந்திருந்தனர். அவர்கள் படிப்பறிவற்ற, நாகரீகமற்ற, சாதாரண மனிதர்கள் போல தோன்றினர்.
.
ஆர்ச் பிஷப் வரும் வழியில் ஆயிரக்கணக்கான மக்களை தன்பால் ஈர்த்த மூன்று பேரை எப்படி சந்திப்பது என்ற பதட்டத்தோடுதான் வந்தார். இப்போது இங்கு எந்த பிரச்னையும் இல்லை என நினைத்தார் – இவர்கள் முட்டாள்கள். அவர் அவர்களிடம் சென்றவுடன் அவர்கள் இவர் காலைத் தொட்டு வணங்கினார்கள். அவர் திருப்தியடைந்தார். நீங்கள் புனிதர்கள் என நீங்கள் நினைக்கிறீர்களா என அவர்களிடம் கேட்டார்.
.
அவர்கள், - நாங்கள் படிக்காத, பாமர மக்கள். எங்களால் எப்படி அவ்வளவு உயர்ந்த விஷயங்களை நினைத்துப்பார்க்க முடியும் – நாங்கள் அப்படி அல்ல. ஆனால் நாங்கள் என்ன செய்வது, மக்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். நாங்கள் அவர்களை தடுக்க முயற்சி செய்தோம், உங்களிடம்தான் போக வேண்டும் எனக் கூறினோம். ஆனால் அவர்கள் கேட்பதே இல்லை - என்றனர்
.
ஆர்ச் ஆணித்தரமான குரலில், உங்களது பிரார்த்தனை என்ன எனக் கேட்டார்.

மூவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். ஒருவரையொருவர் மறுத்துக் கொண்டனர். ஒருவர் நீ சொல் என்றார். மற்றவர் நீ சொல் என்றார்.
.
ஆர்ச் பிஷப், யார் வேண்டுமானாலும் சொல்லலாம். அதில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் சொல்லுங்கள் என்றார்.

அவர்கள் - உண்மையில் இது ஒரு பிரார்த்தனையே அல்ல. நாங்கள் அதை உருவாக்கிக் கொண்டோம். எங்களுக்கு அதைச் சொல்ல மிகவும் வெட்கமாக இருக்கிறது என்றனர்.

ஆர்ச்பிஷப் உண்மையிலேயே மிகவும் ஆத்திரமடைந்தார். நீங்களே பிரார்த்தனையை உருவாக்கிக் கொண்டீர்களா அது என்ன பிரார்த்தனை – என்றார்.
.
ஒருவர், நீங்கள் கேட்கிறீர்கள். அதனால் நாங்கள் சொல்லித்தான் தீர வேண்டும். ஆனால் எங்களுக்கு வெட்கமாக இருக்கிறது. ஏனெனில் எங்களது பிரார்த்தனை மிகவும் எளியது, சிறப்பானது அல்ல. “நீங்களும் மூவர், நாங்களும் மூவர் எங்களிடம் கருணை காட்டுங்கள்” என்பதே எங்களது பிரார்த்தனை. என்றார்.
.
ஆர்ச்பிஷப் கோபத்தில்கூட சிரித்துவிட்டார். இதுதான் உங்களது பிரார்த்தனையா, மிகவும் நன்றாக இருக்கிறது. என்றார்.
.
அந்த பாமர மக்கள் மூவரும், நாங்கள் கற்க தயாராக உள்ளோம். சரியான பிரார்த்தனையை, வழிபடும் முறையை நீங்கள் சொல்லிக் கொடுத்தால் நாங்கள் முயற்சி செய்கிறோம். ஆனால் அது பெரிதாக இருந்தால் நாங்கள் அதை மறந்து விடுவோம் அல்லது தவறு செய்து விடுவோம் அல்லது குழம்பி போய் விடுவோம். எங்களது பிரார்த்தனை மிகவும் சிறியதாக இருப்பதால் நாங்கள் அதை மறப்பதில்லை, அதில் தவறு எதுவும் செய்வதில்லை. என்றனர்.
.
ஆர்ச்பிஷப், ரஷ்யாவின் மிகப் பழமையான சர்ச்சின் சம்பிரதாயமான பிரார்த்தனை முழுவதையும் படித்தார். அது மிகப் பெரியது. இந்த பாமர மக்கள் மூவரும், இது மிக நீளமானதாக இருக்கிறது. தயவுசெய்து மறுபடியும் சொல்லுங்கள் என்றனர்.
.
மூன்று தடவை சொன்ன பின்னும் அவர்கள் தயவுசெய்து மறுபடியும் ஒருமுறை மட்டும் சொல்லுங்கள், அப்போது எங்களால் நினைவு கொள்ள முடியும் என்றனர். ஆர்ச் பிஷப் இவ்ரகள் முட்டாள்கள் என எண்ணி மிகவும் மகிழ்ந்தார். இவர்களுக்கு ஒன்றும் தெரியாது, சர்ச்சின் பிரார்த்தனையை கூட முழுதாக சொல்ல இவர்களால் முடியவில்லை என்பதை எடுத்துக் கூறி மக்களை என்னால் எளிதாக ஏற்றுக் கொள்ள செய்து திசை திருப்பி விட முடியும். அதில் எந்த பிரச்னையும் இல்லை என நினைத்தார்.
.
அவர்கள் ஆர்ச்பிஷப்பின் காலைத் தொட்டு வணங்கி நன்றி கூறினர். அவர் இனிமேல் வர வேண்டிய தேவையே இல்லை என்றும், அவர் கூறி அனுப்பினால் போதும், தாங்கள் வந்து அவரை சந்திப்பதாகவும் அவர்கள் கூறினர். அவர் எதற்கு சிரமப்பட வேண்டும், எப்போது அவர் சந்திக்க விரும்பினாலும் செய்தி சொல்லி அனுப்பினால் போதும், நாங்கள் சர்ச்சுக்கு வந்து சேருகிறோம் என்று கூறினர்.
.
சந்தோஷத்தோடும், திருப்தியோடும் ஆர்ச்பிஷப் விடை பெற்றார். அவர் ஏரியின் நடுவில் சென்று கொண்டிருக்கும் போது மூன்றுபேரும் தண்ணீரின் மேல் ஓடி வந்தபடி, நில்லுங்கள், நாங்கள் பிரார்த்தனையை மறந்துவிட்டோம். மறுபடியும் ஒருமுறை சொல்லுங்கள் என்று கேட்டனர்.
.
ஆர்ச் பிஷப் அவர்கள் தண்ணீரின் மேல் ஓடி வந்ததையும், அவர்கள் பேசும்போது தண்ணீரின் மேல் நின்று கொண்டு அவர்கள் பேசிக் கொண்டிருப்பதையும் பார்த்தார். அவருக்கு சிறிதளவாவது புத்திசாலித்தனம் இருந்திருக்க வேண்டும்.
.
அவர், என்னை மன்னித்துவிடுங்கள். உங்களுடைய பிரார்த்தனைதான் சரியானது. நீங்கள் உங்களது பிரார்த்தனையையே தொடர்ந்து செய்யுங்கள். உங்களது பிரார்த்தனை சென்றடைந்து விட்டது. எனது பிரார்த்தனை அடைய வில்லை. நீங்கள்தான் உண்மையான புனிதர்கள். உங்களை சர்ச் புனிதர்களாக அங்கீகரித்துள்ளதா இல்லையா என்பது இங்கு ஒரு விஷயமே அல்ல. யார் உண்மையிலேயே புனிதர்கள் இல்லையோ அவர்களுக்குத்தான் அங்கீகாரம் தேவைப்படும். உங்களது இருப்பே அதை உறுதி செய்கிறது. உங்களது வாழ்வில் குறுக்கிட்டதற்காக என்னை மன்னித்து விடுங்கள். என்றார்.
.
இது லியோ டால்ஸ்டாயின் கதை. இது சாத்தியம்தான். இருதயசுத்தியோடு மனத் தெளிவோடு அமைதியாக செய்யும்போது நீங்களும் மூவர், நாங்களும் மூவர் எங்களிடம் கருணை காட்டுங்கள் என்று கூறுவதுகூட பிரார்த்தனையாக மாறும். அந்த மிகச் சிறந்த எதிர்பாராதது நிகழும். ஆனால் நீ அதை காப்பியடிக்க முடியாது. அதைப் போலவே செய்து பார்க்க முடியாது. அதுதான் பிரச்னை.

Source: FROM BONDAGE TO FREEDOM CHAP #32 .

Comments