Google

நீங்கள் உங்கள் வெளிப்புறத்திலிருந்து ஓய்வு எடுக்க வேண்டும். - OSHO



நீங்கள்  உங்கள்  வெளிப்புறத்திலிருந்து ஓய்வு எடுக்க வேண்டும்.  ஓய்வில் முதல்  படி உடல்தான். நினைவு கொள்ளுங்கள்.  உடலைப் பார்க்க எவ்வளவு  முறை முடியுமோ அவ்வளவு  முறை  பாருங்கள்.  நீங்கள்  உங்கள்  உடலில்  எங்காவது ஒரு பதற்றத்தை சுமந்து  கொண்டிருக்கிறீர்களா? என்பதைக் கவனியுங்கள்.  கழுத்தில்,  தலையில், கால்களில் அதற்கு  விழிப்போடு ஓய்வு  கொடுங்கள்.
         நீங்கள்  உடலில்  எந்தப் பகுதிக்காவது சென்றால் நீங்கள்  வியந்து  போவீர்கள்.  அது கவனிக்கிறது. அதுதான்  உங்களைத் தொடர்கிறது. அது உங்கள்  உடல். கண்களை மூடிக்கொண்டு, உடலுக்குள் செல்லுங்கள்.  பாதத்திலிருந்து தலைவரை எல்லா  இடங்களிலும்  தேடுங்கள்;  எங்காவது பதற்றம்  இருக்கிறதா என்று  பாருங்கள்.  பிறகு  அத்தப் பகுதியிடம் பேசுங்கள்.  உங்களுக்கும் உங்கள்  உடலுக்கும் ஒரு பேச்சு  வார்த்தை  நடக்கட்டும். "எதுவுமில்லை,  அதைக் கண்டு  பயப்படாதே. பார்த்துக் கொள்ள  நான்  இருக்கிறேன். அதனால்  நீ ஓய்வு  எடு" என்று  சொல்லுங்கள்.  மெள்ள மெள்ள, நீங்கள்  அந்தத் தந்திரத்தைத் தெரிந்து கொள்வீர்கள்.  பிறகு உங்கள் உடல்  ஓய்வெடுக்கும்.
         பிறகு அடுத்தக் கட்டத்திற்குச் செல்லுங்கள்.  இன்னும்  கொஞ்சம்  ஆழமாக, மனதை ஓய்வெடுக்கச் சொல்லுங்கள்.  உங்கள் உடல் கேட்குமென்றால், மனமும்  கேட்கும். ஆனால்  நீங்கள்  உங்கள்  மனதிலிருந்து துவக்க முடியாது.  நீங்கள்  ஆரம்பத்திலிருந்துதான் துவக்க வேண்டும்.  நீங்கள்  நடுவிலிருந்து துவக்க முடியாது.  பலர் மனதிலிருந்து  துவக்குகிறார்கள்; தோற்றுப் போகிறார்கள். காரணம்  அவர்கள்  தவறான இடத்திலிருந்து  துவக்குகிறார்கள். எல்லாமே சரியான ஒழுங்கில் நடைபெற வேண்டும்.
        நீங்கள்  உங்கள்  உடலை தன்னால் ஓய்வு பெறச் செய்யும் திறனைப் பெற்று  விட்டால் பிறகு நீங்கள்  மனத்தை தன்னால் ஓய்வு பெறச் செய்ய முடியும்.  மனம் அதிக சிக்கலான நிகழ்வு. உங்கள்  உடல் நீங்கள்  சொல்வதைக் கேட்கிறது என்கிற நம்பிக்கை  உங்களுக்கு  வந்துவிட்டால், உங்களுக்கு உங்கள்  மீதே ஒரு புதிய  நம்பிக்கை  ஏற்படும். இப்போது  உங்கள்  மனம்  கூட நீங்கள்  சொன்னதைக் கேட்கும். மனதோடு சற்று  அதிக நேரம்  பிடிக்கும். ஆனால்  அது நடக்கும்.
         உணர்வுள்ள, உணர்ச்சிகளின் உலகம் என்பது மிகவும்  சிக்கலானது.  அதிக நுட்பமானது.  ஆனால் இப்போது  நீங்கள்  நம்பிக்கையோடு நகர்வீர்கள். உங்கள்  மீதே ஒரு பெரிய நம்பிக்கையுடன். இப்போது அது சாத்தியம் என்பது உங்களுக்குத் தெரியும்.  உங்கள்  உடலோடு அது  சாத்தியம் என்றால், மனத்தோடும் சாத்தியம்.  பிறகு  இதயத்தோடும் சாத்தியம்.  பிறகுதான், நீங்கள்  இந்த மூன்று  படிகளையும் கடந்து  விட்டால், நீங்கள்  நான்காவதற்கு அடியெடுத்து  வைக்க முடியும்.  இப்போது  உங்கள்  இருத்தலின் உள்ளார்ந்த  மையத்திற்குப் போக முடியும்.  அது உடல், மனம், இதயத்திற்கு அப்பாற்பட்டது. உங்கள்  இருத்தலின் சரியான  மையம்.  நீங்களும் ஓய்வு பெற முடியும்.  அந்த ஓய்வுதான் மிகச் சிறந்த சந்தோஷத்தை உச்ச கட்டத்தை, பரவசத்தை ஏற்றுக் கொள்ளுவதைக் கொண்டு  வரும். நீங்கள்  முழு பேரின்பத்தோடு, உற்சாகத்தோடு இருப்பீர்கள்.  உங்கள்  வாழ்க்கை  ஒரு நடன தன்மை கொண்டதாக இருக்கும்.
--ஓஷோ--
மருத்துவத்திலிருந்து மனமற்ற நிலை வரை: பக்கம் 144 & 145.

Comments