ஏற்றுக் கொள்ளுதலே பிரார்த்தனை - OSHO
ஏற்றுக் கொள்ளுதலே பிரார்த்தனை
மரங்கள் மட்டுமல்ல, மேகங்கள் மட்டுமல்ல – முழுமை. என்ன நிகழ்ந்தாலும் அது
இயற்கையினால்தான் நிகழ்கிறது.
இயல்பில்லாதது எதுவுமேயில்லை, இருக்க முடியாது.
இல்லாவிடில் அது எப்படி நடக்கும் ஒவ்வொன்றும் இயற்கையானது.
அதனால் இது இயற்கையானது
இது இயற்கையில்லாதது என பிளவு ஏற்படுத்தாதே. என்னவாக இருந்தாலும் அதை அப்படியே
ஏற்றுக் கொள், அதை ஆராயாதே.
நீ மலையில் இருந்தாலும் சரி, மார்கெட்டில் இருந்தாலும் சரி நீ அதே
இயற்கையில்தான் இருக்கிறாய். சில இடங்களில் இயற்கை மலையாக, மரமாக இருக்கிறது, சில
இடங்களில் இயற்கை மார்க்கெட்டில் கடைகளாக இருக்கிறது.
ஒருமுறை நீ ஏற்றுக் கொள்ளுதலின் ரகசியத்தை தெரிந்து கொண்டு விட்டால் பின்
கடைவீதியும் கூட அழகானதாகி விடும். கடைவீதிகென்றே ஒரு அழகு இருக்கிறது. அங்கே உள்ள
அதன் வாழ்வு, அந்த துடிப்பு, சுற்றி ஓடிக் கொண்டிருக்கும் அந்த அழகான
கிறுக்குத்தனம் எல்லாமும் அழகானது. அதற்கே உரிய அழகு இருக்கிறது. மேலும் கடைவீதி
இல்லையென்றால் மலைகள் அவ்வளவு அழகாக இருக்காது. மலைகள் அவ்வளவு அழகாகவும் அவ்வளவு
அமைதியானதாகவும் இருக்க காரணம் கடைவீதி இருப்பதுதான். கடைவீதிதான் மலைகளுக்கு
மௌனத்தை கொடுக்கிறது.
நீ ஒரு மரத்தின் அடியில் உட்கார்ந்து உன்னை முழுமையாக மறந்து விடலாம். நீ
கரைந்து போய்விடும் அளவு உன்னை மறந்து விடலாம். நீ தெருவில் நடனமாடலாம், நீ
உன்னையே மறந்து விடும் அளவு உன்னை இழந்து நடனமாடலாம். என்ன நிகழ்ந்தாலும் அதில்
முழுமையாக கரைந்து ஒன்றி போய் விடுதலே அதன் ரகசியம். உனது மேகம் நகரும் வழியை
கண்டுபிடி, பொழியும் இடத்தை பார், அதை முழுமையாக அனுமதி. எங்கே அது பொழிந்தாலும்
அது தெய்வீகத்தை சென்று சேரும். சண்டையிடாதே. மித, நதியுடன் போராடாதே. அதனுடன்
மிதந்து போ. நடனத்துடன் நீ முழுமையாக ஒன்றி போகும்போதுதான் அது அழகானது, அதுதான்
முக்கியம். எதையும் புறந்தள்ளாதே. புறந்தள்ளுதல் ஆன்மீகமானதல்ல. முழுமையாக ஏற்றுக்
கொள். ஏற்றுக் கொள்ளுதலே பிரார்த்தனை.
- OSHO _Tamil
Comments
Post a Comment