மனிதனும் எலிகளும் - Osho
புரிந்து கொள்ளல்: பகுதி (2)
மனிதனும் எலிகளும்:
நம்மைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்று முற்றிலும் கவனமில்லாமல் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆம், நாம் காரியங்களைச் செய்வதில் மிகவும் திறமையானவர்களாக ஆகிவிட்டோம். நாம் எதைச் செய்தாலும், அதைத் திறமையுடன் செய்வதற்கு எந்தவிதமான விழிப்புணர்வும் அவசியமில்லாதபடிக்கு திறமைமிக்கவர்களாக ஆகிவிட்டோம். அந்தச் செயல் இயந்திரத்தனமாக, தானியங்கித்தனமாக ஆகிவிட்டது. நாம் இயந்திர மனிதன் போன்று செயல்படுகிறோம். நாம் இன்னமும் மனிதர்களாக இல்லை; நாம் இயந்திரங்களாகத் தான் இருக்கிறோம்.
மனிதன், இப்போது இருப்பது ஒரு இயந்திரம் போன்று தான் என்கின்ற இந்த கருத்தை ஜார்ஜ் குர்ட்ஜியப் மீண்டும் மீண்டும் கூறுவதுண்டு. இது, பலருக்குத் தங்களை தரம் தாழ்த்துவதாகத் தெரிந்தது. ஏனெனில், யாரும் தன்னை ஒரு இயந்திரம் என்று அழைக்கப்பட விரும்புவதில்லை. அதே இயந்திரங்களை நீங்கள் கடவுள்கள் என்று அழைத்தால், அவர்கள் எழுச்சி பெற்றவர்களாகி மிகவும் சந்தோஷமடைகின்றனர். ஆனால் குர்ஜியப், மக்களை இயந்திரங்கள் என்றுதான் அழைப்பார். மேலும், அவர் அழைப்பது சரிதான். நீங்கள் உங்களை கூர்ந்து கவனித்தால், நீங்கள் எந்த அளவுக்கு இயந்திரத்தனமாக நடந்து கொள்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்வீர்கள்.
ரஷ்ய உடலியல் விஞ்ஞானி பாவ்லோவ்வும், அமெரிக்க மன இயல் நிபுணர் ஸ்கின்னரும் மனிதனைப் பற்றி கூறியவை 99.9 சதவீதம் சரியானவை; அவர்கள், மனிதன் என்பவன் ஒரு அழகான இயந்திரம் என்று நம்புகின்றனர். அங்கே அவனிடம் ஆன்மா என்று ஒன்று இல்லை. அவர்கள் கூறுவது 99.9 சதவீதம் சரிதான் என்று கூறுகிறேன்; அவர்கள் ஒரு சிறிய வரம்பில் தான் தவறிவிட்டனர். அந்த சிறிய வரம்பில் தான் புத்தர்களும், விழிப்படைந்தவர்களும் உள்ளனர். ஆனால், அவர்களை மன்னித்துவிடலாம். ஏனெனில், பாவ்லோல் ஒருபோதும் ஒரு புத்தரைப் பார்த்தது கிடையாது. அவர், உங்களைப் போன்ற லட்சக்கணக்கான மக்களைத்தான் பார்த்து வந்திருக்கிறார்.
ஸ்கின்னர் மனிதனையும், எலிகளையும் பற்றி ஆராய்ச்சி செய்து வந்துள்ளார். அவர் இரண்டிற்கும் இடையில் எந்த ஒரு வித்தியாசத்தையும் காணவில்லை. எலிகள் மிகவும் சிறிய, எளிமையான உயிர்கள், அவ்வளவுதான். மனிதன், கொஞ்சம் அதிகம் சிக்கல் நிறைந்தவன்.
மனிதன் உயர்நுட்பம் நிறைந்த ஒரு இயந்திரம், எலிகள் எளிமையான இயந்திரங்கள். எலிகளை ஆராய்வது சுலபம்; அதனால்தான் மன இயல் நிபுணர்கள் எலிகளைப் பற்றி ஆராய்கின்றனர். அவர்கள், எலிகளை ஆராய்ச்சி செய்து, அதை மனிதனுக்குரிய முடிவாகக் கொள்கின்றனர். மேலும், அவர்களது முடிவுகள் கிட்டத்தட்ட சரியாகவே உள்ளன. நான் கிட்டத்தட்ட என்று கூறுவதை கவனத்தில் கொள்ளுங்கள். ஏனெனில், அவர்கள் கண்டுபிடிக்காமல் விட்டுவிட்ட அந்த 1 சதவீதத்தில் பத்தில் ஒரு பங்கில்தான், இங்கே நிகழ்கின்ற அதி முக்கியமான விஷயங்கள் உள்ளன. ஒரு புத்தர், ஒரு இயேசு, ஒரு முகம்மது -- ஆகிய விழிப்புணர்வு பெற்ற ஒரு சிலர்தான் உண்மையான மனிதர்கள். ஆனால், B.F.ஸ்கின்னரால் ஒரு புத்தரை எங்கே பார்க்க முடியும்? அப்படியே அவர் ஒரு புத்தரைப் பார்த்தாலும் கூட, அவர் ஏற்கனவே தீர்மானித்து வைத்திருக்கிற அவரது கருத்துக்கள் அவரைப் பார்ப்பதற்கு அனுமதிக்காது. அவர், தனது எலிகளைத்தான் பார்ப்பார். எலிகளால் செய்ய முடியாத எதையும் அவரால் புரிந்து கொள்ள முடியாது. இப்போது எடுத்துக் கொண்டால் எலிகள் தியானம் செய்யாது, எலிகள் மெய்ஞானிகள் ஆவது கிடையாது. ஆனால் அவரோ, இந்த மனிதனை பெரிதாக்கப்பட்ட ஒரு எலியின் உருவமாகத் தான் பார்க்க முடியும் என்றாலும்கூட, இப்போதுள்ள பெரும்பான்மை மக்களை எடுத்துக் கொண்டால், அவர் கூறுவது சரிதான்; அவரது கண்டுபிடிப்புகள் தவறானவை அல்ல. மேலும், இப்படிப்பட்ட சாதாரண மனித இனத்தை குறித்து அவர் கூறுவதை, புத்தர்களும்கூட ஒத்துக் கொள்வார்கள். சாதாரண மனித இனம், முழுமையான தூக்கத்தில் உள்ளது. விலங்குகள் கூட இந்த அளவுக்கு தூக்கத்தில் இல்லை.
காட்டில் உள்ள ஒரு மானை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? எவ்வளவு உஷாராக அது பார்க்கிறது, எவ்வளவு கவனமாக அது நடக்கிறது? மரக்கிளையில் உட்கார்ந்திருக்கும் ஒரு பறவையைக் கவனித்திருக்கிறீர்களா? அது, எந்த அளவுக்கு தன்னைச் சுற்றிலும் நடப்பதை புத்திசாலித்தனமாக கவனிக்கிறது? நீங்கள் அதை நோக்கி நகர்ந்தால், சில அடி தூரம் வரை அது உங்களை அனுமதிக்கின்றது. அதற்குமேல் நீங்கள் நகர்ந்தால், ஒரு அடி அதிகம் எடுத்து வைத்தால் போதும், அது உடனே பறந்து விடுகிறது. அதனுடைய எல்லை குறித்து, அது ஒரு குறிப்பிட்ட உஷார்த்தனத்துடன் இருக்கிறது. யாராவது அந்த எல்லைக்குள் நுழைந்துவிட்டால், அதன்பிறகு அது ஆபத்தானது என்று அறிகிறது. நீங்கள் சுற்றுமுற்றும் பார்த்தால், இங்கு, இந்த பூமியில் மனிதன் ஒருவன் மட்டும் தான் அதிக தூக்கத்தில் உள்ள விலங்கினம் போல் தெரிகிறான் என்பதை அறிந்து ஆச்சரியப்படுவீர்கள். ஓஷோ.
Comments
Post a Comment