Google

ஜென் வழி.



ஜென் வழி.

அங்கே பல்லாயிரக்கணக்கான பிக்குகள், புத்தரின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.ஆண்டுக்கொருமுறை கூடும் சங்கம் அது. தூர தூர நாடுகளிலில் இருந்தெல்லாம் நெடும் பயணம் மேற்கொண்டு அவர் மொழியைக் கேட்க வந்தவர்கள் அவர்கள்.
அன்று அவர் வழங்கப் போகும் ஞானப் பிச்சைக்காக அவர்கள் இதயப் பாத்திரங்கள் காத்திருக்கின்றன ஒரு தவிப்புடன்.

காலை இளங்காற்று மெல்லத் தவழ்ந்து வருகிறது. மரங்களின் இலைகள் மெதுவாகப் பேசிக் கொள்கின்றன. பிக்குகள் மௌனம் காத்து, புத்தர் வரும் வழியில் விழி பதித்துக் காத்திருக்கிறார்கள்.

புத்தர் வருகிறார்.

அவர் கைகளில் ஓர் அழகிய தாமரை மலர்.
அமைதியாக வந்து மேடை மேல் அமருகிறார்.

மடியில் கை வைத்து, கைகளிலுள்ள தாமரையைப் பார்த்தபடி அமர்ந்தவர், பேசவில்லை. எல்லோரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

புத்தர் தலை நிமிரவும் இல்லை, பேசவும் இல்லை.
பிக்குகளுக்கு வியப்பு.

ஒரு வேலை புத்தர் தியானத்தில் மூழ்கி விட்டாரோ?

இல்லை. அவர் கண்கள் மூடவில்லை. தாமரை மலரையல்லவா பார்த்துக் கொண்டிருக்கிறார்! என்ன சிந்தித்துக் கொண்டிருக்கிறார்? ஏன் மௌனமாக இருக்கிறார்? மௌனம் கலைந்த பின் என்ன சொல்லப் போகிறார்? நேரம் நகர்ந்து கொண்டுருந்தது.

புத்தர் சிலை போல, அப்படியே தான் அமர்ந்திருந்தார்!

நேரம் போய்க் கொண்டே இருந்தது.

பிக்குகளின் கூட்டத்தில் மெல்லிய சலசலப்பு. பொறுமை இழந்ததன் முணுமுணுப்பு.

'என்ன ஆயிற்று? என்ன ஆயிற்று? ' என்ற வினாக் குறிகள் அவர்களின் பார்வைகளில்.

என்றாலும் புத்தர் தலை நிமிர்ந்து மௌனம் கலைத்துப் பேசுவார் என்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.

எவ்வளவு தொலைவு எவ்வளவு காலம் எவ்வளவு துன்பங்கள் பட்டு வந்ததெல்லாம் கௌதமரின் ஞான மொழி கேட்பதற்காக அல்லவா? அவர் ஏன் தங்கள் முன் இப்படி அமர்ந்திருக்கிறார்?

யாருக்கும் ஒன்றும் புரியாமல் அமர்ந்திருக்கும் போது, கனத்த மௌனத்தைக் கலைத்துக் கொண்டு ஒரு சிரிப்பொலி எழுந்தது.

எல்லோரும் திகைத்துப் போய் பார்த்தார்கள். சிரித்தவன் புத்தரின் சீடன் மகா காஸ்யபன்.

என்ன காரியம் செய்து விட்டான், காஸ்யபன்! போதி சத்துவரின் முன் இப்படி மரியாதைக் குறையாக சிரிப்பதா? அவர் மௌனத்தை கேலி செய்வதைப் போல அல்லவா இருக்கிறது, அந்தச் சிரிப்பு!

பிக்குகள் திகைத்துப் பார்க்கையில், காசியபன் சிரிப்பை நிறுத்தாமலும், மேலும் அதிகமாகவும் , சத்தமாககவும் பைத்தியக்காரனைப் போல சிரித்துக் கொண்டே இருந்தான்.!

புத்தர் தலை நிமிர்ந்தார்.

சிரித்துக் கொண்டுருக்கும் காஸ்யபன் பக்கம் திரும்பினார். அவனைப் பார்த்தார். கை நீட்டி அருகில் வருமாறு அழைத்தார்.

காஸ்யபன் சிரித்தபடியே எழுந்து புத்தரின் அருகில் சென்று நின்றான். அப்போதுதான் அவன் தன சிரிப்பை நிறுத்தினான்.

புத்தர் தம் கையிலிருந்த தாமரையை அவனுக்கு தந்தார். பிறகு கூட்டத்தினரைப் பார்த்துச் சொன்னார்:

" நான் வார்த்தைகளால் சொல்லக் கூடியவற்றையெல்லாம், இதுவரை உங்களுக்குச் சொல்லி வந்திருக்கிறேன். வார்த்தைகளால் சொல்ல முடியாதவற்றை இப்போது நான் காஸ்யபனுக்கு வழங்கிவிட்டேன்.!"

இப்படித்தான் மகா காச்யப்பர் முதல் ஜென் குரு ஆனார்.

ஜென் தனது ஞானத்தை கூறாது இரகசியமாகவே வைத்து இருக்கிறது. வார்த்தை வலைக்குள் அகப்படாமல் சொல்லாமற் சொல்லி உணர்த்துவது ஜென் வழி.

Comments