நம்பிக்கை என்று சொல்லும்போது, ...- OSHO
💢 நம்பிக்கை என்று சொல்லும்போது,
நம்பிக்கை -- அவநம்பிக்கை என்ற இருமை இல்லாத நிலை என்ற பொருளில் பேசுகிறேன்.
அன்பு என்று சொல்லும்போது
அன்பு -- வெறுப்பு என்ற இருமை இல்லாத நிலை பற்றிப் பேசுகிறேன்.
நீ நம்பிக்கை என்ற வார்த்தையைப் பயன்படுத்தும்போது
அவநம்பிக்கை இல்லாத நிலை என்று பொருள் கொள்கிறாய்.
அன்பு என்று சொல்லும்போது
வெறுப்பின் மறுபக்கம் என்று பொருள் கொள்கிறாய்.
எனவே அந்த இருமையில் மாட்டிக் கொள்கிறாய்.
இரண்டுக்கும் நடுவே சிக்கிச் சீரழிந்து போவாய்.
உன் வாழ்க்கை முழுக்க வேதனையாகிப் போகிறது.
நம்பிக்கை அருமையானது என்று உனக்குத் தெரிந்திருக்கிறது.
ஆனால் உன்னுடைய நம்பிக்கை அவநம்பிக்கை தாண்டியது அல்ல என்பதால்
அவநம்பிக்கை தோன்றத்தான் செய்கிறது.
உன்னுடைய நம்பிக்கை சந்தேகத்தின் மறுபக்கம்.
அதை கடந்தது அல்ல.
என்னுடைய நம்பிக்கையோ கடந்தது.
அதற்கு அப்பாலுள்ளது.
ஆனால் அப்படித் தாண்டிப் போக வேண்டும் என்றால்
இரண்டையும் கழித்துவிட வேண்டும் என்பதை மறக்கக் கூடாது.
இதில் எந்தத் தேர்வும் இல்லை.
உன்னுடைய நம்பிக்கை அவநம்பிக்கைக்குப் பதிலாக நீ தேர்ந்தெடுத்துக் கொண்டது.
என்னுடைய நம்பிக்கையோ எந்தத் தேர்வும் இல்லாத ஒரு விழிப்புணர்வு.
பார்க்கப் போனால் நம்பிக்கை என்ற வார்த்தையை நான் பயன்படுத்தக் கூடாதுதான்.
உனக்குக் குழப்பமாக இருக்கிறதல்லவா......???
வேறு என்ன செய்வது.....???
வேறு எந்த வார்த்தையை நான் பயன்படுத்துவது.....???
எல்லா வார்த்தைகளிலும் உனக்குக் குழப்பம்தான் மிஞ்சுகிறது.
நான் பேசுவது கூட ஆகாதுதான்.
ஆனால் நீ மெளனத்தின் மொழியைப் புரிந்து கொள்ள மாட்டாயே
நீ மெளனித்து விட வேண்டும் என்பதற்காகத்தான் நான் பேசுகிறேன்.
என்னுடைய கருத்தை மெளனத்தின் மூலமாக மட்டுமே உனக்குத் தர முடியும்.
மெளனத்தில்தான் சங்கமம் இருக்கிறது.
ஆனால் அது சாத்தியப்படுவதற்கு முன் உன்னோடு பேச வேண்டி இருக்கிறது.
உன்னிடம் கனிவாகப் பேசி மாற்ற வேண்டி இருக்கிறது.
அதை உன்னுடைய மொழியில்தானே செய்ய வேண்டும்
ஆனால் ஒன்றை நினைவில் கொள்வது மிகவும் பயனுடையதாக இருக்கும்.
உன்னுடைய வார்த்தைகளைப் பயன்படுத்துகிறேன்.
ஆனால் அவற்றுக்கு நான் தந்திருக்கும் பொருளில் என்னுடைய அர்த்தத்தை மறந்துவிடாதே.
நம்பிக்கை அவநம்பிக்கை இரண்டையும் தாண்டிப் போய்விடு.
அப்போது நம்பிக்கைக்குப் புதியதொரு சுவை இருக்கக் காண்பாய்.
அதில் அவநம்பிக்கையின் சுவடே இருக்காது.
ஒரு வெகுளித்தனம் மட்டுமே இருக்கும்.
இரண்டையும் தாண்டிப் போய்விடும் போது நீ மட்டுமே இருக்கப் போகிறாய்.
எந்த உள்ளீடும் இல்லாமல் உன்னுடைய பிரக்ஞை மட்டுமே இருக்கக் காண்பாய்.
தியானம் என்பது இதைப் பற்றியதுதான்.
ஆழ் நம்பிக்கையே தியானம் 💢
⛩ ஓஷோ
"தம்மபதம் பகுதி - 3" ⛩
Comments
Post a Comment