Google

கடவுளின் சொல்லும் மனிதனின் சொல்லும் - மிர்தாதின் புத்தகம்

மிர்தாதின் புத்தகம்: (அத்தியாயம் 5):


கடவுளின் சொல்லும் மனிதனின் சொல்லும்:
'உலை' என்பது கடவுளின் சொல். படைப்பதற்காக அது உருக்குகிறது. பிறகு ஒன்றாய்க் கலக்கிறது. தகுதி படைத்ததென்று எதையும் அது ஏற்றுக் கொள்வதுமில்லை; தகுதியற்றதென்று எதையும் அது தள்ளுபடி செய்துவிடுவதுமில்லை.
புரிதலின் ஆத்மாவை அது பெற்றிருப்பதால், தானும் தனது படைப்பும் ஒன்றுதான் என்பதை அது பூரணமாகப் புரிந்து கொண்டிருக்கிறது. பகுதியை ஒதுக்கிவிடுவது என்பது முழுமையை ஒதுக்கிவிடுவது என்பதையும், முழுமையை ஒதுக்கிவிடுவது என்பது தன்னையே புறக்கணிப்பது ஆகும் என்பதையும் அது புரிந்தே வைத்திருக்கிறது.
அதனால், பொருளும், பொருளாற் பொருந்தும் பயனும், பொருட் காரணமும், என்றும் ஒன்றே.
'தொட்டில்' -- என்பது மனிதனின் சொல். பிடிப்பதையும் அடிப்பதையுமே இது உருவாக்குகின்றது. இவனை நண்பன் என்பதும், அவனைப் பகைவன் என்பதும் இதன் வேலை. ஆனால், அதனுடைய நேற்றைய நண்பன், இன்றைய பகைவன் ஆகிவிடுகிறான்; இன்றைய பகைவன், நாளைய நண்பன் ஆகிவிடுகிறான். அடிக்கடி இப்படித்தான் நிகழ்கிறது.
கொடூரமானவர் மீது பொங்கி எழுந்து போர் தொடுப்பதன்மூலம், மனிதன் தனக்குத்தானே எதிராகத் திரும்பிவிடுகிறான். மனிதனிடம் புனித ஆத்மா இல்லாமையே இதற்குக் காரணம். அவனும், அவன் படைப்பும் ஒன்றே என்பதை அது மட்டுமே விளங்க வைக்கும். அப்போது, பகைவனை ஒதுக்குவது நண்பனை ஒதுக்குவதாகத் தெரியும். பகை, நட்பு -- என்ற இரு சொற்களுமே அவனுடைய 'நானின்' படைப்புத்தான்.
ஒன்று,பாவமானது என்று உங்களால் வெறுத்து ஒதுக்கப்படுவது, இன்னொருவரால் விரும்பி ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும் ஆகும். அது அவரால் நல்லதாகக் கூடக் கருதப்படலாம்.
ஒன்று, ஒரே சமயத்தில், சுயத்தை மீறிய இரண்டாக இருக்க முடியும். இதுவோ அல்லது அதுவோ அல்ல, ஒன்றைப் பாவமாகவும், புனிதமாகவும் கருதுவது. உங்களது 'நான்' தான் பிளவுபட்டு அப்படிப் பார்க்கிறது.
படைப்பது எதுவோ, அது படைக்காமல் செய்யவும் முடியும் என்பதை, நான் உங்களுக்குச் சொன்னேனல்லவா?
ஒரு பகைவனை நீங்கள் படைப்பது போலவே, அவனை அவ்வாறு படைக்காமலும் இருக்க முடியும். அல்லது, அவனை நண்பனாக மறுபடைப்புச் செய்யவும் முடியும். அதற்கு, நீங்கள் முதலில் உலையாக வேண்டும். அதற்கு உங்களுக்கு, புரிதலின் ஆத்மா துணை வேண்டும்.
அதனால், நான் உங்களுக்குச் சொல்ல விரும்புவது இதுதான். நீங்கள் பிரார்த்தனை என்று எதாவது செய்ய விரும்பினால், முதலும் முடிவுமாக, புரிதலை வேண்டிப் பிரார்த்தனை செய்யுங்கள்.
தொட்டிலில் கிடப்பவர் எப்போதும் என் தோழர்களாக இருப்பதில்லை. கடவுளின் சொல் 'வாழ்க்கை' என்பதுதான். எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து இணைக்கவல்ல தீயுலைதான் வாழ்க்கை. எல்லாமே இதில் சமநிலைப்பாட்டில் இருக்கின்றன, சரியான சமநிலையில். எல்லாமே, அவற்றைப் படைத்தவனுக்குச் சமம். அதாவது, புனித முத்திரித்துவத்திற்கு. அதில் ஒன்று உங்களுக்கு எவ்வாறு அதிக மதிப்புடையதாகும்?
தொட்டில் பிள்ளைகள் எப்போதும் என் தோழர்கள் அல்லர். நீங்கள் அப்படித்தான் ஒரே உயரத்தில் ஒரே நிறையில், முழுதும் பரவி, முழுதும் தழுவி நிற்கிறீர்கள். உங்களுக்குள் உலைத் தீ இல்லை.
என் தோழர்களே, தொட்டில் குழந்தைகளாக இராதீர்கள். அந்தச் சொல்லின் ஞானப் பொருளைத் தேடிக் கண்டடையுங்கள்.
அப்போது, உங்களது சொந்தச் சொல்லின் பொருள் புலப்படும். அதன் பொருள் புலப்படும்போது, உங்கள் தொட்டில்களை நெருப்புக்குள் வீசி எறிந்துவிடுவீர்கள். உங்களது சொல்லும், கடவுளின் சொல்லும் ஒன்றே. உங்களது சொல் மட்டும் திரைகளால் மூடப்பட்டுக் கிடக்கிறது.
அந்தத் திரைகளை இந்த மிர்தாத் விலக்கிவிடுவான்.
காலம் கடந்த 'காலம்' தான் கடவுளின் சொல். வெளியெல்லை கடந்த 'வெளி'தான் கடவுளின் சொல். நீங்கள் கடவுளுடன் இல்லாத காலமொன்று உண்டா என்ன? நீங்கள் கடவுளுடன் இல்லாத இடமொன்று உண்டா என்ன?
அப்படியிருக்க, நீங்கள் ஏன், ஆதியந்தமற்ற காலத்தை மணி நிமிடங்களாலும் பருவ காலங்களாலும் விலங்கு பூட்டி வைத்திருக்கிறீர்கள்? அங்குலங்களாலும், மைல்களாலும், வெட்ட வெளியை ஏன் பட்டியில் அடைத்துக் காக்கிறீர்கள்?
பிறப்பற்ற 'வாழ்வு' தான் கடவுளின் சொல். அதனால், அது இறப்பும் அற்றது. அதனால், உங்கள் வாழ்வு, எதற்காகப் பிறப்பும் இறப்பும் கொண்டதாக இருக்க முடியும்? நீங்கள் கடவுளின் வாழ்க்கை வாழவில்லையா என்ன? மரணமிலாப் பெருவாழ்வு, மரணத்திற்கு மூலகாரணம் ஆகிவிடுமா என்ன?
கடவுளின் சொல்லில், எல்லாம் அடங்கி இருக்கின்றன. அங்கே தடைமதில்கள் இல்லை; வேலிகள் இல்லை. அப்படியிருக்க, தடைமதில்களையும், வேலிகளையும் எதற்காக வாடகைக்கு வாங்கிக் கொண்டிருக்கிறீர்கள்?
நான் உங்களுக்குச் சொல்வது இதுதான்: உங்களது எலும்பும், தசையும், உங்களது எலும்பும் தசையும் மட்டுமல்ல. எண்ணற்ற கைகள் உங்கள் உடலுக்குள் புதைந்துள்ளன.மண்ணிலும் வானத்திலும் முங்கி எழுந்த கைகள் அவை. அவற்றால் உருவான உங்கள் எலும்பும், தசையும், திரும்பவும் மண்ணுக்கும், வானத்திற்குமே போய்ச் சேர்கின்றன.
உங்கள் கண்களில் தோன்றும் ஒளி, உங்களது ஒளி மட்டுமல்ல. கதிரொளியை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் அனைவரின் ஒளியும் அதுதான். எனக்குள் நீங்கள் பார்ப்பது என்னுடைய ஒளியைத்தான். உங்கள் கண்களில் நான் பார்ப்பதும் என் ஒளியைத்தான். நான் இருளாக இருந்தால், என்னைக் காணும் உங்கள் கண்களும் இருளடையும்.
உங்கள் நெஞ்சிலிருந்து எழும் மூச்சு உங்கள் மூச்சு மட்டுமல்ல. எல்லாருடைய மூச்சும் அதுதான். உங்களுக்குள் உலவும் மூச்சு ஆதாம் விட்ட மூச்சும்கூடத்தான் அல்லவா? உங்கள் இதயத்தின் துடிப்பில், ஆதாமின் இதயத் துடிப்பும் ஒலிக்கவில்லையா?
உங்கள் எண்ணங்கள் எல்லாம் உங்கள் எண்ணங்கள் மட்டுமல்ல. கடலளவு பொதுச் சிந்தனைகள், அவற்றைத் தமது என்று உரிமை பாராட்டும். அதனால், சிந்திக்கும் எல்லா உயிர்களும், அந்தக் கடலை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றன.
உங்கள் கனவுகள், உங்களுடையவை மட்டுமல்ல. உங்கள் கனவுகளில், பிரபஞ்சமே கனவு காண்கின்றது.
உங்கள் வீடு, உங்கள் வீடு மட்டுமன்று. அது உங்கள் விருந்தினர், புழுப் பூச்சி, ஈ, எலி, பூனை போன்றவை எல்லாம் பகிர்ந்து கொள்ளும் பொதுமனை .
அதனால், வேலிகள் கட்டாதீர்கள் . எச்சரிக்கை! உங்கள் வேலி ஓர் ஏமாற்று. உண்மையைப் புறந்தள்ளும் சூழ்ச்சி. வேலிக்குள், நீங்கள் உங்களைப் பார்க்கப் பின் திரும்பி நின்றால், உங்கள் எதிரில் நிற்பது மரணம்! அது சூழ்ச்சியின் மற்றொரு பெயர்!
துறவிகளே! மனிதன் கடவுளிலிருந்து பிரிக்க முடியாதவன். அந்தச் சொல்லால் உருவாக்கப்பட்ட சகல உயிர்களிலிருந்தும், தோழர்களிலிருந்தும் பிரிக்கப்பட முடியாதவன்.
அந்தச் சொல்,'கடல்'. நீங்கள் மேகம். தன்னிடமுள்ளதை வழங்காத மேகம், ஒரு மேகம்தானா? தன்னுடைய வடிவையும், அடையாளத்தையும் இழந்துவிடாதபடி என்றும் அலையும் மேகம் முட்டாள்தனமானது. ஏமாற்றமும், தற்பெருமையும் அன்றி அது வேறெதைப் பெற்றுவிட முடியும்?
அது தன்னைத்தானே கரைத்துக் கொண்டு காணாமல் போவதுதான் அதன் வாழ்க்கையாக இருக்க முடியும்.
அது மேக வடிவை இழந்து, செத்துப் போய்க் கடலில் கரைந்து, கடலையே தனது அடையாளமாகக் காணாதவரை, அது மேகமே அன்று.
கடவுளைச் சுமக்கும் மேகமே மனிதன்! தான் கரைந்து காணாமற் போகாமல், அவன் தன்னைக் கண்டு கொள்ள முடியாது. ஆ! அப்படிக் காணாமற் போவதில்தான் என்ன பரவசம்!
அந்தச் சொல்லில் கரைந்து காணாமற் போகாதவரை, நீங்கள்தாம் அந்தச் சொல் -- அந்த 'நான்' -- என்பதை உங்களால் உணர்ந்து கொள்ள முடியாது. ஆ! அப்படி இழந்து போவதுதான் எத்தனை பரவசம்!
மீண்டும் சொல்கிறேன், புரிதலுக்காக வேண்டிக் கொள்ளுங்கள். புனித புரிதல், உங்கள் இதயங்களைத் தேடிவரும்போது, அங்கே நிலவுவது பூஜ்யம்! அந்த இன்மையில் இறைவனின் நிறைவு நிலவும். அப்போது முதல், நீங்கள் 'நான்' என்று உச்சரிக்கும் போதெல்லாம், அது உங்களுக்கு எந்த மகிழ்ச்சியையும் ஏற்படுத்தாது.
அப்போது, மரணம் உங்கள் கரங்களில் ஓர் ஆயுதமாக இருக்கும். அது மரணத்தை வெல்லும் ஆயுதம். அப்போது, வாழ்க்கை, தனது எல்லையற்ற இதயத்தின் திறவுகோலை, உங்களுக்கு வழங்கி வாழ்த்தும். அதுதான், அன்பின் தங்கத் திறவுகோல்.
சமாதம் : ஒரு குப்பைகூள விளக்குமாற்றில் இவ்வளவு ஞானம் நிறைந்திருக்கும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.
(மிர்தாத் வேலைக்காரனைப் போல, ஒதுங்கி நிற்பதை, சாடையாகக் குறிப்பிடுகிறார்)
மிர்தாத்: அறிவாளிகளுக்காகச் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் ஞானம் அது. முட்டாள்களுக்கு ஞானமே மூடத்தனம்தான்.
சமாதம் : உன்னுடைய நாக்கு சாமர்த்தியமானது. அதில் கடிவாளமிட்டிருந்தது ஆச்சரியம்தான், இருந்தாலும் உன் சொற்கள் கேட்பதற்கு கடினமாகத்தான் இருக்கின்றன.
மிர்தாத்: சமாதம் ! என் சொற்கள் எளியவை. கடினமாக இருப்பது உமது காது. அவற்றைக் கேட்பதற்குச் சிரமப்படுகிறவர்கள் , எதையுமே கேட்க முடியாது. அவற்றைக் காண்பதற்குச் சிரமப்படுகிறவர்களால் எதையுமே காணமுடியாது.
சமாதம்: நான் நன்றாகப் பார்க்கவும், கேட்கவும்தான் செய்கிறேன். கொஞ்சம் அதிகமாகவே. சமாதமும், மிர்தாதும் சமம் என்கிற மடத்தனத்தை என்னால் சகித்துக்கொள்ள முடியாது. தலைவனும், வேலைக்காரனும் ஒன்றாகிவிட முடியுமா என்ன? (தொடரும்)

மிர்தாதின் புத்தகம்

Comments