Google

வாழ்வின் ஏமாற்றம் - OSHO



Source :FROM DARKNESS TO LIGHT ch.# 2 Q 1
.
வாழ்வின் ஏமாற்றம் - ஓஷோ
.
ஒருவர் சக்ரவர்த்தி ஆவது ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் நிகழக்கூடும் என்றும் அவர் ஒரு தனிப்பிறவி என்றும் அதனால் சக்ரவர்த்தியான ஒருவர் இறந்தால் அவருக்கு சொர்க்கத்தில் தனிப்பட்ட மரியாதைகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டு, சிறப்பான ஒரு இடம் கொடுக்கப்படும் என்றும் சொல்லப்படுவதுண்டு.
.
ஜைன மத நூல்களில் சொர்க்கத்தில் இமயமலையை போன்ற ஒரு மலை உண்டு எனக் கூறப்பட்டுள்ளது. இந்த இமயமலை பாறைகளாலும் மண்ணாலும் பனியாலும் உருவாக்கப்பட்டுள்ளது. சொர்க்கத்தில் உள்ள அந்த மலைக்கு பெயர் சுமிரு. சுமிரு என்றால் மிக உயர்ந்த மலை எனப் பொருள். அதை விட சிறந்த, அதை விட அழகானது வேறில்லை என்பது அதன் அர்த்தம். அது தங்கத்தால் உருவானது. அதில் பாறைகளுக்கு பதிலாக வைரங்களும் பவளங்களும் மரகதங்களும் உள்ளன. சக்ரவர்த்தி ஒருவர் இறந்தால் அவரது பெயர் அந்த மலை மீது பொறிக்கப்படும்.
.
அப்படி ஒரு சக்ரவர்த்தி இறந்த சமயம் அவரது பெயரை சுமிரு மலை மீது பொறிப்பதற்காக அவரை கூட்டிப் போனார்கள். அது ஒரு அரிதான தருணம். அது ஆயிரம் வருடங்களில் ஒருமுறையே நிகழும். இந்த மன்னன் தன் பெயரை சுமிரு மலை மீது தான் பொறிக்கப்போவதை எண்ணி மிகவும் மனக்கிளர்ச்சியடைந்தான். இதுவரை இருந்த மிகச் சிறந்தவர்களில் ஒருவனாகப் போவதோடு, வரப்போகிற சிறந்தவர்களுக்கும் ஒரு பாடமாக, வழிகாட்டியாக இருக்கப்போகிறான். அந்த சக்ரவர்த்தி அசாதாரணமானவர்களில் ஒருவனாகப் போகிறான்.
.
அந்த வாயில் காவலன் மலைமீது அவரது பெயரை பொறிப்பதற்க்கு தேவையான கருவிகளை கொடுத்தான். சக்ரவர்த்தி தன்னுடன் இன்னும் சிலரை கூட்டிச் செல்ல விரும்பினான். சக்ரவர்த்தியின் வாழ்நாள் பூராவும் அவருடன் இருந்து அவரது வெற்றிக்கு துணை நின்ற அவரது மனைவி, அமைச்சர், தளபதி ஆகியோர் சக்ரவர்த்தி இறந்தபோது அவரின்றி வாழ முடியாது என தற்கொலை செய்துகொண்டு அவருடன் கூடவே உயிர் விட்டு அவருடன் இப்போது சொர்க்கத்துக்கு வந்துள்ளனர். அவர்களையும் கூட்டிச் செல்ல அனுமதிக்குமாறு வாயில் காப்போனைக் கேட்டார். ஏனெனில் தன்னந்தனியே போய் தன் பெயரை பதித்துவிட்டு வருவதில் என்ன சந்தோஷம் இருக்கப் போகிறது—அங்கு அதைப்பார்க்க யாருமே இல்லாவிடில் மகிழ்ச்சி எப்படி வரும்—ஏனெனில் இந்த முழு உலகமும் பார்ப்பதில்தான் சந்தோஷமே இருக்கிறது.
.
வாயில் காவலன், என்னுடைய பேச்சை தயவு செய்து கேளுங்கள். இது என்னுடைய பரம்பரை தொழில். என்னுடைய அப்பா, தாத்தா, அவருடைய அப்பா என நாங்கள் ஆயிரக்கணக்கான நூற்றாண்டுகளாக இந்த சுமிரு மலையின் வாயில் காப்பவர்கள். அதனால் என் பேச்சைக் கேளுங்கள். இவர்கள் யாரையும் உங்களுடன் கூட்டிச் செல்லாதீர்கள். இல்லையெனில் வருத்தப்படுவீர்கள். என்றான்.
.
சக்ரவர்த்தியால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அவரால் அவனது பேச்சைக் கேட்காமலும் இருக்க முடியவில்லை. ஏனெனில் அவரைத் தடுப்பதால் அவனுக்கு என்ன லாபம்...
.
வாயில் காப்போன், நீங்கள் இவர்களை இப்போதேக் கூட்டிச் செல்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அவர்களைக் கூட்டிச் சென்று விட்டு பின் அங்குள்ள நிலையை பார்த்துவிட்டு ஒருக்கால் காண்பிக்க வேண்டாம் என முடிவெடுத்தால் அப்போது அதை செயல்படுத்த வழியும் இருக்காது, வாய்ப்பும் இருக்காது. அவர்கள் உங்களுடன்தான் இருப்பார்கள். எனவே இப்போது நீங்கள் தனியே சென்று உங்கள் பெயரை பொறித்துவிட்டு வாருங்கள். பின் இவர்கள் பார்க்கத்தான் வேண்டும் என விரும்பினால் திரும்பி வந்து இவர்களை கூட்டிச் செல்லுங்கள். என்றான்.
.
இது மிகச் சரியான யோசனையாகத் தோன்றியதால் சக்ரவர்த்தி, மற்றவர்களிடம், நான் தனியாகப் போய் எனது பெயரை பொறித்துவிட்டு திரும்ப வந்து உங்கள் எல்லோரையும் அழைத்துச் செல்கிறேன். என்றார்.

வாயில் காப்போன், இதுதான் மிகச் சரியானது என்றான்.
.
சக்ரவர்த்தி சென்று ஆயிரக்கணக்கான சூரியன்களுக்கு அடியில் தகதகத்துக் கொண்டிருந்த சுமிரு மலையைக் கண்டார். – ஏனெனில் சொர்க்கத்தில் ஒரே ஒரு சூரியனோடு ஏழை போன்று இருக்க முடியாது – ஆயிரக்கணக்கான சூரியன்கள், இமயமலையைவிட பெரிதான தங்க மலை. இமயமலையே இரண்டாயிரம் மைல் நீளம் உடையது. சக்ரவர்த்தியால் கண்களை திறக்கவே முடியவில்லை. அவ்வளவு தகதகப்பு – பின் மெதுவாக கண்களை பழக்கப்படுத்திக்கொண்டு தனது பெயரை பொறிக்க சரியான ஒரு இடத்தைத் தேடினார். ஆனால் அவர் மிகவும் வியப்படைந்தார். அங்கு இடமே இல்லை. மலை முழுவதும் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அவரால் தனது கண்களையே நம்ப முடியவில்லை.
.
முதல் தடவையாக அவர் தான் யாரென்று உணர்ந்தார். இதுவரை ஆயிரம் வருடங்களில் ஒருமுறை மட்டுமே உருவாகக் கூடிய சிறப்பான மனிதனாக தன்னை நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால் காலம் முடிவற்றது. அதில் ஆயிரம் வருடங்கள் என்பது எந்தப்பெரிய மாறுதலையும் ஏற்படுத்தி விடாது. அது ஒரு பொருட்டே அல்ல. அதனால் ஏகப்பட்ட சக்ரவர்த்திகள் ஏற்கனவே இருந்திருக்கிறார்கள். அவ்வளவு பெரிய மலையில் இவருடைய சிறிய பெயரை எழுத இடமே இல்லை.
.
அவர் திரும்பி வந்தார். உன்னுடைய மனைவி, அமைச்சர்கள், தளபதி மற்றும் நெருங்கிய நண்பர்கள் என யாரையும் உன்னுடன் கூட்டிச் செல்ல வேண்டாம் என காவலாளி தடுத்தது ஏன் என இப்போது புரிந்தது. அவர்கள் இந்த காட்சியை பார்க்காமல் இருந்தது நல்லது. தங்களது சக்ரவர்த்தி ஒரு அரிய பிறவி என்றே அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கட்டும்.

அவர் காவலாளியை உள்ளே தனியே அழைத்து, அங்கே இடமே இல்லை என்பதைக் கூறினார்.
.
காவலாளி, இதைத்தான் நான் உங்களிடம் கூறினேன். நீங்கள் சில பெயர்களை அழித்துவிட்டு உங்களது பெயரை எழுதிவிட்டு வாருங்கள். அப்படித்தான் செய்திருக்கிறார்கள். என் வாழ்வில் பலர் இப்படி செய்வதை பார்த்திருக்கிறேன். எனது தந்தையும் இப்படி நடந்திருக்கிறது எனக் கூறியிருக்கிறார். எனது தாத்தா ஏன் எனது பரம்பரையில் யாருமே சுமிரு மலை காலியாக இருந்தோ, சிறிதளவு இடம் இருந்தோ பார்த்ததில்லை.
.
எப்போதுமே ஒரு சக்ரவர்த்தி வந்தால் அவர் சில பெயர்களை அழித்துவிட்டு தனது பெயரை எழுதுவார். இதுவரை இருந்த எல்லா சக்ரவர்த்திகளின் பெயரும் இதனுள் இருக்கிறது என்று கூறிவிட முடியாது. பலமுறை அழிக்கப்பட்டு பலமுறை பொறிக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் உங்களது பெயரை எழுதிவிட்டு பின் உங்களது நண்பர்களிடம் காட்ட விரும்பினால் அவர்களை உள்ளே அழைத்துச் செல்லுங்கள். என்றான்.
.
சக்ரவர்த்தி, இல்லை, நான் அவர்களிடம் காட்டவும் விரும்பவில்லை, என்னுடைய பெயரை நான் எழுதவும் போவதில்லை. அதனால் என்ன பயன் – ஒருநாள் யாராவது ஒருவர் வந்து அதை அழிக்கப் போகிறார். என்னுடைய முழு வாழ்வும் இப்போது பொருளற்றதாகி விட்டது. சொர்க்கத்தில் உள்ள சுமிரு மலையில் எனது பெயர் பொறிக்கப் படும் என்பதுதான் எனது ஒரே நம்பிக்கையாக இருந்தது. இதற்காகவே நான் வாழ்ந்தேன். இதற்காகவே நான் எனது வாழ்க்கை முழுவதையும் பணயம் வைத்தேன். இதற்காகவே நான் இந்த உலகம் முழுவதையும் கொல்லத் தயாராக இருந்தேன். ஆனால் இப்போது வேறு யார் வேண்டுமானாலும் வந்து எனது பெயரை அழித்துவிட்டு தங்களது பெயரை எழுதக்கூடும் எனும்போது அதில் எழுதுவதில் என்ன பொருளிருக்கிறது--- நான் அதில் எழுதப் போவதில்லை. என்றார்.
.
காவலாளி சிரித்தான். சக்ரவர்த்தி, ஏன் சிரிக்கிறாய் எனக் கேட்டார்.

காவலாளி, ஆச்சரியமாயிருக்கிறது. ஏனெனில் சக்ரவர்த்திகள் வந்து, இதைப் பார்த்துவிட்டு, கேட்டுவிட்டு, தங்கள் பெயரை எழுதாமல் திரும்பி போன கதையையும் நான் எனது தாத்தாவிடமிருந்து கேட்டிருக்கிறேன். நீங்கள் மட்டுமல்ல, ஒரு சிறிதளவாவது புத்திசாலித்தனம் உள்ள யாரும் இதையேதான் செய்வர். என்றான்.

Comments