Google

தியானம் என்பது மனமற்ற நிலை





தியானம் என்பது மனமற்ற நிலை. அது எந்த உள்ளடக்கமும் (மனதில்) இல்லாத ஒரு தூய உணர்வுநிலை. சாதாரணமாக உங்கள் விழிப்புணர்வு கண்ணாடியில் தூசு படிந்திருப்பதை போல அதிகமான குப்பைகளால் நிறைந்திருக்கிறது. 

மனம் ஒரு இடைவிடாத போக்குவரத்து நெரிசல். எண்ணங்களும், ஆசைகளும், நினைவுகளும், குறிக்கோள்களும் நகர்ந்துகொண்டே இருக்கின்றன. அது பகல் முழுவதும், இரவு முழுவதுமான ஒரு தொடர்ந்த நெரிசல். 

நீங்கள் தூக்கத்தில் இருக்கும்போதுகூட மனம் செயல்படுகிறது. அது கனவு காணுகிறது; அது சிந்தனையிலேயே (STILL) இருக்கிறது; எப்போதும் கவலைகளிலும் துன்பங்களிலுமே இருக்கிறது. அது நாளைய தினத்திற்காக தயார் செய்கிறது. உங்கள் அடித்தளத்தில் ஒரு தயாரிப்பு நடந்து கொண்டேதான் இருக்கிறது. 

தியானமற்ற நிலை என்பது இதுதான். இதன் எதிர்நிலையே தியானம் ஆகும். நெரிசல் இல்லாத பொது, சிந்தனை நின்றுவிடுகிறது. எண்ணங்கள் நகர்வதில்லை. ஆசைகள் கிளர்ச்சியூட்டுவதில்லை. நீங்கள் முற்றிலும் அமைதியில் இருக்கிறீர்கள். அந்த அமைதியே தியானம் ஆகும். அந்த அமைதியில் உண்மை அறியப்படுகிறது.  வேறு எந்த வகையிலும் நீங்கள் உண்மையை அறிய முடியாது. 

தியானம் என்பது மனமற்ற நிலை. எனவே நீங்கள் மனதின் மூலமாக தியானத்தை கண்டறிய முடியாது. ஏனெனில் அப்போது மனம், தன்னை நிலைப்படுத்திக்கொள்ளும். நீங்கள் மனதை ஒருபக்கமாக ஒதுக்கி வைத்துவிடுவதால் மட்டுமே, தியானத்தை கண்டறிய முடியும். 

“நான் இந்த மனம்” என்று நினைக்காமல் இருப்பதன் மூலமாக;
அதோடு அடையாளப்படுத்திக்கொள்ளாமல் இருப்பதன் மூலமாக;
மற்றும், அது கடந்து செல்வதை கவனிப்பதன் மூலமாக;
தியானத்தை கண்டறிய முடியும்.
‘நான் மனம் இல்லை’ என்ற விழிப்புணர்வே தியானம் ஆகும்.

இந்த விழிப்புணர்வு உங்களிடம் ஆழமாக செல்ல செல்ல, மெதுவாக மெதுவாக சில கணங்கள் வரும். அவை அமைதியின் தருணங்கள்.. தூயவெளியின் தருணங்கள்.. வெளிப்படுத்தலின் தருணங்கள்.. 

உங்களில் கிளர்ச்சி இல்லாத அந்த தருணங்களில் - அனைத்தும் நின்று விடுகின்றன. அந்த அசைவற்ற கணங்களில் நீங்கள் யார் என்பதை அறிந்து கொள்வீர்கள்.. தியானம் உங்களின் இயற்கையான நிலையாக ஆகிவிடும், ஒரு நாள் வரும். அது சிறந்த ஆசீர்வதிக்கப்பட்ட நாள். 

மனம் இயற்கையில்லாத ஒன்று. அது உங்கள் இயற்கையான நிலையாக முடியாது. ஆனால் தியானம் நம் இயற்கையான நிலை ஆகும். அது நாம் இழந்துவிட்ட ஒரு இயற்கையான நிலை. அதை ஒரு ‘சுவர்க்கத்தின் இழப்பு’ எனலாம். ஆனால் அந்த சொர்க்கம் திரும்ப பெறக்கூடியது தான்.

ஒரு குழந்தையின் கண்களை பாருங்கள். நீங்கள் ஒரு பேரமைதியையும், களங்கமின்மையையும் பார்ப்பீர்கள். ஒவ்வொரு குழந்தையும் ஒரு தியான நிலையோடுதான் வருகிறது. ஆனால் பிறகு அது சமுதாயத்தின் விஷயங்களுக்கே தூண்டப்படுகிறது, வழிநடத்தப்படுகிறது. 

எப்படி சிந்திப்பது, எப்படி கணக்கிடுவது, எப்படி நியாயம் கொள்வது, எப்படி வாதிப்பது என அது படிக்கிறது. பிறகு அது வார்த்தைகள், மொழி, CONCEPTSகளை  கற்கிறது. 

மெதுவாக மெதுவாக அது தனது கள்ளங்கபடமற்ற தன்மையுடனான தொடர்பை இழக்கிறது. சமுதாயத்தால் பாதிக்கப்பட்டதாக, மாசுபடுத்தப்பட்டதாக ஆகிறது. அது வளர்ந்து - ஒரு திறமையான இயந்திர தன்மையுடையதாக ஆகிறது. இன்னும் அது ஒரு மனிதன் அவ்வளவுதான்.

இப்போது (செய்ய) வேண்டியதெல்லாம், மீண்டும் அந்த தூயவெளியை திரும்ப பெறுவது தான். அது நீங்கள் முன்பே அறிந்ததுதான்.  முதல் தடவையாக நீங்கள் தியானத்தை அறியும்போது, நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். ஏனென்றால், அந்த தூயவெளியானது நீங்கள் முன்பே அறிந்ததாக இருப்பதால், ஒரு பேருணர்வு உங்களிடம் ஏற்படும். 

அந்த உணர்வே உண்மையானதாகும். நீங்கள் ஏற்கனவே அறிந்தது - ஆனால் மறந்துவிட்டது. ஒரு வைரமானது, குப்பை கூளங்களுக்குள் தொலைந்துவிட்டது. ஆனால் நீங்கள் அந்த குப்பைகளை விலக்க முடியுமானால், மீண்டும் அந்த வைரத்தை கண்டறிய முடியும். அது உங்களுடையது.

உண்மையில் அது இழக்க கூடியது அல்ல. மறந்திருப்பது மட்டுமே. நாம் தியானிப்பவர்களாகவே பிறக்கிறோம். அப்புறம் மனத்திற்கான விஷங்களை படிக்கிறோம். ஆனால் நமது ‘உண்மை இயல்பு’ எங்கோ அடியாழத்தில், ஒரு நீரோட்டம் போல இருக்கத்தான் செய்கிறது. எந்த ஒரு நாளிலும் - ஒரு சிறு தோண்டலில் - அந்த சக்தியானது, பொங்கி வருவதை, நீங்கள் கண்டறிவீர்கள். தூய நீரின் ஊற்று அது. வாழ்வின் மிகப்பெரும் மகிழ்ச்சி இதை கண்டறிவதுதான்.

Comments