Google

சமூகம்

சமூகம் 💕


முன்னொரு காலத்தில் கிதர் என்றொரு ஞானி இருந்தார்.ஒரு நாள் அனைவரையும் கூப்பிட்டு அவர் சொன்னார்.

''நாளையிலிருந்து உலகம் முழுவதும் தண்ணீரின் குணம் மாறிவிடும்.அதனைக் குடிப்பவர்கள் அனைவரும் பைத்தியம் ஆகி விடுவார்கள்.

இப்போது தண்ணீரை கொஞ்சம் மிச்சப் படுத்தி வைப்பவர்கள் மட்டுமே இந்த கொடுமையிலிருந்து தப்பிக்க முடியும்.''

யாரும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

ஒரே ஒருவன் மட்டும் கொஞ்சம் தண்ணீரை மிச்சப்படுத்தி வைத்துக் கொண்டான்.

மறுநாள் ஞானி சொன்னது போலவே நடந்தது.அந்த ஒரு ஆளைத் தவிர அனைவரும் பைத்தியம் ஆகி விட்டார்கள்.

இவன் ஒருவன் மட்டும் எப்போதும்போல இருந்தான்.

அனைவரும் பைத்தியம் ஆகி விட்டதை அவர்கள் நடவடிக்கைகளிலிருந்து தெரிந்து கொண்டான்.

அந்தப் பைத்தியக்காரர்களிடமிருந்து தான் தனித்து நிற்பது அவனுக்கு மெல்ல மெல்ல விளங்கலாயிற்று.

ஊர் மக்கள் அனைவரும் இவனைப் பைத்தியம் என்று கூற ஆரம்பித்தார்கள்.

பாவம்!இவன் ஒரு தனி ஆள்.அவனால் தான் பைத்தியம் இல்லை என்றும் மற்றவர்கள் அனைவரும் பைத்தியம் என்றும் எப்படி நிரூபிக்க முடியும்?

பொறுக்க முடியாமல் ஒரு நாள் அவனும் புதிய தண்ணீரை எடுத்துக் குடித்து விட்டான்.

அவனும் இப்போது பைத்தியம் ஆகி விட்டான்.ஊர் மக்கள் இப்போது சொன்னார்கள்,''நம்மிடையே ஒரு பைத்தியக்காரன் இருந்தான்.அவனும் இப்போது குணமடைந்து விட்டான்..''

இந்தக் கதையின் கருத்து என்ன?

ஓஷோ சொல்கிறார்:

சமூகம் மக்களின் மனோதத்துவத்தில்தான் வாழ்கிறது.உண்மையைப் பற்றிய கவலை சமூகத்தில் யாருக்கும் கிடையாது.

மற்றவர்களுடன் கருத்து வேறுபாடின்றி இருப்பதிலேயே அது கவலை கொள்கிறது.

சமூகத்துடன் ஒருவன் எவ்வாறு ஒத்துப் போவது என்ற கவலையே அது கொள்கிறது.

சமூகம் பொய் என்றால் அவனும் பொய்யாகி விட வேண்டியிருக்கிறது.

மனிதன் மிகவும் தனியானவன்.சமூகமோ மிகப் பெரியது.

--ஓஷோ

Comments