ஞான நிலை நிகழும் ரகசியத்தை சொல்லும் கதை
செயலற்ற செயல்
ஒரு நாள் இரவு நான் ஒரு சூஃபி கதையை படித்துக் கொண்டிருந்தேன். எனக்கு அது மிகவும் பிடித்தது. நான் அதை
அனுபவித்தேன். நான் அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
ஒரு சூஃபி ஞானி கடவுளை தேடி நாடுநாடாக அலைந்து திரிந்து கொண்டிருந்தார். அவர் பல குருமார்களை சந்தித்தார். ஆனால் எதுவும் அவருக்கு திருப்தியளிக்க வில்லை. இதயத்தை அர்ப்பணிக்க கூடிய இடத்தை
அவரால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.
ஏமாற்றத்தோடும் நிராசையோடும் அவர் வெளியே குருவை தேடுவதை நிறுத்தி விட்டு உள் குரலை கேட்பது என்று முடிவு செய்து, தனித்து இருப்பதற்காக காட்டுக்குச் சென்றார்.
அங்கு அவர் ஒரு மிக அழகான தேக்கு மரக் கூட்டத்தை கண்டார். பழமையான வயதான பல தேக்கு மரங்கள் ஒன்று கூடி ஒரு கூடாரம் போல உருவாகியிருந்தன. அதன் கிளைகள் ஒன்றுடன் ஒன்று பின்னி பிணைந்து இயற்கையின் மழை, காற்று, வெயில் ஆகிய எல்லாவற்றிலிருந்தும் பாதுகாப்பு அளிக்கும் வகையில்
உருவாகியிருந்தது. அருகில் ஒரு ஏரி இருந்தது. அந்த கூடாரம் மிகவும் அமைதியானதாக,
காட்டின் நடுவில் யாரும் வராத இடத்தில் இருந்தது.
அந்த சூஃபி அதனுள் சென்றார்.
அவருக்கு அந்த இடம் மிகவும் பிடித்தது. அதற்கே உரிதான அழகுடன் அந்த இடம் இருந்தது.
அவர் அங்கே உட்கார்ந்து தியானம் செய்ய ஆரம்பித்தார். வாரத்திற்கு ஒருமுறை அவர்
அந்த இடத்தை விட்டு வெளியே வந்து பக்கத்து கிராமத்துக்குப் போய் கொஞ்சம் உணவு வாங்கி
சாப்பிட்டு விட்டு திரும்பவும் வந்து உட்கார்ந்து தியானம் செய்ய ஆரம்பித்து விடுவார்.
சூஃபிக்கள் கடவுளின் பெயரை அல்லா என்று திரும்ப திரும்ப உச்சரிப்பர்.
முகம்மதியர்களின் மந்திரமான இதன் பொருள், `கடவுள் என்று யாரும் இல்லை. ஆனால் கடவுள் உண்டு.` ஆனால் சூஃபிகள் இதை அல்லா என்ற ஒரே வார்த்தைக்குள் சுருக்கி
விட்டனர். இதற்கு அவர்கள் கூறும் காரணம் திடீரென ஒருநாள் மந்திரத்தை உச்சரித்துக்
கொண்டிருக்கும் போதே இறந்து விடக்கூடும். அப்படி உச்சரித்துக் கொண்டிருக்கும்போதே
இறந்து விட்டால் பாதியில் கடவுள் இல்லை என்று கூறிக் கொண்டிருக்கும்போது இறக்க
நேரிட்டால் நீ ஒரு நாத்திகனாக இறந்து விடுவாய். கடைசி நிமிடத்தில் எல்லாமும்
குழம்பி விடும். எதிர்மறையாளனாகி விடுவாய். அதனால் அது ஆபத்தானது என்பதாகும்.
அதனால் அவர்கள் இந்த முகம்மதிய மந்திரத்தை அதன் முழுவதுமாக சொல்வதில்லை. வெறுமனே அல்லா
அல்லா எனக் கூறுவதோடு சரி. அல்லா எனக் கூறிக் கொண்டே இருந்தால் கடைசி நிமிடத்தில்
கூட அவர்கள் இதயம் நிரம்பி, அவர்கள் மூச்சுக் காற்றுக்கூட அல்லா எனக் கூறும்,
கடவுளின் நினைவாகவே இறப்பர். இந்த நிலையைத்தான் அவர்கள் ஜீக்குரா என்று
அழைக்கின்றனர்.
இந்த சூஃபி தன்னுடைய மந்திரமான
அல்லா, அல்லா என்பதை மாதக்கணக்கில் உச்சரித்துக் கொண்டேயிருந்தார். அவர் மிகவும்
அமைதியாகவும், சாந்தமானவராகவும், தன்மையானவராகவும், மாறுவதை அவர் உணர
ஆரம்பித்தார். அந்த கூடாரத்தை சுற்றி மிகவும் ஆழ்ந்த மௌனம் இருந்தது. அது மிகவும்
அமைதியானதாக இருந்தது. அவர் தனக்குள்ளும் அந்த மௌனத்தை உணர துவங்கினார். அவரது
இருப்பின்னுள்ளும் அந்த அமைதி பரவியது. ஆனால் அவர் மகிழ்ச்சியாக இல்லை. அது
போதாது. முக்தி நிலை, ஞானமடைதல் அதற்கு இன்னும் வெகு தூரம் போக வேண்டும்.
வருடங்கள் கடந்தன. அந்த கூடாரம்
ஒரு தூய்மையான இடமாக மாறி விட்டது. தேக்கு மரங்கள் மிகவும் வளமடைந்தன. அவை புதிதாக
நிறைய கிளைகள் விட்டு, இலைகள் விட்டு செழிப்படைந்தன. அந்த கூடாரமே அழகால்
நிரம்பியிருந்தது. – ஆனால் அந்த சூஃபியின் இதயம்
மிகவும் வருத்தத்தில் இருந்தது. ஆனால் அவர் காத்துக் கொண்டேயிருந்தார்.
அவர் அவரால் செய்யக்கூடிய எல்லாவற்றையும் செய்து விட்டார். அவர் தியானமும்
பிரார்த்தனையும் செய்து கொண்டேயிருந்தார். பதினெட்டு வருடங்கள் கடந்துவிட்டன. ஆனால் அவர் முக்தி நிலை பெறவேயில்லை. அவர் ஆழ்ந்த மௌனத்திலும் அமைதியிலும் இருந்தார். ஆனாலும் அவர் ஞான
நிலை கிட்ட வில்லை. இருந்தது கரைந்து விட்டது, ஆனால் எதுவும் அவருக்கு நிகழவில்லை.
இருந்தது போய் வெறுமையாகி விட்டது, வெறுமை ஒரு விதமான அமைதிதான், ஆனாலும் வெறுமை
வெறுமையாகவே இருந்தது. வேறு எதுவும் செய்ய வழியில்லை.
ஒரு நாள் நடு இரவில் திடீரென
அவருக்கு ஒரு ஐயம் எழுந்தது. ஒரு சந்தேகம் தோன்றியது. ஏனெனில் பதினெட்டு வருடங்கள்
என்பது மிகவும் அதிகமானது, அவர் மிகவும் முயற்சி செய்து பார்த்து விட்டார், அவர்
தனது முழு மனதோடு அதில் ஈடு பட்டு இருந்தார், அவர் எதையும் பிடித்து வைக்கவில்லை,
அப்படியும் அது நடக்கவில்லை என்றால் அது எப்போதுமே நடக்காது போல தோன்றுகிறது. ஒரு
சந்தேகம் எழுந்தது, அவர் சிந்தித்து பார்க்க ஆரம்பித்தார். இந்த தேக்கு மரக்
கூட்டம் எப்படி மழையையும், வெயிலையும் உள்ளே அனுமதிப்பதில்லையோ, அது போல எனது
பிரார்த்தனையையும் வெளியே போக அனுமதிப்பதில்லையோ? இதன்
கிளைகள் மிகவும் அடர்த்தியாக உள்ளதால் எனது பிரார்த்தனைகள் உள்ளேயே நின்று
விடுகின்றதோ, இறைவனை போய் சேர வில்லையோ? எப்படி சூரிய ஒளி இந்த
கூடாரத்துக்குள் ஊடுருவ முடிந்ததில்லையோ, அது போல எனது பிரார்த்தனை இறைவனைப் போய்
சேர வில்லையோ? இந்த கூடாரம் ஒரு டிராகுலா போன்றதோ, ஒரு
ஒட்டுண்ணியோ என நினைத்தார்.
பயந்து போய் நட்ட நடு இரவில்
இருளில் உடனே அந்த கூடாரத்தை விட்டு தப்பியோடி விட்டார்.
ஆனால் அதே சமயத்தில் அந்த அடர்ந்த
மரக் கூட்டத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள சாலையில் ஒரு பிச்சைக்காரன் ஒரு
நகரத்திலிருந்து இன்னொரு நகரத்திற்க்கு போய் கொண்டிருந்தான். திடீரென அவனுக்கு
காட்டிற்க்குள் போக வேண்டுமென்ற தீவிர வேட்கை எங்கிருந்தோ தோன்றியது. அவன் அந்த
அவாவை அலட்சியம் செய்தான். காலைக்குள் அடுத்த ஊருக்குப் போய் சேர்ந்தாக வேண்டும்,
இன்னும் பாதி தூரம் கூட போய் சேர வில்லை. எதற்காக காட்டிற்க்குள் போக வேண்டும்? அது
ஆபத்தானது, காட்டிற்க்குள் விலங்குகள் இருக்கும், அவனுக்கு அங்கென்ன வேலை என
நினைத்தான். ஆனால் ஏதோஒன்று அவனை இழுத்தது. அவனால் எதுவும் செய்ய முடியவில்லை.
அவன் வகையற்று போனான். அவன் பைத்தியம் பிடித்தாற்போல காட்டிற்க்குள் ஓடலானான்.
நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என அவன் நினைத்தான். ஆனால் அவனது உடல் அவனது
கட்டுப்பாட்டில் இல்லாமல் அதன் போக்கில் இயங்கியது. அவன் தப்பியோட நினைத்தான்.
காட்டுக்குள் செல்வது மிகவும் ஆபத்தானது, அவன் பயந்தான், நடுங்கினான் – ஆனால்
பயனில்லை. ஆனால் அவன் அந்த மரக்கூடாரத்தை நெருங்கியவுடன் அவனுக்கு புரிந்தது.
அந்த மரக்கூடாரத்திலிருந்து ஒரு
மெல்லிய குரல் வந்தது. என்னிடம் வா. அது புற செவிகளுக்கு கேட்காது, ஆனால் அது
அவனுக்கு கேட்டது. அந்த கூடாரம் நம்பவே முடியாத அளவு ஜொலித்தது. அந்த முழு
கானகமும் இருட்டில் இருக்க, இந்த கூடாரம் மட்டும் தனியாக நீல வண்ணத்தில்
மின்னியது.
அது ஏதோ வேறு ஒரு உலகம் போலவும்,
அந்த மரத்திற்கு அடியில் ஏதோ ஒரு புத்தர் அமர்ந்திருப்பது போலவும், அதன் அடியில்
யாரோ ஒருவர் ஞானமடைந்தது போலவும், அந்த மரத்தை சுற்றி ஞானஒளியும், முக்தி நிலையின்
அமைதியும் பரவசமும் பரவி படர்ந்திருந்தது. அவன் அந்த மரத்தைச் சுற்றி ஒரு அதிர்வலை
இருந்ததை உணர்ந்தான். இப்போது அந்த பயம் போய் விட்டது. அவன் அந்த
மரக்கூடாரத்தினுள் நுழைந்தான். நுழைந்த அந்த கணமே அந்த நிலைமாற்றமடைந்தான். ஒரு
புதிய மனிதனாக பரிமணித்தான். அவனால் அவனை நம்பவே முடிய வில்லை. அவன் ஒரு சாதாரண
மனிதன், நல்லவனுமல்ல, கெட்டவனுமல்ல, ஒரு சராசரியான மனிதன்.
அன்றாட வாழ்க்கையின்
சிக்கல்களில், குழப்பங்களில், ஆழ்ந்து கிடப்பவன். அவன் ஒரு ஆத்திகனுமல்ல,
நாத்திகனுமல்ல. உண்மையில் அவன் கடவுளைப்பற்றி எனக் குறிப்பாக எதையும் நினைத்தது
கிடையாது. மதத்தைப்பற்றி எந்த கொள்கையும் கிடையாது. அவன் அதைப் பற்றி கவலைப்
பட்டதே கிடையாது. வாழ்க்கையின் பல பிரச்னைகளோடு அவன் போராடிக்
கொண்டிருந்தான்…..ஆனால் திடீரென அந்த மரக்கூடாரத்தில் நுழைந்தவுடன் அவன் ஒரு
சுழலில் சிக்குண்டான். அவன் ஒரு மரத்தடியில் அமர்ந்தான், அவனால் நம்பவே முடியவில்லை.
– அவன் அந்த விதமாக அது வரை அமர்ந்ததே இல்லை. அவன் ஒரு சூஃபி ஞானியை போல
அமர்ந்தான். அவனுள் ஒரு லயம் பரவியது, அவன் இருப்பினுள் ஒரு நாதம் எழுந்தது. அவனது
உள்ளிருந்து ஒரு ஓசை ஒலித்தது. என்ன நடக்கிறதென்றே அவனுக்கு புரிய வில்லை. அது ஒரு
அதிசயம். இன்னவென்று அவன் அறிந்திராத ஒரு சத்தம் அவனுக்குள்ளிருந்து வெடித்துக்
கிளம்பியது. மெதுமெதுவாக, அந்த பரபரப்பு அடங்கியவுடன், எல்லாமும் அமைதி பட்டவுடன்
அவனால் அந்த சத்தத்தை கேட்க முடிந்தது, அந்த ஓசை தெளிவடைந்தது, வடிவற்றது
வடிவமடைந்தது, அப்போது அது என்னவென்று அவனுக்கு தெரிந்தது. அது வேறு எதுமல்ல –
அல்லா, அல்லா – இப்போது அவனையும் அறியாது
அவனே அதை சொல்லத் துவங்கினான். அவன் அதை சொல்ல வில்லை. அவன் செய்பவனல்ல. அது
நிகழ்ந்தது. அவன் ஒரு சாட்சியாளனாக இருந்து அதைப் பார்த்தான்.
ஏதோ ஒரு பிரபஞ்ச கடலின் கரையில்
அவன் இருப்பதைப் போலவும், பெரும் அலை வந்து அவன் மீது நீரை வாரி இறைப்பதை போலவும்
இருந்தது. – அல்லா, அல்லா, அல்லா – கடலின் பிரமாண்டமான அலை கரையில் இருந்த அவனை
முழுவதுமாக நனைத்து சென்றது.
நிலைமாற்றமடைந்த அவன் பல்லாயிரம் தடவை அன்றைய இரவில் இறந்து பிறந்தான்.
பதினெட்டு வருடங்கள் அந்த சாதகன்
அங்கே இருந்தான், எதுவும் நடக்கவில்லை. பதினெட்டு மணி நேரங்களில் அந்த
பிச்சைக்காரன் புத்தனாகி விட்டான். அவன் எதுவும் செய்யவில்லை. எனக்கு இந்த கதை
மிகவும் பிடித்தது. லா வேட்ஸூ இந்த கதையை மிகவும் விரும்பி இருப்பார். அவரால் இந்த
கதையை புரிந்து கொள்ள முடியும். இதன் ரகசியம் என்ன? இது இயல்புக்கு முரணானதாக தெரிகிறது.
பதினட்டு வருடங்கள் முயற்சி செய்தவனுக்கு எதுவும் நிகழ வில்லை, பிரார்த்தனையே
செய்யாதவனுக்கு பதினட்டு மணி நேரங்களில் எல்லாமும் கிடைத்து விட்டது. இந்த கதையின்
பொருள் என்ன?
லா வேட்ஸூ எப்போதும் ஒரு வார்த்தை
கூறுவார். அது வூ வீ. அதன் பொருள் செயலற்ற செயல்.
செயலற்று செயல் செய்தல். செயல் செய்தலும் செயலற்று போதலும் ஒருங்கிணைத்து
இருப்பது. இதுதான் ரகசியம். அந்த சாதகன் அதிகப்படியாக செய்தான். அவன் தன்னை சமமாக
நிலை நிறுத்திக் கொள்ளவில்லை. அவன் அதிகமாக செய்தது செய்யாதது போன்றதுதான்.
வாழ்க்கை ஒரு சமன்பாடுதான். அவன்
சமப்படுத்திக் கொள்ள வில்லை. அடைவதற்கான பேராசையினால், லட்சியத்தினால், அவன்
எல்லைக்கே சென்று விட்டான். அவன் மிகவும் ஈடுபட்டு விட்டான்.
எப்போதெல்லாம் நீ மிகவும்
செயல்படுபவனாக இருக்கிறாயோ, எப்போதெல்லாம் செயல்படுபவனாக மட்டுமாக இருக்கிறாயோ,
அப்போது இந்த உலகின் விஷயங்கள் அனைத்தும் ஒத்துவரும் – ஆனால் அக உலகின் விஷயங்கள்
உனக்கு நிகழாது போய் விடும். ஏனெனில் நீ மிகவும் பதற்றத்தோடும், தவிப்போடும்
இருப்பதால் ஏற்றுக் கொள்வதற்க்குரிய நிலையில் நீ இல்லை. செயலுக்கும் செயலற்ற
நிலைக்கும் இடையில் சமனோடு, நேர்மறைக்கும் எதிர்மறைக்கும் இடையில் சமனோடு, எல்லா
இரட்டை தன்மைகளுக்கும் இடையில் சமமாக யார் இருக்கிறார்களோ அவர்களால்தான் பெற்றுக்
கொள்ள முடியும்.
-- ஓஷோ --
Video
Video
Comments
Post a Comment