ஸூபி கதை - OSHO
ஸூபி கதை.
சிலர் ஒரு ஸூபி மடத்தைத்தாண்டிப் போய்க்கொண்டிருந்தார்கள்.
உள்ளே என்னதான் நடக்கிறது என்று தெரிந்துகொள்ள எட்டிப்
பார்த்தார்கள். ஒரே சத்தம். இரைச்சல்.
குதித்து ஆடிக்கொண்டு இருந்தார்கள்.
சரிதான் பைத்தியம் பிடித்தவர்கள் என்று சொல்லிக் கொண்டார்கள்.
"இது ஒரு பைத்தியக்காரத்தனமான ஆசிரமம். இங்கே வந்தவர்களுக்கு
ஞானோதயம் கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால்
இங்கேயோ இவர்கள் பைத்தியம் பிடித்துத் திரிகிறார்கள்." அத்தனை
இரைச்சலுக்கும் நடுவே குரு உட்கார்ந்திருந்தார். அத்தனை பைத்தியக் காரத்தனமான காட்டுக் கூச்சலுக்கு நடுவில் அமைதியாக
உட்கார்ந்திருந்தார்.
இவர் ஏன் அமைதியாக உட்கார்ந்திருக்கிறார் என்று சிந்தித்தார்கள். அவர்களுள் ஒருவர், "அவரு பாவம். களைப்பா இருக்கும். எத்தனை நேரமா இந்தப் பைத்தியக்காரத்தனத்தைக் கேட்டுக்கிட்டு இருக்காரோ!''
என்றான்.
சில மாதங்களுக்குப் பின் அவர்கள் மறுபடி அந்த ஆசிரமத்தைத்
தாண்டிப்போக வந்தது. அந்தப் பைத்தியக்காரர்களுக்கு என்ன ஆகிப் போயிருக்கும் என்று எட்டிப் பார்த்தார்கள். அப்போது அவர்கள்
அனைவரும் மிக மெளனமாக உட்கார்ந்திருப்பதைப் பார்த்தார்கள். ஒரு வார்த்தைகூட இல்லை, வெகுவாக அமைதி. உள்ளே போனவர்கள் பயந்து போனார்கள். யாரும் இல்லைபோல இருக்கிறதே. எங்கேயாவது பைத்தியம் பிடித்து ஓடிவிட்டார்களோ? உள்ளே போனபோது அனைவரும்
இருக்கக் கண்டார்கள். ஆனால் மிக மெளனமாக இருக்கக் கண்டார்கள்.
சில மாதங்களுக்குப் பின் மறுபடி அந்த ஆசிரமத்தை அவர்கள் கடக்க
நேர்ந்தது. மீண்டும் அங்கேபோய்ப் பார்த்தார்கள். யாரையும் காணோம்.
குரு மட்டுமே இருந்தார். என்ன நடக்கிறது இங்கே என்று அவரிடம்
விளக்கம் கேட்டார்கள்.
''முதல் தடவை நீங்க இந்த வழியா போறப்போ அவங்க எல்லாம்
உள்ளே இருக்கறதை வெளியே கொட்டிக்கிட்டு இருந்தாங்க. ஆரம்ப கால சாதகர்கள் அப்போ.
அடுத்த தடவை போனப்போ அவர்கள் என்ன ஏது என்று விவரம் தெரிஞ்சுக்கிட்டாங்க. அமைதியாயிட்டாங்க, அதான்.
மெளனமா உட்கார்ந்திருந்தாங்க. செய்யறதுக்கு ஒண்ணும் இல்லே.
மூணாவது தடவை போனப்போ அவங்க இங்கே இருக்க வேண்டிய
அவசியம் தீர்ந்து போச்சு. உலகத்துலே எங்கே போனாலும் மௌனமா இருக்க முடியும்னு ஆகிப் போச்சு, அதனாலே அவங்களை அனுப்பி
வெச்சுட்டேன்.
அடுத்த ஆளுக வர்ற வரைக்கும் காத்திருக்கிறேன்.
அடுத்த தடவை நீங்க இந்த வழியிலே போறப்போ பைத்தியக்காரத்தனத்தை மறுபடி
பார்ப்பீங்க" என்றார்.
-------------------------------------
கேளுங்கள் என்று உங்களைத் தூண்டக் காரணம் உங்களுடைய
மனதை வெளியே கொண்டு வரணும்கறதுதான். நீங்களாகவே மெளனித்துப் போகலாம்.
என்னுடைய பதில் எல்லாம் உங்களுடைய கேள்விகளுக்குப்
பதில் சொல்லும் முயற்சியே இல்லை.
அவற்றைக் கொன்றுவிடும் முயற்சிதான்.
அவற்றைக் கொலை செய்துவிடும் முயற்சிதான்
நான் ஒரு கொலைகாரனாக இருக்கலாம். ஆனால் நான் போதிக்கிறவன் அல்ல.
உங்களுக்கு நான் எதையும் சொல்லித்தரப் போவதில்லை. உங்களுடைய
கேள்விகளை அழிக்கிறேன்.
*ஓஷோ*
Comments
Post a Comment