Google

நூறு கால் பிராணியின் கதை: OSHO



நூறு கால் பிராணியின் கதை:
      இது தன்னுடைய நாறு கால்களைக் கொண்டு நடந்து  செல்வதால் இதற்கு நாறுகால் பிராணி என்று  பெயர்  வந்தது. நூறு கால்களில் நடப்பது மிகவும்  அதிசயமானது. இரண்டு கால்களில் நடக்கும் போதே தடுமாற்றம்  ஏற்படுகிறது.  இப்படி இருக்கையில் நூறு  கால்களில்  நடந்து செல்வது மிகவும்  கடினமான காரியமாகும். ஆனால்  இந்த நூறுகால் பிராணி வெகு சாதாரணமாக நடந்து  செல்லும்.
          ஒரு நரிக்கு இதைப் பார்த்ததும் மிகவும்  ஆச்சரியம்  ஏற்பட்டது. நரி ஒரு சாதாரண கிராமத்தானின் மனதைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது. நரி பெரிய தர்க்கவாதி. நரி இதை மிகவும் உன்னிப்பாக கவனித்தது, அதனால்  இதை நம்ப முடியவில்லை.  அது நூறுகால் பிராணியைப் பார்த்துக் கேட்டது: "எப்படி உன்னால் நூறுகால்களுடன் நடக்க முடிகிறது.  எந்தக் காலை முன்னுக்கு வைக்க வேண்டும்,  எந்தக்  கால் அதைப் பின்பற்ற வேண்டும் என்பதையெல்லாம்  எப்படி  சமாளிக்கிறாய்? உன்னால் எப்படி  எவ்வித தங்கு தடையுமில்லாமல் இவ்விதம்  நடக்க முடிகிறது?"
         அதற்கு நூறுகால்  பிராணி சொன்னது: "என் வாழ்நாள் முழுவதும் இப்படித்தான்  நடந்து கொண்டிருக்கிறேன், ஆனால்  என்னால் எப்படி இவ்விதம்  நடக்க முடிகிறது  என்பதைப்பற்றி எண்ணிப் பார்த்ததே இல்லை.  எனக்கு  சற்று நேரம்  கொடு, யோசித்துச் சொல்லுகிறேன்".
நூறுகால்  பிராணி கண்களை மூடிக்கொண்டு  முதல் முறையாக கவனிக்க ஆரம்பித்து இரண்டாகப் பிளவுபட்டுவிட்டது.  மனம் கவனிப்பராகவும், தான்  ஒரு கவனிக்கப்படும் பொருளாகும் ஆக இரண்டாக ஆகிவிட்டது.  அது எப்பொழுதுமே வாழ்க்கையில்  முழுமையாக  வாழ்ந்து வந்தது, நடந்து வந்தது. அதைக் கவனிப்பதற்கு யாரும்  அங்கில்லை. இரண்டாகப் பிளவு படவில்லை.  அது ஒரே அமைப்பாகச் செயல்பட்டு வந்தது. இப்பொழுதுதான் முதல் முறையாகப் பிளவு ஏற்பட்டது.  அது தன்னைத்தானே பார்த்துக் கொண்டது. அது பார்க்கப்படும் போருளாகவும், அதுவே பார்ப்பதுவுமாக இரண்டாக ஆகிவிட்டது.  இப்படி இரண்டாக ஆகி நடந்து பார்த்தது. அது மிகவும்  சிரமமாக இருந்தது.  அது நடக்க முடியாமல் கீழே விழுந்து  விட்டது. எப்படி நூறு  கால்களைச் சமாளிக்க  முடியும்?

           நரி சிரித்தது. "நான் இது  மிகவும் கடினம் என்று  எண்ணினேன், அது உண்மையாகிவிட்டது.
          நூறுகால்  பிராணி அழ ஆரம்பித்து விட்டது.  அது அழுது கொண்டே சொன்னது: "எனக்கு இதற்குமுன்பு  வரை நடப்பது கடினமானதாக இருந்ததில்லை, ஆனால்  நீ வந்து பிரச்சனையை உருவாக்கிவிட்டாய். இப்பொழுது  இனி என்னால் நடக்க முடியாது போல் தோன்றுகிறது."
          மனம் இருப்புணர்வுக்குள் வந்து விட்டது .நீ பிளவுபடும்போது மனம் ஆன்மாவுக்குள் வந்துவிடுகிறது.  இப்படிப்பட்ட பிளவினால்தான் மனம் உயிர் வாழ்கிறது. இதனால்தான்  கிருஷ்ணமூர்த்தி  சொல்லிக் கொண்டே இருக்கிறார், 'எப்பொழுது கவனிப்பவன் கவனிக்கப்படுகிறானோ, அப்பொழுது நீங்கள்  தியானத்தில்  இருக்கின்றீர்கள்.'
        இதற்கு எதிரானது நூறுகால்  பிராணிக்கு நிகழ்ந்து விட்டது. முழுமை  இழக்கப்பட்டு விட்டது. அது இரண்டாக ஆகிவிட்டது. கவனிப்பவன், கவனிக்கப்படுபவன் ஆக பிளவு ஏற்பட்டுவிட்டது. எழுவாயாகவும் செயல்படுபொருளாகவும், எண்ணுபவனாகவும், எண்ணமாகவும் பிளவு ஏற்பட்டுவிட்டது.  பிறகு எல்லாம் தொந்தரவுக்குள்ளாகி விடுகிறது.  பிறகு ஆனந்தம்  இழக்கப்பட்டு  விடுகிறது,  ஓட்டம் நின்று விடுகிறது.  பிறகு இறுக்கமானவனாகி விடுகிறான்.
           எப்பொழுதெல்லாம்  மனம் வந்து விடுகிறதோ, அப்பொழுது  அது அடக்கி ஆள்வதற்கான சக்தியாக வருகிறது,  ஒரு நிர்வாகியைப் போல. அது ஒரு பேராசானாக வரவில்லை,  ஒரு நிர்வாகியைப் போல் வருகிறது.  நிர்வாகியை ஒதுக்கி வைத்தால்தான்  பேராசானைப் பார்க்க  முடியும்.  நிர்வாகி, நீங்கள்  பேராசானை நெருங்குவதை அனுமதிக்க  மாட்டார்.  நிர்வாகி வாசற்படியிலேயே நின்று கொண்டு  நீங்கள்  பேராசானைச் சந்திப்பதற்குத் தடையாக இருப்பார். எல்லா நிர்வாகிகளுமே தவறாகத்தான் நிர்வாகம் செய்வார்கள்.  மனம் இது மாதிரி தவறான நிர்வாகம் செய்வதில் பெரும்  சாதனையே செய்துள்ளது.
         பாவம்  இந்த நூறுகால்  பிராணி!  அது எப்பொழுதும் மகிழ்ச்சியாகவே இருந்தது. அதற்கு எவ்வித பிரச்சனையும்  இருந்தது இல்லை. அது வாழ்ந்து  கொண்டிருந்தது, நகர்ந்து கொண்டிருந்தது, எல்லாமே நிகழ்ந்து கொண்டிருந்தது; அங்கு எவ்வித பிரச்சனையும்  இருந்தது கிடையாது;  ஏனெனில்  மனம் அங்கு  இல்லை.  மனம் பிரச்சனையுடன் வந்தது, கேள்வியுடன் வந்தது.  உங்களைச் சுற்றிலும் அனேக நரிகள் உள்ளன. அவைகளிடம் ஜாக்கிரதையாக இருங்கள்  -- தத்துவவாதிகள், தர்க்கவாதிகள், கொள்கைவாதிகள், பேராசிரியர்கள் உங்களைச் சுற்றிலும் இருக்கிறார்கள் -- நரிகள். அவர்கள் கேள்விகளைக் கேட்டு  உங்களைத் தொந்தரவுக்கு ஆளாக்குகிறார்கள்.
 -- ஓஷோ --

Comments