Google

மையநிலை என்றால் என்ன ? - OSHO




#கேள்வி : - ஓஷோ , நீங்கள் அடிக்கடி , உங்கள் மையநிலையை நோக்கிச் செல்லுங்கள் என்று கூறுகிறீர்கள் . இந்த மையநிலை என்றால் என்ன ? இதைநோக்கி எப்படிச் செல்லுவது ? கண்களை மூடிக்கொண்டு நம் உள்ளே பார்க்கும்பொழுது , இருட்டைத்தவிர வேறு ஒன்றும் தெரியவில்லையே ? இது அலுப்பாக இல்லையா ? எண்ணங்களும் , உணர்வுகளும் மாறிமாறி வந்தபடியே இருக்கின்றன . இதை எப்படி வெறுமனே பார்ப்பது ?

#‎பதில்‬‬ : - " ஆமாம் , உண்மைதான் . நீங்கள் வேகமாகச் செயல்படப் பழக்கப்ட்டிருக்கிறீர்கள் . இப்பொழுது நான் ' மெல்லமெல்ல அடிமேல் அடிவைத்து , உங்கள் கவனத்தை காலடியில் மாத்திரம் வைத்து ஒருமணி நேரத்தில் சுமார் 20 - லிருந்து 25 அடி தூரம் மாத்திரம் நடங்கள் ' என்று சொன்னால் உங்களால் கடைப்பிடிக்க முடியுமா ? இதுவும் ஒரு தியானம்தான் ! ஆனால் , நீங்கள் என்ன சொல்லுவீர்கள் ?
' இது என்ன சோம்பேறித்தனமான வேலை ? எவ்வளவு குறுகியதூரம் அலுப்பான வேலை ? " என்றுதான் கூறுவீர்கள் .
' பழக்கத்தை மாற்றிக் கொள்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லைதான் . ஆனால் , விடாமுயற்சியுடன் மாற்றித்தான் ஆகவேண்டும் – நீங்கள் தியானத்தில் முன்னேறவேண்டுமானால் ! '
அடுத்து , உங்கள் மையநிலை என்பது எண்ணமற்ற உயிர்த்தன்மைதான்   வேறுஒன்றும்இல்லை ! நீங்கள் எந்த அளவுக்கு உங்களுடைய எண்ண ஓட்டங்களை ஒரு சாட்சியாக நின்று பார்க்கிறீர்களோ , அப்பொழுது எண்ண ஓட்டம் குறையக் குறைய உங்கள் சாட்சித்தன்மை அதிகமாகும் . அப்பொழுது நீங்கள் தானாகவே அந்த மையநிலையை நோக்கிச் செல்லுவீர்கள் . அவ்வளவுதான் ! அந்த மையநிலையை நோக்கிச் செல்லுவது என்றால் உங்கள் எண்ணங்களிலிருந்து மெல்ல மெல்ல விடுதலையாவது என்றுதான் அர்த்தம் .
கண்களை மூடிக்கொண்டு நம் உள்ளே பார்க்கும்பொழுது , இருட்டைத்தவிர வேறு எதுவும் தெரியவில்லையே என்று கேட்கிறீர்கள் .  உண்மைதான் .
ஒருநிகழ்ச்சி ..... டேவிட்ஹும் ( David Hume ) என்ற ஒரு சிறந்த ஆங்கிலேயத் தத்துவவாதி , கீழைநாட்டு உபநிஷத்தைப் படித்துவிட்டு , தியானம் செய்ய முயற்சித்தார் . ஆனால் அவரால் அதில் ஆழமாகச் செல்ல முடியவில்லை . சிறிது செய்துவிட்டு , ' இது என்ன அலுப்பான வேலை ? எண்ணங்களும் உணர்வுகளும் எப்படி மாறி மாறி வருகின்றன.  இவற்றை வெறுமனே பார்ப்பதால் என்ன பிரயோஜனம் ? என்று வெறுப்படைந்தார் . இவரைப்போலத்தான் 100 - க்கு 90 சதவிகிதம் மக்கள் இருக்கிறார்கள் ! அதில் நீங்களும் அடக்கம் .
தியானத்திற்கு முதல் தகுதி பொறுமை ! பொறுமை இல்லாதவர்கள் இந்த வேலையற்ற வேலைக்கு வராமல் இருப்பதே நல்லது ! ஹும் , இன்னும் சற்று பொறுமையாக தியானத்தைக் கடைப்பிடித்திருக்கவேண்டும் . அதாவது குறைந்தது சுமார் 2 - லிருந்து 3 மாதம் !  அப்பொழுது எண்ணங்களும் , உணர்வுகளும் மெல்ல மெல்லஅடங்கி வருவதைக் கண்டு அவரே ( டேவிட்ஹும் ) ஆச்சரியப்பட்டிருப்பார் .
வெறுமனே சாட்சியாக நின்று பார்ப்பதுகூட அவ்வளவு சுலபமல்ல . ஏனெனில் நீங்கள் ( மனம் ) அப்படி குறுக்கே பாய்ந்து பாய்ந்து பழக்கப்பட்டிருக்கிறீர்கள் . வெறுமனே பார்க்கும்பொழுது உங்களை அறியாமலே உங்களுடைய இன்னொரு மனம் குறுக்கே கண்டிப்பாகப் பாயும் . இது பழக்கதோஷம் . இதை நீங்கள் ஒரேநாளில் இல்லைஒரே வருடத்தில் சாதிக்கமுடியாது ! தேவை பொறுமை ! பொறுமை !! பொறுமை !!! விடாமுயற்சி ! விடாமுயற்சி !! விடாமுயற்சி !!!
அப்படி மனம் குறுக்கே பாயும்பொழுது அதையும் சாட்சியாக நின்று பார்த்து மெல்ல அதை அகற்றவும் . இது பல முறை நடக்கும் . சலித்துக்கொள்ளாதீர்கள் ! பிறகு மெல்ல மெல்ல எண்ண ஓட்டம் குறைந்து , அதன் இடையில் இடைவெளி ஏற்படும் . இந்த இடைவெளி ஏற்பட்டாலே , நீங்கள் தியானத்தில் முன்னேறுகிறீர்கள் என்று அர்த்தம் . நீங்கள் மேலும் மேலும் தியானத்தில் ஆழ்ந்து செல்லச் செல்ல இந்த இடைவெளி அதிகமாகி ஒரு கட்டத்தில் ஒன்றுமே அற்றநிலை ( Empty ) ஏற்படும் ! இதற்குப் பல வருடங்கள் ஆகலாம் . அல்லது பல பிறவிகள்ஆகலாம் ! இதைக் கண்டு நீங்கள் மிகவும் பயப்படுவீர்கள் . இது இறப்பு உணர்வையும் , பேரின்ப உணர்வையும் ஒருங்கேகொடுக்கும்.
நீங்கள் மேலும் மேலும் தியானத்தில் ஆழ்ந்து செல்லச் செல்ல இந்த இடைவெளி அதிகமாகி ஒருகட்டத்தில் ஒன்றுமேஅற்றநிலை ( Empty ) ஏற்படும் ! இதற்கு பல வருடங்கள் ஆகலாம் . அல்லது பல பிறவிகள் ஆகலாம் ! ஆனால் , இதைக் கண்டு நீங்கள் மிகவும் பயப்படுவீர்கள் . இது இறப்பு உணர்வையும் , பேரின்ப உணர்வையும் ஒருங்கேகொடுக்கும் ! ........
அப்பொழுது‬‬ அவர் ' தான் , ' தன்னை , இழக்கிறார் . அப்பொழுது உங்கள் உள்ளே காரிருளை மிகுந்த தைரியத்துடன் எதிர்கொள்ள வேண்டும் . பிறகு மெல்ல மெல்ல மெல்லிய வெளிச்சத்தை உணர்வீர்கள் ! அதற்கு எந்தவித ஆதாரமும் கிடையாது , ஜுவாலையும்இருக்காது . அதிகாலை ஒளியைப் போல குளிர்ச்சியாக இருக்கும் . இதைத்தான் ஹிந்துக்கள் ' சந்தியா ' (Santhiya ) என்று அழைப்பார்கள் . இதன் அர்த்தம் ' இருட்டும் ஒளியும் கலந்த மங்கலானநிலை '  என்று பொருள் . அப்பொழுதுதான் உங்களுக்கு ' நீங்கள்யார் ? '  என்பது விளங்கும் ! அந்த ஒளிதான் நீங்கள் !
அப்பொழுது பார்ப்பவனும் பார்க்கப்படும் பொருளும் ( Sub - ject , Object ) மறைகின்றன . செயல்மாத்திரம் ( Predicate ) – அந்த ஒளி – தன் அறிவாய் தன் உணர்வாய் , மிகுந்த விழிப்பாக மிகுந்த உணர்வாக இயங்குகிறது . அப்பொழுது அது தன்னைத்தானே பார்த்துக்கொள்கிறது ! ( Observer is Observed by itself ) இந்தநிலைக்குப் பெயர்தான் ஞானமடைதல் என்பது !
ஆக இப்படி வெறுமனே பார்ப்பது , சாட்சியாக நின்று பார்ப்பது எல்லாம் ஆரம்பத்தில் அலுப்பையே கொடுக்கும் . ஏனெனில் ஆரம்பத்தில் இருட்டையும் , குழப்பத்தையுமே சந்திப்பீர்கள் . மெல்ல மெல்ல இதுவே பழக்கமாகிவிடும் ! இதை நீங்கள் மட்டும் , நீங்களேதான் தனியே அணுகவேண்டும் . வேறுவழியில்லை . உங்களுக்காக , உங்கள் அன்புக்குரிய குருகூட செய்யமுடியாது ! அவர் உங்களது சந்தேகங்களைத் தீர்க்கலாம் . உங்களை ஊக்குவிக்கலாம் . தைரியம் ஊட்டலாம் .  அவ்வளவுதான் .
ஒருவரது பிறப்பு ,  இறப்பு , ஞானமடைதல் என்பது தனிப்பட்ட சமாச்சாரம் ! ஆனால் ஏதோ ஒரு கட்டத்தில் ஒரு மாஸ்டரின் உதவி இல்லாமல் , உங்களால் ஞானமடையமுடியாது .
அடுத்து இன்னொரு விஷயம் . நீங்கள் உங்களுக்குள்ளே ஆழமாகச் செல்லும்பொழுது உங்களால் அடக்கி வைக்கப்பட்டுள்ள ஆசைகள் , துன்பங்கள் எல்லாம் மேலே வர ஆரம்பிக்கும் . இதுதான் உங்கள் குழப்பத்திற்கு மூலகாரணம் . ஒரு கட்டத்தில் பயந்துபோய் வெளியே ஓடிவர முயற்சி செய்வீர்கள் ! இப்பொழுது உங்களுக்கு ஒருகுரு மிகவும் அவசியம் . இந்த நரகத்தைக் கடந்த அவர் உங்களுக்கு தைரியம் ஊட்டுவார் . நீங்கள் இப்படிப் பல நரகங்களைக் கடந்துதான் சொர்க்கத்தை அடையவேண்டும் ! அப்பொழுது உங்கள் மனமே நரகமாக இருக்கிறது ! அது உங்களைப் பயமுறுத்தும் , பலஆசைகளைக்காட்டும் , வெளியே வா என்று உங்கள் கைகளைப்பிடித்து இழுக்கும் ! அது லேசில் உங்களை தியானம் செய்ய அனுமதிக்காது . ஏனென்றால் , தியானம் என்பது அதற்குச் சாவுமணி ! அப்படி இருக்கும்பொழுது தெரிந்தே அது எப்படி தியானத்தை அனுமதிக்கும் ?
அடுத்து நீங்கள் தியானத்தில் முன்னேற , இந்த உலக அவலட்சணங்களை - பதவி , படிப்பு , பணம் , பெண்இன்பம் , கௌரவம் – நீங்கள் மெல்ல மெல்ல அகற்றவேண்டும் . நீங்கள் ஆகாயத்தில் பறக்க , பூமியை விட்டுவிடத்தான் வேண்டும் . ஆனால் , கவலை வேண்டாம் நீங்கள் தியானத்தில் முன்னேற முன்னேற இந்த உலக அவலட்சணங்கள் புரிய ஆரம்பிக்கும் ! அப்பொழுது அவைதானே விலகும் . இந்த அவலட்சணங்களுக்கு இன்னொரு பெயர்தான் அகங்காரம் ( Ego ) . உங்களுடைய சகல துன்பங்களுக்கும் இதுதான்காரணம் .
இது உங்கள் பிறப்போடு வந்தது அல்ல . இடையில் நீங்களாகச் சம்பாதித்துக் கொண்டது . இந்த அவலட்சணங்களை அடைய நீங்கள் எவ்வளவு சக்தியைச் செலவழித்திருப்பீர்கள் !
நீங்கள் எல்லோரும் விதையாக ( Seed ) இருக்கிறீர்கள் . நீங்கள் இப்படியே எவ்வளவு காலம் வேண்டுமானுலும் இருக்கலாம் . 10 , 000 வருடங்களுக்கு முன்பு உள்ள விதைகளை மொகன்ஜதோராவில் ( Mohen Joo Daro ) கண்டுபிடித்திருக்கிறார்கள் . சீனாவில் பத்துலட்சம் வருடங்களுக்கு முன்பு உள்ள விதைகளை ஒரு குகையில் கண்டுபிடித்திருக்கிறார்கள் . இவை எல்லாமே இன்னும் முளைக்கும் தன்மையிலேயே இருக்கின்றன !  என்ன ஆச்சரியம் !
இப்படி விதையாக நீங்கள் பலநாட்டில் பலபிறவியாகப் பிறந்து பிறந்து வந்திருக்கிறீர்கள் . ஆனால் , உங்கள் நிலையில் எந்த மாற்றமும் இல்லை ! அதே பணஆசை , கௌரவம் , பெண் இன்பம் .........அப்படித்தான் ! நீங்கள் தைரியமாக உங்கள் உள்ளே சென்று ஒரு செடியாக மாற முயற்சிக்கவில்லை . ஆனால் இது துன்பமாகத்தான் இருக்கும் . ஏனெனில் , நீங்கள்  உங்கள் ( விதை ) மேல்தோலைக் கிழித்துக்கொண்டு வரவேண்டும் . அந்த மேல்தோல் என்பது உங்கள்அகங்காரம்தான் . அதாவது இந்த உலக அவலட்சணங்கள்தான் ! ஆக , முதலில் நீங்கள் துன்பத்தைத்தான் சந்திக்க வேண்டிவரும் . ஆனால் , இது நிரந்தரமல்ல . நான் சத்தியம் செய்கிறேன் ! இது முற்றிலும் உண்மை . இது என் அனுபவம் .  ஆகவே பயப்பட வேண்டாம் . நீங்கள் அந்தத் துன்பத்தை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் . உங்கள் உயிரைத் துச்சமாக மதிக்க வேண்டும் . செய்வீர்களா ?!"....🌺🌿

Comments