Google

வெளிப்புறத்தை மாற்றுவதால், உள்புறம் மாறாமலே இருக்கிறது, - OSHO




வெளிப்புறத்தை மாற்றுவதால், உள்புறம் மாறாமலே இருக்கிறது, நிலைமாற்றம் அடையாமலே இருக்கிறது. ஆனால் சரியான உணவு, சரியான உழைப்பு, சரியான உறக்கம், சரியான செயல்கள் மற்றும் நடத்தை ஆகியவையும் உள்புற நிலைமாற்றத்திற்கு முக்கியமானவை என்பது
உண்மையல்லவா. வெளிப்புறத்தை முற்றிலுமாக புறக்கணிப்பது தவறல்லவா.

வெளிப்புறம் உட்புறத்தை மாற்ற முடியாது, ஆனால் வெளிப்புறம் உதவலாம்
அல்லது தடையாய் மாறலாம். வெளிப்புறம் உட்புறம் எளிதாக வெடிக்க கூடிய ஒரு சூழலை உருவாக்கலாம். ஞாபகத்தில் கொள்ள வேண்டிய விஷயம் இதுதான் – வெளிப்புற மாற்றம் உட்புற மாற்றமாகாது. நீ எல்லாமும் செய்துவிட்டாலும், சூழல் அங்கிருந்தாலும், உட்புறம் வெடித்துவிடப் போவதில்லை. சூழல் தேவையான ஒன்று, அது உதவும், ஆனால் அது நிலைமாற்றம்
ஆகாது. மேலும் வெளிப்புறத்தில் ஈடுபாடு கொள்பவர்கள் ……

வெளிப்புறம் என்பது ஒரு பரந்துபட்ட விஷயம். நீ பல பிறவிகளாக
மாறிக்கொண்டே இருந்தாலும், நீ ஒருபோதும் திருப்தி அடைய முடியாது. ஏதாவதொன்று மாற்றுவதற்கு பாக்கியிருந்து கொண்டேதான் இருக்கும், ஏனெனில், உட்புறம் மாறாமல் வெளிப்புறம் ஒருபோதும் மிகச்சரியானதாக

ஆகாது. நீ அதை மாற்றிக் கொண்டே போகலாம், அதை மெருகேற்றிக் கொண்டே
போகலாம், அதை கட்டுமானப்படுத்திக் கொண்டே போகலாம். ஆனால் நீ ஒருபோதும் திருப்தியடைய மாட்டாய். இப்போது சரியான தருணம் வந்துவிட்டது – என்று நீ உணரும் ஒரு சுழல் ஒருபோதும் வராது. ஏராளமானபேர் இப்படி தங்கள் வாழ்வை வீணடித்துள்ளனர்.

உனது மனம் வெளிப்புறத்தைப் பிடித்துக் கொண்டிருந்தால் – உணவுடன்,
ஆடைகளுடன், நடத்தையுடன்……. நான் அவைகளை மறுக்கச் சொல்லவில்லை. அப்படியல்ல, நான் சொல்வது என்னவென்றால், அவைகளுடன் பிடிப்பு கொள்ளாதே. அவை உதவியாய் இருக்கலாம், ஆனால் அவை பெரும் தடைகளாகவும் ஆகக்கூடும் – உனது மனம் அவைகளைப்
பிடித்துக்கொண்டால். அப்போது அது ஒரு தப்பும் வழியாகிவிடும், அப்போது நீ உட்புற மாற்றத்தை தள்ளிப்போடுகிறாய். மேலும் நீ வெளிப்புறத்தை மாற்றிக் கொண்டே இருக்கலாம். உட்புறத்தை அது தொடக்கூட முடிவதில்லை, உட்புறம் அப்படியே தொடர்கிறது.

நீ பழமையான ஒரு இந்திய நீதிக்கதையைக் கேட்டிருக்கலாம்.
பஞ்சதந்திரக்கதைகளில் ஒன்றில் – ஒரு எலி ஒரு பூனைக்கு மிகவும் அஞ்சி நடுங்கும், இடைவிடாத பயத்திலேயே, பதட்டத்திலேயே இருக்கும். அதனால் உறங்க முடியாது, அது அந்தப் பூனையைக் குறித்து கனவு கண்டுவிட்டு நடுங்கிக்கொண்டிருக்கும். ஒரு மந்திரவாதி, இரக்கப்பட்டு, அந்த எலியை ஒரு பூனையாக மாற்றி விடுவான். வெளிப்புறம் மாற்றப்பட்டு
விட்டது. ஆனால் மாறிய பூனைக்குள் இருக்கும் எலி இப்போது நாயை நினைத்து பயப்படும். பயமும், பதட்டமும் அதேதான், பொருள் மாறியுள்ளது, அவ்வளவுதான். முன்பு பூனை, இப்போது அதற்கு பதிலாக நாய். நடுங்குவது தொடரவே செய்கிறது, வேதனை இருக்கவே செய்கிறது, கனவுகளில் இன்னும் பயமே தொடர்கிறது.

இதைப்பார்த்த அந்த மந்திரவாதி அதை ஒரு நாயாக மாற்றினான். உடனே அந்த
நாய் புலியைக் குறித்து பயப்பட ஆரம்பித்தது. ஏனெனில் உள்ளே உள்ள எலி அப்படியேதான் இருக்கிறது. அந்த எலி மாறவேயில்லை. வெறும் உடம்புகள், வெளிப்புறம்தான் மாறியுள்ளது. அதே பதட்டம், அதே நோய், அதே பயம் அப்படியே இருக்கிறது. அந்த மந்திரவாதி அதை ஒரு புலியாக மாற்றினான். உடனே அந்தப் புலிக்குள் இருக்கும் எலி, வேட்டைக்காரனை நினைத்து பயப்பட ஆரம்பித்தது. அந்த மந்திரவாதி எலியிடம் கூறினான் – திரும்ப நீ எலியாகவே மாறு, ஏனெனில் நான் உனது உடம்புகளை மாற்றலாம், ஆனால் உன்னை
மாற்ற முடியாது. நீ ஒரு எலியின் இதயத்தையே கொண்டிருக்கிறாய், நான் என்ன செய்வது.  –    ஒரு எலியின் இதயத்தை எப்படி அவன் மாற்றுவான்.

நீ வெளிப்புறத்தை மாற்றிக்கொண்டே போகலாம், ஆனால் எலி இதயம் அப்படியே
தொடர்கிறது. அந்த இதயம் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. உருவம் மாறலாம், வடிவம் மாறலாம், ஆனால் அதன் அடிப்படை அப்படியேதான் இருக்கிறது. நீ ஒரு பூனைக்கு அல்லது ஒரு நாய்க்கு அல்லது ஒரு புலிக்கு பயப்படுவது எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்துவதில்லை. கேள்வி நீ யாருக்கு பயப்படுகிறாய் என்பதல்ல, கேள்வி நீ பயப்படுகிறாய் என்பதுதான்.

நான் வலியுறுத்துவது – வலியுறுத்தப்படுவது – என்னவென்றால், உனது
வெளிப்புற முயற்சிகள், உட்புற நிலைமாற்றத்திற்கு மாற்றாக ஆகிவிடக் கூடாது. ஒரு விஷயம். எடுத்துக் கொள்ளக் கூடிய எல்லா உதவிகளையும் எடுத்துக்கொள். சரியான உணவுமுறை நல்லதுதான், ஆனால் உணவோடு பிடித்தம் கொண்டவனாவது மடத்தனமானது, பித்துக்குளித்தனமானது. சரியான நடத்தை நல்லதுதான், ஆனால் அதையே பிடித்துக் கொள்வது
பயித்தியக்காரத்தனமானது. நீ எதைக் குறித்தும் பித்துக் கொண்டவனாகக் கூடாது.

இந்தியாவில் உணவுமுறையைப் பிடித்துக் கொண்டிருக்கும் பல சந்நியாசப்
பிரிவுகள் உள்ளன. நாள் முழுவதும் எதைச் சாப்பிடலாம், எதை சாப்பிடக் கூடாது, உணவை யார் சமைக்கலாம், யார் சமைக்க கூடாது என்று உணவைப் பற்றி மட்டுமே அவர்கள் யோசித்துக் கொண்டிருப்பார்கள். ஒருமுறை நான் ஒரு சந்நியாசியுடன் பயணம் செய்தேன். அவர் பால் மட்டுமே அருந்துவார், பசுவின் பால் மட்டுமே அருந்துவார், அதுவும் முழுதும் வெள்ளைநிறம் கொண்ட பசுவின் பால் மட்டுமே, இல்லாவிட்டால் அவர் உணவருந்தமாட்டார். இந்த மனிதன் பித்துப்படித்தவனே.

இதை நினைவில் கொள் – உட்புறம் முக்கியத்துவம் வாய்ந்தது, சிறப்பு
வாய்ந்த்து. வெளிப்புறம் உதவுவது, அது நல்லது, ஆனால் உனது கவனம் அதன்மேல் குவிந்திருக்க கூடாது. உட்புறத்தை மறந்துவிடுமளவு அது முக்கியத்துவம் பெற்றுவிடக் கூடாது. உட்புறம் உள்ளே, மையமாக இருந்துகொண்டே இருக்க வேண்டும், வெளிப்புறம்,
சாத்தியப்பட்டால், உதவிகரமானதாக மாற்றிக் கொள்ளப் படலாம்.

அதை முற்றிலுமாகப் புறக்கணிக்காதே. அதைப் புறக்கணிக்கத் தேவையில்லை,
ஏனெனில் உண்மையில், வெளிப்புறமும் உட்புறத்தின் ஒரு பகுதியே. அது எதிரானதல்ல, அது வேறுபட்டதல்ல, அது உன்மீது திணிக்கப்பட்டதல்ல – அதுவும் நீதான். ஆனால் உட்புறம் மையம், வெளிப்புறம் சுற்று வட்டம்.ஆகவே சுற்று வட்டத்துக்குத் தேவையான அளவு, எல்லைக்கோட்டிற்குத் தேவையான அளவு, மேல்மட்டத்திற்கு தேவையான அளவு அதற்கு முக்கியத்துவம் கொடு. ஆனால் எல்லைக்கோடு வீடாகாது. ஆகவே அதை கவனித்துக்கொள், ஆனால்
அதன் மேல் பயித்தியமாகாதே.

நமது மனம் எப்போதும் தப்பிக்கும் வழிகாண முயற்சிக்கும். நீ உணவில்,
செக்ஸில், ஆடைகளில், உடம்பில் ஈடுபாடு காட்டினால், உனது மனதிற்குப் பிடிக்கும். ஏனெனில் இப்போது நீ உட்புறம் செல்லப் போவதில்லை. இப்போது மனம் மாறவேண்டியதில்லை, மனத்தை அழிக்க வேண்டியதில்லை, மனதை கடந்து செல்ல வேண்டியதில்லை. உணவை மாற்றினாலும், அதே மனம் தொடர்ந்து இருக்க முடியும். நீ இதை அல்லது அதை உண்ணலாம்,
ஆனால் அதே மனம் இருக்க முடியும். நீ உட்புறமாக நகர ஆரம்பித்தால்….. நீ எவ்வளவு உள்ளே செல்கிறாயோ அவ்வளவிற்கு உன் மனம் குறைய வேண்டும். உட்புறப் பாதை மனம்கடந்த நிலையை நோக்கிய பாதையாகும்.

மனம் பயப்படுகிறது. அது தப்பிக்க வழி தேடுகிறது – வெளிப்புற
சம்பந்தப்பட்டதாக ஏதாவது செய்ய முயல்கிறது. அப்போது மனம் அப்படியே இருக்கலாம். நீ எதைச் செய்தாலும் அதில் எந்த மாற்றமும் அதற்கு ஏற்படாது. நீ என்ன செய்கிறாய் என்பது முக்கியமற்றது – இந்த மனம் இருக்கும், இது அப்படியே இருப்பதற்கான வழிகளைக் கண்டுபிடித்துக் கொள்ளும். சில சமயங்களில், இயற்கையான வெளிப்பாடுகள் கிடைக்காமல் நீ போராட நேர்ந்தால், உனது மனம் ஏதாவது வக்கிரமான வெளிப்பாட்டை கண்டுபிடித்துக்
கொள்ளும், இது ஆபத்தானது. ஒரு உதவியாக இருப்பதற்கு பதிலாக, அவை உனக்கு இடையூறுகளாக ஆகிவிடும்.

முல்லா நசருதீன் மாடிப் படிகட்டில் நழுவி விழுந்து விட்டதாக நான்
கேள்விப்பட்டேன். அவனது கால் எலும்பு முறிந்து விட்டது, எனவே கட்டுப் போடப்பட்டது. மேலும் அவன் மூன்று மாதங்களுக்கு படிக்கட்டில் ஏறி இறங்க கூடாது என்று கூறிவிட்டனர். மூன்று மாதங்களுக்குப் பிறகு முல்லா டாக்டரிடம் சென்றான், அவன் கட்டு பிரிக்கப்பட்டது. இப்போது நான் படி ஏறி இறங்கலாமா என்று முல்லா கேட்டான்.

நீ முழுதாக குணமாகிவிட்டாய். தாராளமாக ஏறி இறங்கலாம் என்று டாக்டர்
கூறினார்.

இப்போது எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது தெரியுமா டாக்டர்.
நான் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறேன் என்பதை உங்களால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. நாள் முழுவதும் கழிவுநீர் குழாய் வழியாக இறங்கி ஏறுவது என்பது எவ்வளவு தர்மசங்கடம் தெரியுமா. மூன்று மாதங்களாக தினந்தோறும் கழிவுநீர் குழாய் வழியாகவே ஏறுவதும், இறங்குவதும் – மிகவும் அசிங்கம், பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லோரும் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்கள். நீங்கள் படிக்கட்டில் ஏறி இறங்க
கூடாது என்று கூறிவிட்டீர்கள், ஆகவே நான் ஏதாவதொரு வழி கண்டுபிடித்துத்தானே ஆகவேண்டும். – என்று முல்லா கூறினார்.

எல்லோரும் செய்வது இதைத்தான். ஒரு வெளிப்பாடு அடைக்கப்பட்டால், பின்
ஒரு வக்கிரம் கண்டிப்பாக நடக்கும். மேலும் உனக்கு மனதின் வழிகள் தெரியாது – அவை மிகவும் தந்திரமானவை, மிகவும் நுட்பமானவை. மக்கள் என்னிடம் பல பிரச்சனைகளுடன் வருகின்றனர். அந்தப் பிரச்சனைகள் வெளிப்படையானவை போலத் தெரியும், ஆனால் அப்படியல்ல. அடி ஆழத்தில் வேறு ஏதோ மறைந்திருக்கிறது. அது அறியப்படாமல், கைவிடப்படாமல், கடந்துசெல்லப்படாமல், அந்தப் பிரச்சனை தீராது. அது தன் வடிவமைப்பை
வேண்டுமானால் மாற்றிக் கொள்ளும்.

ஒருவர் நிறைய புகைபிடிக்கிறார், அவர் அதை நிறுத்திவிட நினைக்கிறார்.
ஆனால் புகைபுடிப்பதல்ல பிரச்சனை, பிரச்சனை வேறு ஏதோ. நீ புகைபிடிப்பதை
நிறுத்திவிடலாம், ஆனால் பிரச்சனை தொடரும், அது வேறு ஏதாவதொன்றில் வெளிப்படும். நீ எப்போது புகைபிடிக்கிறாய். நீ பதட்டமாகவும், பயமாகவும் இருக்கையில் நீ புகை பிடிக்கிறாய், அது உனக்கு உதவுகிறது. உன் தைரியம் அதிகரிப்பதாக உணர்கிறாய், நீ நன்கு தளர்வடைவதாக உணர்கிறாய்.

புகைபிடிப்பதை நிறுத்திவிடுவதால், உன் நடுக்கம் மாறிவிடப் போவதில்லை.
நீ நடுக்கத்தை உணர்வாய், நீ பதட்டத்தை உணர்வாய், இறுக்கம் வரும். அப்போது வேறு ஏதாவது செய்வாய். மேலும் நீ ஏதாவதொரு அழகான மாற்றை கண்டுபிடித்துக் கொள்ளலாம், அது முற்றிலும் வேறு விதமாகத் தோன்றும். நீ என்ன வேண்டுமானாலும் செய்யலாம். நீ புகைபிடிப்பதற்கு பதிலாக ஒரு மந்திரத்தைச் சொல்லலாம், நீ நடுக்கத்தை உணரும் போதெல்லாம் – ராம், ராம், ராம் – என்று நீ சொல்லலாம்.

நீ புகையோடு என்ன செய்கிறாய். அது ஒரு மந்திரம். நீ உள்ளே வெளியே புகை
விடுகிறாய், நீ உள்ளே வெளியே புகை விடுகிறாய் – அது ஒரு திரும்ப திரும்ப செய்யும் செயலாகிறது. இப்படி ஒரே செயலை திரும்பத்திரும்ப செய்வதால் நீ தளர்வாக உணர்கிறாய். எதை நீ திரும்பத்திரும்பச் செய்தாலும், இதுவே நடக்கும். ஆனால் நீ – ராம், ராம், ராம் – என்ற மந்திரத்தை திரும்பத்திரும்ப கூறிக் கொண்டிருந்தால், யாரும் நீ தவறான ஏதோவொன்றைச் செய்வதாக கூறப்போவதில்லை. ஆனாலும் பிரச்சனை ஒன்றுதான்.

பிரச்சனை மாறவில்லை, வெறுமனே நீ வெளிப்படுத்தலை மாற்றியிருக்கிறாய்.
முதலில் நீ அதை புகையின் மூலம் செய்துகொண்டிருந்தாய், இப்போது நீ ஒரு சொல் மூலமாகச் செய்கிறாய். திரும்பத்திரும்பச் செய்தல் உதவுகிறது, எந்த மடத்தனமானதும் இப்படி உதவும். நீ வெறுமனே தொடர்ந்து திரும்பத்திரும்ப அதைக் கூறினால் போதும். நீ ஒன்றை திரும்பத்திரும்ப செய்கையில் அது தளர்வைக் கொடுக்கிறது, ஏனெனில் அது ஒருவித
சலிப்பை உருவாக்குகிறது. சலிப்பு தளர்வைக்கொடுக்கும். நீ ஒருவித சலிப்பைக்
கொடுக்கும் எதைவேண்டுமானாலும் செய்யலாம். சலிப்பு தளர்த்துகிறது. நீ
சலிப்பைத்தரும் எதையும் செய்யலாம்.

நீ புகைபிடித்தால், எல்லோரும் அதைத் தவறு என்று கூறுவார்கள். நீ ஒரு
மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருந்தால், யாரும் அதைத் தவறு என்று சொல்லப் போவதில்லை. ஆனால் பிரச்சனை அதுவாகவே இருப்பதால், இதுவும் தவறுதான் என்று நான் செல்கிறேன் – இன்னும் சொல்லப்போனால் இது அதிக ஆபத்தாநது, ஏனெனில் புகைபிடிக்கையில் இது தவறு என்பதை நீ உணர்ந்திருக்கிறாய். இப்போது, மந்திரம் உச்சரிப்பதில், நீ உணர்வோடு
இல்லை. நீ உணராமலிருக்கும் இந்த நோய் அதிக ஆபத்தானது, அதிக தீங்கானது.

நீ மேல்மட்டத்தில் எது வேண்டுமானாலும் செய்யலாம், ஆனால் உனது
ஆழத்திலுள்ள வேர்கள் மாறாதவரை, எதுவும் நிகழ்வதில்லை. ஆகவே வெளிப்புறத்தைப் பொருத்தவரை இதை நினைவில் வைத்துக்கொள், இது குறித்து விழிப்புணர்வோடிரு. மேல்மட்டத்திலிருந்து வேர்கள் நோக்கி நகர்ந்து, நீ ஏன் நடுக்கத்தோடு இருக்கிறாய் என்பதன் வேரைக் கண்டுபிடி.

ஒருவர் அதிகமாக உணவருந்துகிறார். அதை நிறுத்தி விடலாம். நீ உன்னை
அதிகம் உணவருந்தாமல் கட்டுப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் ஒருவன் ஏன் அதிக உணவருந்துகிறான். ஏன். இது உடலின் தேவையல்ல எனும்போது, மனம் எங்கோ குறுக்கிடுகிறது. ஆகவே மனதிற்குத்தான் ஏதாவது செய்ய வேண்டும், இது உடலைப் பொருத்த கேள்வியல்ல. நீ ஏன் உனக்குள் அடைத்துக் கொண்டே இருக்கிறாய்.

உணவோடு அதீத பிடித்தம் என்பது ஒரு நேசத்தேவைதான். நீ நன்றாக
நேசிக்கப்படாவிட்டால், நீ அதிகம் உண்பாய். நீ நேசிக்கப்பட்டால், உன்னால் நேசிக்க முடிந்தால், நீ குறைவாக உணவருந்துவாய். யாராவது உன்னை நேசிக்கும் பொழுது உன்னால் அதிகம் உணவருந்த முடியாது. நேசம் உன்னை நிறைத்து விடுகிறது, நீ காலியாக உணர்வதில்லை. நேசம் இல்லாதபோது நீ காலியாக உணர்கிறாய், ஏதாவதொன்றை அடைக்க வேண்டும், அதற்காக நீ உணவைத் திணிக்கிறாய்.

இதற்கு காரணங்கள் உள்ளன, வேர்க் காரணங்கள் உள்ளன. ஒரு குழந்தை முதல்
நேசத்தையும், உணவையும் ஒருசேரவே எதிர்கொள்கிறது. அதே தாயிடமிருந்து, அதே மார்பகத்திலிருந்து, அதற்கு உணவும் நேசமும் கிடைக்கிறது, அதனால் அவை இரண்டும் சேர்ந்துவிட்டன. தாய் நேசத்தோடு இருந்தால், குழந்தை ஒருபோதும் அதிகப்பால் குடிக்காது. அதற்கு அவசியம் இல்லை. அது எப்போதும் நேசத்தில் பாதுகாப்பாக உள்ளது. அதற்கு தேவைப்படும்போது உணவு வரும் என்று அதற்குத் தெரியும். தாய் அங்கு இருப்பாள், பால் அங்கு இருக்கும் எனத் தெரியும். குழந்தை பாதுகாப்பாக உணர்கிறது. ஆனால் தாய் நேசத்துடன் இல்லாவிட்டால், அப்போது அதற்கு பாதுகாப்பில்லை. அப்போது அதற்கு பசிக்கும்போது உணவு கிடைக்குமா என்பது தெரியாது, ஏனெனில் நேசம் அங்கு இல்லை. அப்போது குழந்தை அதிகமாக உண்ணும். பின் இதுவே தொடரும், இது ஒரு உணர்வற்ற
வேராக ஆகிவிடும்.

ஆகவே நீ உனது உணவை மாற்றிக் கொண்டே போகலாம் – இதைச் சாப்பிடுதல்,
அதைச் சாப்பிடுதல், இதைச் சாப்பிடாமல் இருத்தல் இப்படி நீ எதைச் செய்தாலும் அவை ஒன்றுதான். ஏனெனில் அடிப்படை வேர் அங்கேயேதான் இருக்கிறது. ஆகவே நீ உன்னில் உணவை அடைப்பதை நிறுத்திவிட்டால், நீ வேறு ஏதாவதொன்றை அடைத்துக்கொள்ள துவங்குவாய்.
அதற்கு பல வழிகள் உள்ளன. நீ அதிகம் உணவருந்துவதை நிறுத்திவிட்டால், நீ பணத்தைச் சேர்க்க ஆரம்பிக்கலாம்.

ஆழமாக கவனி, பணத்தைச் சேர்க்கும் ஒருவன் நேசத்தை ஒருபோதும்
அறியாதவனாகவே இருப்பான், அவனுக்குத் தெரியாது, ஏனெனில் பணத்தைச் சேர்ப்பது உண்மையில் ஒரு மாற்றுதான். பணத்தின் மூலம் அவன் இப்போது பாதுகாப்பாக உணர்வான். நீ நேசிக்கப்படும்போது, அங்கு பாதுகாப்பற்றதன்மை இல்லை, நேசத்தில் எல்லா பயங்களும் மறைந்து விடுகின்றன. நேசத்தில் எதிர்காலம் இல்லை, இறந்தகாலம் இல்லை. இந்தக்கணமே
போதுமானது, இந்த இக்கணம் எல்லையில்லாதது ஆகிறது. நீ ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டாய். எதிர்காலத்தைக் குறித்த பதட்டம் அங்கில்லை, நாளை என்ன நடக்கும் என்ற கவலையில்லை – நேசத்தில் நாளை என்பதில்லை.

ஆனால் நேசம் அங்கில்லாதபோது, அங்கு நாளை வந்துவிடுகிறது. என்ன
நடக்குமோ. பணத்தைச் சேர்த்து, ஏனெனில் மனிதர்கள் யாரையும் சார முடியாது. ஆகவே பொருட்களை சார்ந்துவிடு, பணத்தையும், செல்வத்தையும் சார்ந்துவிடு. சிலர், – பணத்தைச் சேர்த்தாதே, உனது பணத்தை தானம் செய். பணத்தோடு பிடிப்பு கொள்ளாதே – என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் இவை மேலோட்டமானவை, ஏனெனில் உள் தேவை அப்படியேதான் இருக்கிறது. ஆகவே அவன் வேறு எதையாவது சேர்க்க ஆரம்பிப்பான்.. வேர்கள் அழிக்கப்படும்வரை,  ஒரு வெளிப்படுதலை அடைத்தால், நீ வேறு ஒன்றை உருவாக்கித்தான் ஆகவேண்டும். ஆகவே வெளிப்புறத்தைக் குறித்து அதிக அக்கறை கொள்ளாதே. உனது வெளிப்புற சமூகமுகம் எதுவாக இருந்தபோதிலும்
அதில் விழிப்புணர்வோடிரு. அதைக்குறித்து விழிப்புணர்வோடிரு, எச்சரிக்கையோடிரு, மேலும் மேல்மட்டத்திலிருந்து எப்பொழுதும் வேர்களை நோக்கிச் சென்று, அங்குள்ள மூலகாரணத்தை அறி. எவ்வளவு சங்கடத்தைக் கொடுத்தாலும், வேர்களுக்குப் போ. உன்னால் வேர்களை அறிய முடிந்துவிட்டால், வேர்களை வெளிக்கொணர்ந்து விட்டால்………..

இந்த விதியை நினைவில் கொள், வேர்கள் இருட்டில் மட்டுமே இருக்க
முடியும் – மரத்தின் வேர்கள் மட்டுமல்ல, எல்லாவற்றினுடைய வேர்களும் அப்படித்தான். அவை இருட்டில் மட்டுமே இருக்க முடியும். அவைகள் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டால், அவை இறந்துவிடும்.


ஆகவே உனது மேல்மட்டத்தோடு நகரு, அதை ஆழமாகத் தோண்டி வேர்களுக்குப் போ, பின் வேர்களை தன்னுணர்வுக்குள், வெளிச்சத்திற்குள், கொண்டு வா. நீ வேர்வரை வந்துவிட்டால், அது மறைந்துவிடும். நீ அதைக் குறித்து எதுவும் செய்ய
வேண்டியதில்லை. பிரச்சனை என்னவென்று தெரியாதபோதுதான், நீ ஏதாவது செய்ய வேண்டும். சரியாகப் புரிந்துகொள்ளப்படும் பிரச்சனை மறைந்துவிடுகிறது. ஒரு பிரச்சனையை சரியாகப் புரிந்துகொள்ளும்போது, ஒரு பிரச்சனையை வேர்வரை புரிந்துகொள்ளும்போது, அது
அந்தப் பிரச்சனையை மறையச் செய்து விடுகிறது. இது முதல் விஷயம்.


இரண்டாவது விஷயம் – நீ செய்வது எல்லாமே மேலோட்டமானதுதான், அது நீ உன் முழுமையோடு செய்வதல்ல. ஆகவே ஒரு மனிதனை அவனது செயல்களிலிருந்து முடிவுசெய்யாதே, ஏனெனில் செயல் மிகவும் அணுவளவுதான். நீ ஒரு மனிதனை கோபமாய் இருக்கையில்
பார்க்கிறாய், அதனால் அவன் வெறுப்பாலும், வன்முறையாலும், பழிவாங்குதலினாலும் நிறைந்தவன் என்று நீ முடிவு செய்யலாம். ஆனால் சிறிது நேரத்தில் கோபம் மறைந்து விடுகிறது, அந்த மனிதன் மிகவும் அன்பானவனாக மாறிவிடுகிறான், வேறுவிதமான வாசனை, வேறுவிதமான மலர்ச்சி அவனது முகத்திற்கு வந்துவிடுகிறது.  அந்தக் கோபம் அணு போன்றது. முழு மனிதனையும்
அதைவைத்து முடிவு செய்யாதே. மேலும் இந்த அன்பும் அணு போன்றதே. அவனது இந்த அன்பை வைத்து முழு மனிதனையும் எடைபோடாதே.

நீ செய்தவையெல்லாம் உனது மொத்தமும் ஆகிவிடாது. உனது செயல்கள் வெறும் அணு போன்றவையே – உனது பாகம்தான் என்பதுண்மை, ஆனால் உனது முழுமை அவைகளைக் கடந்தது. நீ உடனடியாக வேறுவிதமாக ஆக முடியும். மேலும் உனது நடத்தை, உனது செயல்கள், உனது செயல்பாடுகள் மூலமாக உன்னைப்பற்றி அறியப்பட்டதற்கெல்லாம், நீ முரண்பட முடியும். நீ
ஒரு புனிதனாய் இருக்கலாம், நீ இந்தக் கணமே ஒரு பாவியாகிவிட முடியும். நீ, ஒரு புனிதன் இப்படி செய்வாய் என்று ஒருவரும் நினைத்துக்கூட
பார்க்க முடியாது, ஆனால் நீ அதைச் செய்ய முடியும். அது முடியாததல்ல. நீ, இந்தக்கணம் வரை பாவியாக இருந்திருக்கலாம், அடுத்த கணத்தில் நீ அதை விட்டு வெளியே குதித்து விடலாம்.

நான் சொல்வது என்னவென்றால், உனது உட்புறம், உனது வெளிப்புறத்தை வைத்து தீர்மானிக்க முடியாத அளவு மிகவும் பரந்தது, மிகவும் பெரியது என்பதே. உனது வெளிப்புறம் எப்போதுமே மேலோட்டமானதும், தற்செயலான நிகழ்வுமே ஆகும். நான் திரும்பவும் கூறுகிறேன். உனது வெளிப்புறம் எப்போதுமே முக்கியமற்ற நிகழ்வே, உன்து உட்புறமே சத்து, முக்கியமானது. ஆகவே உட்புறத்தை திறக்கவேண்டியதை மறந்துவிடாதே,
வெளிப்புறத்தோடு பிணைப்பு கொண்டுவிடாதே.

மேலும் ஒரு விஷயம் – வெளிப்புறம் எப்போதும் கடந்துசென்றதே. அது
எப்போதும் இறந்ததுதான். ஏனெனில் நீ எதைச் செய்திருந்தாலும், அதைச் செய்துவிட்டாய், அவ்வளவுதான். அது கடந்தகாலம்தான், அது ஒருபோதும் உயிர்துடிப்புள்ளதாகாது. உட்புறம் எப்போதும் உயிர்துடிப்போடு உள்ளது, அது இங்கு அப்போது உள்ளது, ஆனால் வெளிப்புறம் இறந்தகாலம்தான். உனக்கு என்னைத் தெரியும் என்றால் – உனக்கு என் இறந்தகாலம்
தெரியும், என்னைத் தெரியாது. நான் இங்கிருக்கிறேன், வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இது எனது உட்புறம், என்னைப்பற்றி எவ்வளவு உனக்கு தெரிந்திருந்தாலும், அது வெளிப்புறம்தான். அது இறந்தது, அது இப்போது அங்கில்லை.

இதை உனது தன்னுணர்விலேயே கவனித்துப்பார். நீ செய்துமுடித்துவிட்ட
எதுவும் உன்னை கட்டிப்போடுவதில்லை. அது அங்கு இப்போது இல்லை, அது வெறும் ஒரு ஞாபகம். மேலும் நீ அதைவிட அதிகமானவன். உனது அளவற்ற சாத்தியங்கள் உன் முன்னே உள்ளன. நீ ஒரு புனிதன் அல்லது நீ ஒரு பாவி என்பது தற்செயலான ஒன்றே. நீ ஒரு இந்து அல்லது நீ ஒரு கிறிஸ்துவன் என்பதும் தற்செயலானதே. ஆனால் உனது உள் இருப்பு தற்செயலானதல்ல,
அது சத்து, முக்கியமானது.

உட்புறத்திற்கான வலியுறுத்தல் என்பது சத்தின் மீதான வலியுறுத்தல்தான்.
மேலும் உட்புறம் சுதந்திரமானது, வெளிப்புறம் அடிமையானது. ஏனெனில் அது
நடந்தபின்தான் வெளிப்புறத்தை நீ அறிய முடியும், ஆனால் அப்போது அதைக்குறித்து நீ எதுவும் செய்யமுடியாது. உனது கடந்தகாலத்தை குறித்து நீ என்ன செய்ய முடியும். அதை மாற்ற முடியாது. நா பின்னால் நகர முடியாது. கடந்தகாலத்தை நீ எதுவும் செய்ய முடியாது, இது ஒரு அடிமைநிலை.

நீ இதை சரியாகப் புரிந்து கொண்டால், அப்போது நீ கர்மா விதியை.
செயல்களின் விதியை சரியாக புரிந்துகொள்ள முடியும். இந்த விதி – இந்து புரிதலின் மிக முக்கிய பகுதி இது – என்னவென்றால், நீ கர்மாக்களை கடந்து செல்லவில்லை என்றால் நீ சுதந்திரம் அடைவதில்லை, நீ கர்மாக்களை கடந்து செல்லவில்லையென்றால், நீ பிணைக்கப்பட்டே இருப்பாய். வெளிப்புறத்திற்கு அதிக கவனம் கொடுக்காதே, அதைப் பிடித்துக் கொள்ளாதே. அதன் உதவியை எடுத்துக்கொள், ஆனால் உட்புறத்தை கண்டுபிடிக்க வேண்டுமென்பதை எப்போதும் நினைவில் வை.

நாம் ஆலோசிக்கும் இந்த யுக்திகள் உட்புறத்திற்கானவை, உட்புறத்தை
கண்டுபிடிக்க உதவுவை. ஒரு விஷயம் கூறுகிறேன் – பல மரபுகள் இப்படி அழிந்துள்ளன. உதாரணமாக, மிக மிக்கியத்துவம் வாய்ந்த மரபுகளில் ஒன்று ஜைனமதம். ஆனால் அது வெளிப்புறத்திற்கு மிக அதிக முக்கியத்துவத்தை கொடுத்துவிட்டது, மிக அதிகம், தியானம் என்று ஒன்று இருப்பதையே மறந்துவிடுமளவு, யோகா போன்ற ஒரு விஞ்ஞானம்
இருப்பதையே மறந்திவிடுமளவு ஆகிவிட்டது. அவர்கள் சுத்தமாக மறந்துவிட்டனர்.

அவர்கள் உணவை, உடையை. உறக்கத்தை, எல்லாவற்றையும் பிடித்துக் கொண்டனர். ஆனால் தியானத்திற்கான எந்த முயற்சியும் இல்லை. அவர்களது மரபில் தியானம் இல்லை என்பதல்ல, ஏனெனில் தியானமில்லாமல் எந்த மதமும் பிறக்கமுடியாது, ஆனால் அவர்கள் எங்கோ ஒரிடத்தில் வெளிப்புறத்தைப் பிடித்துக்கொண்டு விட்டார்கள். அது மிகவும் முக்கியமாகிவிட்டது. இந்த முழு சூழலும் வெறும் ஒரு உதவிதான், இலக்கு அதுவல்ல, என்பதை அவர்கள் மறந்துவிட்டனர்.

நீ என்ன உண்கிறாய் என்பது இலக்கல்ல. நீ எதுவாக இருக்கிறாய் என்பதே
இலக்கு. உனது  உணவு பழக்கம், உனது இருப்பை கண்டுபிடிக்க உதவினால், அது நல்லதுதான். ஆனால் நீ உணவைப் பிடித்துக்கொண்டால்,
எப்போதும் அதைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தால், நீ விஷயத்தைக்
கோட்டைவிட்டவனாகி விடுகிறாய். அப்போது நீ ஒரு உணவுப்பழக்க அடிமை. நீ ஒரு பித்துப்பிடித்தவன், பயித்தியம்.

மூலம் – தந்த்ரா ரகசியங்கள் பாகம் 4 # 2

Comments