குழப்பம்நல்லதுகுழம்புங்கள்! - OSHO
குழப்பம்நல்லதுகுழம்புங்கள்!
ஆன்மீகப் பாதையில் நடையிட நடையிட அதிகமாகக் குழம்புகிறீர்கள் என்பது ஒரு நல்ல அறிகுறி. குழப்பம் ஒரு வகையில் நல்லது. முட்டாள் தனமான தீர்மானங்களில் வாழ்வதைவிட குழப்பம் நல்லதுதான். நீங்கள் எடுத்த முட்டாள்தனமான தீர்மானங்களால் உங்கள் வாழ்க்கையில் வசதிகள் இருந்திருக்கும். ஆறுதல் இருந்திருக்கும். இவையெல்லாம் ஒரு போலியான பாதுகாப்பு உணர்வுதான்.
இப்போது நீங்கள் ஆன்மீகப் பாதையில் நடையிடுகிறபோது எல்லாமே பதட்டமாக மாறுகிறது. வசதி என்று நீங்கள் நினைத்தது எல்லாம் இப்போது மூடத்தனமாகத் தெரிகிறது. நீங்கள் மிகவும் மதித்துப் போற்றிய விஷயங்கள் எல்லாம் முக்கியமில்லாதவைகளாகவும், பொருட்டில்லாதவையாகவும் போய்விடுகின்றன. எல்லாமே தலைகீழாகிவிட்டது.
ஜென் மார்க்கத்தில் ஓர் அழகான பழமொழி உண்டு. "நீங்கள் அறியாமையில் இருக்கும்பொழுது மலைகள் மலைகளாகவும், நதிகள் நதிகளாகவும், மேகங்கள் மேகங்களாகவும், மரங்கள் மரங்களாகவும் தெரிகின்றன. ஆனால் ஆன்மீகப் பாதையில் நடையிடத் தொடங்கும்போது மலைகள் வெறும் மலைகள் அல்ல. நதிகள் வெறும் நதிகள் அல்ல. மேகங்கள் வெறும் மேகங்கள் அல்ல. மரங்கள் வெறும் மரங்கள் அல்ல. நீங்கள் ஞானமடைந்துவிட்டால், மறுபடியும் மலைகள் மலைகளாகவும், நதிகள் நதிகளாகவும், மேகங்கள் மேகங்களாகவும், மரங்கள் மரங்களாகவும் தென்படுகின்றன" என்று சொல்வார்கள். அறியாமையிலிருந்து ஞானத்திற்கான பயணம் ஒரு முழு வட்டம். தொடங்கிய இடத்திற்கே திரும்புகிறீர்கள் என்றாலும் விவரிக்க முடியாத, வித்தியாசமான உலகத்தை உணர்வீர்கள்.
காலையிலே பொங்கல் சாப்பிட்டீர்கள், காபி குடித்தீர்கள், அதுதான் எல்லாம் என்று எண்ணிக் கொண்டிருந்தீர்கள். உங்கள் காலை உணவு என்ன என்பதுதான் முழுமையான இன்பம் என்று கருதிக் கொண்டிருந்தீர்கள். இப்பொழுது எதுவுமே ஒரு பொருட்டல்ல. அது உண்மையிலேயே பொருட்டாக இருக்குமேயானால் உங்களுக்கு எப்படி குழப்பம் நேரும்? குழப்பம் வருகிறது என்றாலே உங்களுக்கு ஒன்று தெரிந்திருக்கவில்லை இல்லையா? பாதுகாப்புக்காகவும், வசதிக்காகவும் தவறான முடிவுகளை எடுத்து வந்திருக்கிறீர்கள். உங்கள் வாழ்க்கையின் அத்தனை மகிழ்ச்சிகளையும் ஒருமுறை கவனமாகப் பரிசீலியுங்கள். வெளியில் மகிழ்ச்சி இருக்கும். ஆனால் உள்ளே எங்கேயோ ஒருவித வேதனை எல்லவற்றிலும் இருந்துகொண்டே இருக்கும். அந்த வலி நீண்டகாலமாக அடக்கி வைக்கப்பட்டிருக்கிறது.இந்த வலி ஒன்று உள்ளே இருக்கின்றது என்ற அறிவு வருவதற்கே பலருக்கு பல பிறவி எடுக்க வேண்டியிருக்கிறது
ஓஷோ .
💥😍👍
Comments
Post a Comment