Google

ஞானோதயம் - OSHO




ஞானோதயம்  
     
ஞானோதயம்  என்பது ஓர் உணர்வல்ல.

ஓர் எண்ணமல்ல.

பார்க்கப் போனால் ஞானம்  ஓர் அனுபவம்  அல்ல.

எல்லா அனுபவங்களும் கழிந்து போன நிலையில்  பிரக்ஞையின்  கண்ணாடி.

எந்தப் பிம்பமும் இல்லாமல்  போயிருக்க,

முழுக்கக் காலியாக இருக்க,

பார்ப்பதற்கென்று ஏதுமில்லாமல்,

நினைப்பது எதுவும்  இல்லாமல்,

உணர்வதற்கென்று ஏதுமில்லாமல்,

உன்னைச் சுற்றிப் பொருண்மை கொண்ட ஏதுமில்லாமல்,

வெறும்  காட்சி மட்டுமே நிலைத்துவிடும்
அந்த நிலைதான்  ஞானநிலை.
     
சிரமம், ஏறக்குறைய முடியவே முடியாது,
அதை விவரிப்பது இயலாத காரியம்.

ஆனந்தமாக இருக்கிறது என்றால் தவறான பொருள்  தந்துவிடும்.

ஆனந்தம்  என்பது துயரத்துக்கு  எதிர்மறையானது.

ஞானம்  என்பது  எதற்கும்  எதிர்மறையானதல்ல.

அது மோனம் கூட அல்ல.

ஏனென்றால்  மெளனம் என்றால் ஓசையின் மறுபக்கம்.

ஓசை என்ற எதிர்மறை இல்லையென்றால்

மெளனம் என்ற அனுபவம்  சாத்தியமாகாது.

எந்த ஓசையும் இல்லை.

எந்த இரைச்சலும் இல்லை.

ஒன்றின் அனுபவம் அல்ல அது.

ஏனென்றால்  ஒன்றே ஒன்று மட்டும்  நிலைத்திருக்கும்போது

ஒன்று என்பது இல்லாமல் போய்விடுகிறதல்லவா?

ஒன்றுக்கு ஏதாவது பொருளிருக்கும் என்றால்

இன்னொன்றொடு அல்லது பலவற்றோடு அதைப் பொருத்திப் பார்க்க வேண்டியிருக்கும்.

அது ஒளியல்ல.

ஏனென்றால்  அங்கே இருட்டில்லை.

அது இனிமை அல்ல.

ஏனென்றால்  அங்கே கசப்பு இல்லை.
         
அதைச் சொல்லி விளங்க வைக்க மனித மொழியில் வார்த்தை இல்லை.

ஏனென்றால் மொழியின் வார்த்தைகள் யாவும் துவைதத்தின் பாற்பட்டவை.

ஞானம்  என்பது  கடந்த நிலை.

எல்லா இருமையும் கடந்த நிலை.
         
அதனால்தான்  புத்தர்  அதைச் சூன்யம் என்றார்.

சூன்யம் என்றும்,  வெறுமை என்றும் சொல்லும்போது

வெற்றிடம் என்ற பொருளில் அவர் பேசவில்லை.

எல்லாப் பொருண்மையும் கழிந்த நிலை என்கிறார்.
       
உதாரணமாக, ஓர் அறையை எடுத்துக் கொள்.

அதிலிருந்து  தட்டுமுட்டுச் சாமான்கள்  எல்லாவற்றையும் அப்புறப்படுத்தி விட்டால்.....

அந்த அறை காலியாக இருக்கிறது என்பாய்.

முன்னர் அங்கே என்னென்ன இருந்ததோ அதுவெல்லாம் காலியாகிப் போய்விட்டன.

ஆனாலும்  அது நிறைந்துதான் இருக்கிறது.

வெறுமை  நிறைந்திருக்கும்  அதன் தன்மை பற்றி  ஏதும் சொல்ல முடியாது.

ஏனென்றால்  மனித மொழியில்  அந்த நிறைந்திருத்தலை விவரிக்க வார்த்தை இல்லை.

அதைப் பல நாறு ஆண்டுகளாகக் கடவுள்  என்று  சொல்லித் திரிந்திருக்கிறோம்.

ஆனால்  எல்லா  வார்த்தைகளும் ஏதோ ஒரு விதத்தில்  சரியானதாக இல்லாமல்  போய்தான் இருக்கிறது.
         
எப்படியிருக்கிறது என்று உனக்கு நான்  சொல்லி விளங்க வைக்க முடியாது.

ஆனால்  அதற்கான  வழியை உனக்குக் காண்பித்துத் தர முடியும்.

ஆழம் காண முடியாத அதற்குள் உன்னைத் தள்ளிவிட முடியும்.

அதுதான்  சாத்தியமான ஒரே காரியம். நீயும் சுவைக்கலாம்.

பிறகு என்னைப்போல அதைப் பற்றி  ஊமையாகிப் போவாய்.

எல்லா புத்தர்களும் அப்படி ஊமையாகிப் போனவர்கள்தானே.....!!!

ஞானோதயம் பற்றிப் பேசுவதென்பது இயலாத காரியம்.

பல காரணங்கள்.  இதுதான்  என்று சுட்டிக் காட்டும்படி ஏதுமில்லாதது.

தான் என்று யாரும் இருந்து அனுபவிக்காதது.

இருந்தால்தானே அதை விவரிக்க முடியும்.......!!!

பொருள் மறைந்து போய்விடுகிறது.

பொருளோடு அதை அனுபவிக்கிறவனும் மறைந்து  போகிறான். மறந்துவிடாதே.

பொருளும் அதை அனுபவிக்கிறவனும்  என்று  வந்துவிட்டாலேயே அங்கே இருமை வந்துவிடுகிறது.

ஒன்றாக இருக்கும்  இரண்டு.

ஆனால் பொருள்  இல்லை எனும்போது  அனுபவிக்கிறவனும்  இல்லாமல்  போகிறான்.

இதைத்தான் புத்தர் அநத்தம் என்பார்.

தான்  என்பது கழிந்த நிலை.

நான் என்பது இல்லாத நிலை.

பொருள்  என்று  ஏதும்  இல்லை.

அதைக் கவனிக்கிறவன் என்றும் யாரும்  இல்லை.

பிறகு என்னதான்  இருக்கிறது......???

முழுமை இருக்கிறது.

முழுமை அப்படியே இருக்கிறது.

ஆனால்  அந்த முழுமையைச் சுட்டிக் காண்பிக்கத்தான் முடியும்.

விவரிக்க முடியாது.

விவரணம் தர முடியாது.
         
இங்கே  நான்  செய்யக் கூடியதெல்லாம் அதை நோக்கி  நகர உனக்கு  உதவியாக இருப்பதுதான்.

அனுபூதி நிலைக்குப் போக வைப்பதுதான்.

ஆனால்  அது எப்படியிருக்கும் என்று  என்னை விவரிக்கக் கேட்காதே.

அதை உணர யாரும்  இல்லை.

அதில் உணர்வதற்கும் ஏதும் இல்லை.

பரிசுத்த மெளனம்.

ஆனால்  ஓசைக்கு எதிரிடையான மெளனம்  அல்ல.

பரிசுத்தமான அன்பு.

அதற்கு வெறுப்பைப் பற்றி  ஒன்றுமே தெரியாது.  முழுமை.

ஆனால்  உள்ளீடு ஏதுமற்ற முழுமை..

அதனால்தான்  வார்த்தைகள் பயனற்றுப் போகின்றன.

அதனால்தான்  மெய்ஞ்ஞானிகளின் வார்த்தைகள்  முரண்பட்டுத் தெரிகின்றன <3

<3 ஓஷோ <3

Comments