Google

*ஓஷோ வாழ்வியல்*

*ஓஷோ வாழ்வியல்*






ஓஷோ வாழ்வியல்
அன்பு நண்பர்களே,
வணக்கமும் வாழ்த்தும்.
எனது தலையங்கங்கள் அமைவதுதான். நான் யோசித்து எழுதுவது அல்ல. அதில் வரும் கருத்துக்களும், பார்வைகளும் ஓஷோவைப் பகிர்ந்து கொள்ளும்போது
வெளிப்படுபவைதான். ஆகவே இதில் உங்கள் பங்கும், ஓஷோவின்
பங்கும் நிறைய பெரும்பகுதியாக உள்ளன. எனது பகுதி நான் இதற்குப் பயன்படுகிறேன் என்பதே. தலையங்கங்கள் சில ஒருமாதம், இரண்டு மாதம் முன்பே வந்துவிடும். எழுதிவிடுவேன். சில சமயம் கடைசி நாட்களில் வரும். ஏன்
வராமலேயே போகும் ஒரு கட்டம் வரலாம். அப்போது தலையங்கம் இருக்காது.
சரி, நேற்று ஒரு தலையங்கம் ஒரு நண்பரின் பகிர்ந்து கொள்ளுதலில் பிறந்துவிட்டது. இதோ எழுதிவிடுகிறேன்.
நமது ஓஷோ அன்பர்களுக்கும், சந்நியாசிகளுக்கும், தியானம் செய்பவர்களுக்கும் ஆன்மீகத் தேடல்
உள்ளவர்களுக்குமான விஷயம் இது.
முதலில் இது எப்படி வந்தது என்றால், இந்த ஒருநாள் தியான முகாம், மூன்று நாள் தியான முகாம் நீங்கள் ஏன் நடத்தக் கூடாது, ஏன் நடத்துவதில்லை, அதற்கான வசதியும் வாய்ப்பும் இருந்தும் ஏன் செய்வதில்லை
என்பதில் ஆரம்பித்தது.
ஒரு நாள் மூன்று நாள் தியான முகாம்கள் ஓரளவு நடத்தப்பட்டு
வருகின்றன. நானும் பதினைந்து வருடங்களுக்கு முன்புவரை, ஏறத்தாழ பதிமூன்று வருடங்கள் நடத்தியும் வந்தவன்தான்.
இப்போது நான் அதைச் செய்வதில்லை. செய்யத் தயாரில்லை. இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு ஆறு அல்லது எட்டு ஒருநாள் தியான முகாம்கள் திருப்பூரில் எனது இடத்தில் நமது ஓஷோ சந்நியாசி ஒருவரால் நடத்தப்பட்டது. அவருக்கு வேறு வேலைகள் வந்து விட்டபோது நின்று விட்டது. ஆகவே தயவுசெய்து நண்பர்கள் புரிந்து கொள்ள வேண்டும். நான் அதற்கு எதிரானவன் அல்ல. தேவையற்றது என்ற கருத்துக் கொண்டவன் அல்ல. ஆதரிக்காதவன் அல்ல.
ஆனால் அது மட்டும் போதாது, அதோடு நின்றுவிடக் கூடாது, புதியவர்களுக்கு அது தேவை, அது ஒரு அறிமுகம், ஒரு முதல் தரிசனம் என்று கூறுகிறேன். இதுவேதான் தினமும் ஒருமணி நேரம் டைனமிக்கோ, குண்டலினியோ செய்ய வருபவர்களுக்கும் கூறுகிறேன். அந்த ஒரு மணிநேர தியானம் இடைவிடாது ஒரு பயிற்சியாகச்
செய்வதால் மட்டும் எதுவும் நிகழ்ந்துவிடாது. மறுபடியும் நான் சொல்லவேண்டும். நான் அதற்கு எதிரானவன் அல்ல. ஆனால் அதோடு நின்றுவிடக் கூடாது என்பவன்.
எந்த அனுபவத்தையும் மனம் தனதாக்கிக் கொள்ளும், தனது அகங்காரத்தில் சேர்த்துக் கொள்ளும். உடல் பழகி விடும், மனம் தயாராகி விடும். மேலும் தியானத்தைத் தொடர்ந்து பயிற்சியாக செய்வதனால் மனம்
புத்துணர்ச்சி பெறலாம், உடலின்
நோய் தீரலாம். பொறுமையும், அமைதியும் அதிகமாகலாம். கோபம் குறையலாம், திறன் அதிகமாகலாம், உணர்வுக் கூர்மையும் புத்திக் கூர்மையும் மேலும்
கூர்மையடையலாம். சங்கடங்கள், பதட்டங்கள் குறையலாம். தெளிவும் தைரியமும் பிறக்கலாம். சுருக்கமாக மனமாற்றமும், ஏன், குண
மாற்றமும் எளிதாக நடக்கலாம்.
ஆனால் ஓஷோவின் கனவு, ஜோர்புத்தா – ஒரு நிலைமாற்றம். ஓஷோவின் கனவு இயல்பான வாழ்விலிருந்து வலுக்கட்டாயமாக எதையும் மாற்றாமல் விழிப்புணர்வின் மூலம் புத்தாவாதல். ஜோர்பாவாக இரு, இயல்போடு
இரு. ஆனால் உனது கவனம் புத்தாவினுடையதாக இருக்கட்டும். வேர் விடுவது ஜோர்பா வாழ்க்கை, இயல்பு வாழ்க்கை. கிளை விட்டு மலராய் பூப்பது புத்தத் தன்மை. இவை ஒன்றுக்கொன்று எதிரானது அல்ல என்று நிரூபித்துக்
கொண்டிருப்பவர் ஓஷோ.
ஆகவே உங்களது தியானத்தை இந்த உலகத்தோடு, இந்த உடலோடு, உங்கள்
ஆசைகள், உங்கள்
நோக்கங்கள், உங்கள்
எதிர்பார்ப்புகளோடு பொருத்தி விடாதீர்கள். அவை நிறைவேற பயன்படுத்திக் கொள்வதே நோக்கமாக்கிக் கொண்டு விடாதீர்கள். ஏனெனில் அப்போது நீங்கள் தியானம் செய்வதுகூட உங்கள் பேராசையாக, உங்கள் இவ்வுலக குறிக்கோளுக்கான முயற்சியாக ஆகிப் போகிறது. அப்போது நீங்கள் இன்னும் உங்கள் உள் உலகம் ஒரு கனவு, உங்கள் மனதின் இயக்கம் என்பதை மறந்தவர்களாய்
ஆகிவிடுகிறீர்கள். ஓஷோவின்
மலர்வதற்காக வேர்விடும் மரத்தைப் போன்ற ஜோர்புத்தாவை மறந்துவிடுகிறோம். இன்னும் உள்முகமான ஆராய்ச்சியில் திரும்பாமலேதான் தியானம் செய்து கொண்டிருக்கிறோம். இன்னும் மன இயக்கம் ஏற்படுத்தும் கற்பனை உலகின் மேலேயே நமது கண்கள் பதிந்துள்ளன.
உனது இப்போது வாழும் மன இயக்கம் ஏற்படுத்தும் கற்பனை உலகின்
வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள தியானத்தைக் கற்றுக் கொடுக்கிறார்கள் எல்லா இடத்திலும். இப்படித்தான் எல்லா சாமியார்களின் எல்லா ஆசிரமங்களும் உள்ளன. இதுதான் ஓஷோவின் அடிப்படை வேறுபாடு.
ஆனால் ஓஷோ தியானத்திற்காக உனது இப்போது அமைந்துள்ள
வாழ்க்கையை எப்படிப் பயன்படுத்திக்கொள்வது என்று சொல்கிறார். தியானத்தை மேம்படுத்திக்கொள்ளும் வாழ்க்கையைக் கற்றுக்
கொடுக்கிறார் ஓஷோ. தியானத்தின்
மூலமாக சக்தியை, பலனைத் திரும்ப தியானத்தில் இன்னும் ஆழமாகப் போகவே உபயோகப்படுத்தச் சொல்கிறார் ஓஷோ. வாழ்வில் உன்னிடம் பணம் இருக்கிறதா, படிப்பு இருக்கிறதா, கலைத்திறன் இருக்கிறதா, படைப்பாற்றல் இருக்கிறதா, எல்லாவற்றையும் தியானத்தில் குதிக்க, தியானத்தில் மூழ்கப் பயன்படுத்து என்பவர் ஓஷோ. நல்ல மனைவி என்றால் அவளுடன் சேர்ந்து தியானி. மோசமான மனைவி என்றால் கிடைக்கும் தனிமையை தியானிக்கப்
பயன்படுத்து. புகைப்பதை
விடமுடியவில்லையா, அதைப்பற்றி
யோசித்துக் கொண்டிருக்காதே, சண்டையிடாதே
அதை தியானமாக மாற்றினால் தானாகப் போய்விடும் அதேசமயம் தியான அனுபவமும் கியைக்கும்
என்பவர் ஓஷோ. நல்ல குணமோ, கெட்ட
குணமோ, பணக்காரனோ ஏழையோ, உழைப்பாளியோ
சோம்பேறியோ எந்தவித வாழ்க்கை உனக்கு அமைந்திருந்தாலும், நீ வாழ்ந்தாலும் நீ செய்ய வேண்டியது ஒன்றுதான்.
அது, இதைப் பெரிதுபடுத்துவதை நிறுத்திவிட்டு, இதிலுள்ள
பிரச்னைகளைத் தீர்ப்பதை விட்டுவிட்டு, இதில்
போட்டிபோடாமல், இதில் வெற்றியைத் தேடாமல் உள்நோக்கித் திரும்பு. உனது வாழ்வு எதுவாய் இருந்தாலும் அதிலுள்ள ஆதரவுக் கணங்களை, மகிழ்ச்சிக் கணங்களை, அது ஏற்படுத்தியிருக்கும் வாய்ப்புகளை, அதனால் உனக்கு தெரியவந்துள்ள உண்மைகளைப் பயன்படுத்தி
தியானத்தில் குதி.
உடல்நிலை சரியில்லையா, அதுவும் நல்லதுதான். எய்ட்ஸ் நோய் வந்துவிட்டதா, இதைவிட அருமையான எந்தப் பரிசை பிரபஞ்ச இருப்பு உனக்கு கொடுக்கமுடியும். சாவு தெரிந்துவிட்டது, இனி வீணடிக்க நேரமில்லை, பயமில்லை, வறட்டு கௌரவமும், போலித்தனமும் தேவையில்லை. வாழ்ந்து பார்த்துவிடலாம் முழுமையாக என்கிறார் ஓஷோ. அது போல எதையும் தியானத்திற்குப் பயன்படுத்தச் சொன்னார் ஓஷோ. மாறாக மற்றவர்கள் தியானத்தை எதற்கும் பயன்படுத்தச் சொல்லித்
தருகிறார்கள். அதனால் என்ன பயன். அலையில் ஆடும் படகை அசையாமல் நிறுத்தும் முயற்சி இது.
மேலும் மாதத்திற்கு ஒருநாள், ஒருநாளில் ஒருமணி நேரம் தியானம் செய்வது எதற்கு. அதைப் புரிந்துகொள்ள வேண்டும். அந்த அனுபவத்தைச் சுமந்துகொண்டு தினசரி வாழ்க்கையில் அதைத் தேட வேண்டும் என்பதுதான் சரியான வழி. அதை
அந்த இடத்திலேயே விட்டுவிட்டு, மறந்துவிட்டு, சராசரி வாழ்க்கைக்கு வந்துவிட்டால் அது பயனளிக்காது. கண்டிப்பாக நிலைமாற்றமோ, ஜோர்புத்தாவோ நடக்காது. மனமாற்றமும் குணமாற்றமும் பற்றி நான் பேசவில்லை. ஒருமணி நேரம் தியானம் புரிந்துவிட்டு 23 மணிநேரம் அதற்கு எதிரிடையாக செயல்பட்டால் அதில் என்னபயன், அது பயித்தியக்காரத்தனம், வெறும் அகங்காரத் தீனிதான், என்கிறார் ஓஷோ.
ஆகவே ஒருநாளில் ஒருமணிநேரம், ஒரு மாதத்தில் ஒருநாள் ஆழமான அனுபவம் பெற்று, அதை மீதமுள்ள நேரம் முழுவதுமான வாழ்வில் புகுத்துங்கள். அதுதான் என் விருப்பம்.
வாழ்வில் வசதியும், வாய்ப்பும் எப்படிக் கிடைக்கிறதோ அதை தியானத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதை
எப்படி தியானத்திற்கு பயன்படுத்தலாம் என்று யோசியுங்கள். தோல்வியில் கிடைக்கும் அமைதியும், தனிமையும் அருமையான வாய்ப்புத்தானே. அவமானத்தில் ஏற்படும் அகங்காரத்தின் இறப்பு மனதைக் கடக்கும்
ஒரு சந்தர்ப்பம் தானே. நோய்வாய்படுவது உடலின் இறப்பை உணர்த்தும் உபயோகமுள்ளதுதானே.
ஓஷோ சமுதாய வாழ்வில் எதையும் சாதிக்கச் சொல்லவில்லை. பாதுகாப்பையும் உறவையும் பலப்படுத்திக் கொள்ள சொல்லவில்லை. காமத்தையும், கோபத்தையும், பேராசையும், அகங்காரத்தையும்
நியாயப்படுத்திக்கொள்ள சொல்லவில்லை. அறிவாய் அவரை பயன்படுத்தச் சொல்லவில்லை. நல்லவனாய், வல்லவனாய் இரு என்றோ, எதற்கும் எதிரியாய், புரட்சியாளனாய் இரு என்றோ ஓஷோ சொல்லவில்லை. கெட்ட குணங்களை விட வேண்டாம் என்றோ, நல்ல குணங்கள் கூடாது என்றோ ஓஷோ சொல்லவில்லை. ஓஷோ சொல்வதெல்லாம் எனக்கு இந்த கனவுலக வாழ்வில் அக்கறை
கிடையாது நீயும் அதைப் பொருட்படுத்தாதே. உண்மை உலகம் தியானத்திற்குப் பின்தான் தெரியும். ஆகவே தியானம் செய். அதற்கு இந்த உலகத்தை, கனவுலகத்தை பயன்படுத்த முடிந்த அளவு பயன்படுத்திக் கொள். பயணம் இனிதாக இருக்கும். சண்டையிடும் சக்தியும் மிச்சமாகும். அவ்வளவுதான். இருப்பது
கனவுலகில் எனும்போது இதுவே சிறந்த உபாயம். அவ்வளவுதான்.
ஆகவே நண்பர்களே விழிப்புணர்வோடு இயல்பாயிரு, அதுதான் ஜோர்புத்தா, ஜோர்பா எனும் புத்தர். அதற்கு அப்படி முழு வாழ்வையும் முழுநேரத்தையும்
விழிப்புணர்வோடிருக்க பணயம் வைக்கும் தைரியத்திற்கு, அந்த தைரியத்தைப் பெறுவதற்கு, அந்த துணிச்சலை, உள்முகமாய்
திருப்புதலே வாழ்வு என்று முடிவெடுப்பதற்கு ஒரு ஆரம்பமாக, ஒரு உதவியாக, ஒரு தரிசனமாக மட்டுமே தியானப் யுக்திகள் இருக்கின்றன என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
அவை சமுதாய வாழ்விற்கு உதவும்பொருட்டு ஏற்படுத்தப்பட்டவை
அல்ல. உடல்
உபாதைகளைக் குறைத்துக் கொள்வதற்கான உபாயங்கள் அல்ல. அவை உண்மையின் தரிசனங்கள். எவரெஸ்ட் சிகரத்தை தரிசிப்பது வேறு. அங்கு ஏறி அதன் உச்சியை அடைவது வேறு. ஆகவே முழு வாழ்க்கையையும் தியானத்தை நோக்கியதாக, தியானத்திற்கு உதவுவதாக, அமைத்துக் கொள்ள முடிவு எடுங்கள்.
எல்லாவற்றையும் தியானமாக மாற்றும் மந்திரக்கோல்
விழிப்புணர்வை விட்டுவிடாதிருங்கள். பிறகு
இந்த உடலே புத்தர், இந்த பூமியே சொர்க்கம் என்கிறார் ஓஷோ. அதேபோல
பலரும் என்னிடம் கேட்கின்றனர், ஏன்
நீங்கள் 5 பேர் மட்டும்தான் ஒரே நேரத்தில் தியானம் செய்ய இருக்கவேண்டும், அதிகம்பேர் வேண்டாம் என்கிறீர்கள் என்று.
கூட்டத்தில் நாம் ஏற்கனவே சிக்குண்டு கிடக்கிறோம். கூட்ட மனப்பான்மை ஏற்கனவே நம்மை ஆட்டிப் படைக்கிறது. மேலும் அகங்காரம் கூட்டத்தில் வெளியே முண்டியடித்து
வருவதற்குத் துடிக்கும். ஆகவே
கூட்டத்தைத் தவிர்த்தால் கூட்டமனப்பான்மை இல்லாமல், அகங்காரத்தின் வெளிப்பாடு குறைவாயிருக்கும்படியாக நாம்
இருக்கமுடியும். அதோடு கூட்டத்தில் குளிர்காயும் உணர்வைத் தவிர்ப்பது தியானத்திற்கு மிகவும் அவசியம். தியானம் தனிமனிதனுக்கானது, தனக்குள் செல்லும் விஷயம். இதில் கூட்டத்தின் பங்கு ஒன்றுமேயில்லை. திருவிழாவும், கொண்டாட்டமும்
தனிமையிலேயே உள்ளிருந்து பொங்கி எழுவதே சிறப்பு. வெளித்திருவிழாவும், கொண்டாட்டமும் நமது விழிப்புணர்வை குறைத்து, உணர்வற்ற மனம் வெளிவரவே உதவும்.
நான் இதற்கு எதிரானவன் அல்ல. தயவுசெய்து இதைப் புரிந்து கொள்ளுங்கள். அதிக நபர்கள் கொண்ட தியானமுகாம்கள் நடத்துவதை எதிர்ப்பவன் அல்ல நான். அதுவும்கூட
இன்றைய மனிதனின் ஆரம்பக் கட்டத்திற்கு தேவைப்படலாம், உதவலாம். உதவி புரிகிறது. ஆனால்
அறிமுகத்திற்கு மட்டுமே அது. ஆழமாகச் செல்ல கூட்டம் நிச்சயமாக ஒரு தடை. எனவே நான் அதைச் செய்வதில்லை. அவ்வளவுதான்.
சேர்ந்து செய்கையில் சக்தி கிடைக்கிறது, உற்சாகம் பிறக்கிறது, மகிழ்ச்சி அடைகிறேன் என்பது உண்மைதான். ஆனால் அது ஆழமற்றது. வந்தது போலவே கூட்டம் கொண்டு போய்விடும். ஆகவே அது உன்னுடையதல்ல. அது தியானமல்ல, அது விழிப்புணர்வின் விளைவு அல்ல. அது நமது கூட்ட மனபான்மையின் விளைவுதான். அங்கு
சக்தி அதிகம் இருப்பது உண்மைதான். அதைப் பயன்படுத்திக் கொள்வதில் தவறு ஏதும் இருப்பதாக நான் சொல்லவில்லை. முதல் அனுபவத்திற்கு அது உதவும் என்பதில் ஐயமில்லை. ஆனால் அது விழிப்புணர்வற்றது. ஆழமற்றது. அவ்வளவுதான். ஆகவே அதையே பிடித்து தொங்கிக் கொண்டிருப்பது விழிப்புணர்வு வளர்ச்சிக்கு உதவாது. விழிப்புணர்வு
வளர்ச்சிக்கு இடையூறு கூட ஏற்படுத்தும். ஆகவே  நான்
ஒருமையில் தியானம் செய்ய ஒரு வாய்ப்பை உருவாக்க முயல்கிறேன். அவ்வளவுதான்.
நான் முடிந்தவரை ஒருவராகக் கூட தியானம் செய்யச் செல்கிறேன். 2 பேர் டைனமிக் செய்ய இருந்தால் தனிதனியாக்க் கூட செய்து
கொள்ளுங்கள் என்று சொல்கிறேன். ஏனெனில் தியானம் மிகவும் அந்தரங்கமானது என்கிறார் ஓஷோ.
மேலும் கூட தியானம் செய்யும் முறை ஒரு ஆலோசனை, ஒரு வழிகாட்டுதல் தானே தவிர விதி அல்ல என்று ஞாபகம்
வைத்துக் கொள்ளுங்கள் என்று நான் கூறுகிறேன். டைனமிக் என்றால் சில ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் ஓஷோ கொடுத்திருக்கிறார். ஆனால் ஓஷோ சொல்வதைப் புரிந்து எப்படிச் செய்வது என்பதையும், எப்படி அந்த ஆலோசனைகளை முழுமையாகப் பயன்படுத்துவது என்பதையும் எப்படி அந்த ஆலோசனைகளின் பயனை நாம் முழுமையாக அடையும்படி மாறுவது என்பதையும் நீதான் வகுத்துக் கொள்ளவேண்டும். உனது உடல் மற்றும் மனதிற்கு இசைந்தபடி, அவற்றோடு சண்டையிடாமல், எப்படிச் செய்வது – நமது மனதை தளர்த்தி அது கொஞ்சம் கொஞ்சமாக தன்னை வெளிப்படுத்திக்
கொள்ள, அடக்கி வைத்துள்ளவைகளை அனுமதிக்க உன் மனதை எப்படி அணுக வேண்டும் என்பதை நீதான் முடிவு
செய்ய வேண்டும். ஒரு விளையாட்டில் ஈடுபடும் மனநிலையை நீதான் தியானம் செய்யுமுன் ஏற்படுத்திக் கொள்ள
வேண்டும். உன்னுடன் சண்டை போடாமல், நீ செய்வதை மகிழ்வோடு அனுபவிக்கும் மனநிலையை நீதான் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
இப்படி உன்னை நீ தயார்செய்து கொண்டு ஓஷோவின் தியான
முறைகளில் ஈடுபட்டால்தான் அவரது ஆலோசனைகளும் வழிமுறைகளும் உனக்கு ஆழம்வரை செல்லவும், நிலைமாற்ற அனுபவத்தை தொட்டுக் காட்டவும் உதவும். எனவே
தனிமனிதன் பலவிதங்களிலும் தனக்கே உரிய விதத்தில், வேகத்தில், தனது
பின்புலத்தில், ஓஷோவைப்
பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புத் தர நான் விரும்புகிறேன். அவ்வளவுதான்.

Comments