Google

ஆண்களே உங்களது வாழ்க்கை சொர்க்கமாய் அமைய வேண்டுமா? பெண்களை நேசியுங்கள்!!💚 -Osho



💚💚💚 ஆண்களே உங்களது வாழ்க்கை சொர்க்கமாய் அமைய வேண்டுமா?

பெண்களை நேசியுங்கள்!!💚

- ஓஷோ

💚இந்த உலகில் நீ பார்க்கும் பெண் உண்மையான பெண் அல்ல.

அவள் நூற்றாண்டு காலமாக கறை படுத்தப் பட்டு வருபவள்.

பெண் கறை படிந்தவளாக இருக்கும் போது ஆண் மட்டும் இயற்கையானவனாக இருக்க முடியாது. ஆணுக்குப் பிறப்பளிப்பவளே அந்தப் பெண்தானே. அவள் இயல்பாக இல்லையெனில் அவள் குழந்தைகளும், அது ஆணோ, பெண்ணோ – அந்த குழந்தைகளும் இயல்பாக இருக்காது.

பெண்களுக்கு விடுதலை மிக மிகத் தேவை. ஆனால் விடுதலை என்ற பெயரால் நடந்துக் கொண்டிருப்பவை வெறும் முட்டாள்தனமானவையே. அது வெறும் காப்பியடித்தல், வேஷமிட்டுக் கொள்ளல், விடுதலை அல்ல.

உண்மையான விடுதலையென்பது பெண்களை மிகச் சரியான ஒரு பெண்ணாய்தான் மாற்றும். ஆணின் நகலாக அல்ல.

ஆனால் இப்போது அதுதான் நடந்துக் கொண்டிருக்கிறது.

பெண்கள் ஆண்கள் போல ஆக விரும்புகின்ற்னர். ஆண் சிகரெட் குடித்தால் பெண்ணும் சிகரெட் பிடிக்க வேண்டும். ஆண் ஒரு விஷயத்தைச் செய்தால் பெண்ணும் அதைச் செய்தாக வேண்டுமென்கிறாள். பெண் இரண்டாம் தர ஆணாக மாறிக் கொண்டிருக்கிறாள்.

பெண் ஒரு உண்மையான பெண்ணாக இருக்க சுதந்திரம் இல்லையென்றால் ஆணுக்கும் நிஜமாகவே ஆண் ஆக சுதந்திரம் என்றும் கிடைக்காது. பெண்ணின் சுதந்திரம் ஆணின் சுதந்திரத்திற்கு மிக அவசியம். அடிமைப் படுத்தப் பட்ட ஒரு பெண் வெகு நிச்சயம் ஆணையும் அடிமையாக்க முயலுவாள்.அவள் வழி நுட்பமானது. மிக மிக நுட்பமான வழிகளில் அவள் ஆணை அடிமைப் படுத்த முயலுவாள்.

அவள் உன்னுடன் நேராக மோத முயல மாட்டாள். அவள் சண்டை மறைமுகமானது. அவள் அழுவாள். கதறுவாள். அவள் உன்னை அடிக்க மாட்டாள். தன்னைத் தானே அடித்துக் கொள்வாள். மனைவி தன்னைத் தானே அடித்துக் கொள்வதன் மூலம், அழுது கதறுவதன் மூலம், மிகப் பலமான ஆண் கூட அவளுக்கு அடிமையாவான். பெண்ணுக்கு முழுச் சுதந்திரம் கிடைக்க வேண்டும். அப்போதுதான் அவள் அதை ஆணுக்கும் தர முடியும்.

கடந்த காலத்தில் ஆண் பெண்களை மிகவும் புனிதமானவர்கள், தேவதைகள் என்று நம்ப வைத்தான். ஆண் தூய்மையற்றவன். பையன்கள் பொறுக்கிகள். ஆனால் பெண்? அவள் தெய்வீகமானவள். ஆண் பெண்ணை உயரமான பீடத்தில் ஏற்றி வைத்தான். பெண்ணை அடக்கி வைக்க அவனது தந்திரம் அது.

ஆண் அவளை வணங்கினான். அப்படி வணங்குவதன் மூலம் அவளை அடக்கி வைத்தான்.ஆம். அப்படி இயல்பாக பீடத்தின் மேல் அமர்த்தப்பட்ட பெண் தன்னை தெய்வீகமாய் நினைத்துக் கொண்டாள். அதனாலேயே ஆண்கள் செய்தவற்றையெல்லாம் அவளால் செய்ய முடிய வில்லை.

அவளது ஈகோவை, ஆணவத்தை மீறி அவளால் எதுவும் செய்ய முடிய வில்லை. அந்த உயர்ந்த பீடம் அவளது ஈகோவிற்கு மிகவும் திருப்தியளித்தது. அவள் ஒரு தாய். அவள் ஒரு தெய்வம். ஆணை விட அதிக தெய்வத்தன்மை உடையவள்.

அதனாலேயே ஆண் காலம் காலமாய் அவனது வழியிலேயே இருந்து வருகிறான். பெண் மட்டும் எப்போதும் புனிதத் தன்மையுடையவளாய் மட்டுமே இருக்க வேண்டும் என்று கற்பிக்கப் பட்டு வருகிறாள். பெண் சராசரியாக இருக்க என்றுமே அனுமதிக்கப் பட்டதில்லை. சராசரி பெண்கள் மோசமானவர்கள் என்ற கற்பிதத்தை இந்த சமூகத்தில் ஆண் உருவாக்கி வைத்திருக்கிறான்.

நினைவில் கொள்ள வேண்டிய அடிப்படைகளில் ஒன்று இது: நீ யாரையாவது அடிமைப் படுத்தினால் நீயும் கடைசியில்,முடிவான அடிமைதான் ஆவாய், சுதந்திரமாக இருக்க முடியாது. நீ சுதந்திரமாக இருக்க விரும்பினால், மற்றவர்களுக்கும் விடுதலையைக் கொடு.

மார்க்ஸ் இந்த சமுதாயத்தை இரண்டு இனமாகப் பார்த்தார். ஏழைகள் பணக்காரர்கள் என்று. நான் இந்த சமுதாயத்தை இரண்டு இனமாகப் பார்க்கிறேன். ஆண்கள். பெண்கள்.

ஆண் பல நூற்றாண்டுகளாய் எஜமானனாய் இருக்கிறான். பெண் அடிமையாய் இருக்கிறாள். அவளை ஏலம் போட்டார்கள். விற்றார்கள். உயிருடன் எரித்தார்கள். எந்த ஒரு காரணத்தின் பொருட்டாவது அவளை கற்பழிக்க முனைந்தார்கள்.

பெண்களுக்கு போர்களில் ஈடுபாடு கிடையாது. பெண்களுக்கு அணுகுண்டு ஆயுதங்களில் ஈடுபாடு கிடையாது. அவர்களுக்கு கம்யூனிசத்திலும், முதலாளித்துவத்திலும் ஈடுபாடு கிடையாது.

இந்த எல்லா இசமும் தலையிலிருந்து வந்தவை. பெண்கள் வாழ்வை அனுபவிப்பதில், வாழ்வின் சின்ன சின்ன அழகான விஷயங்களை ரசிப்பதில், தன்னுடைய செயல்கள் ஒவ்வொன்றையும் ரசனையுடன் செய்வதில் விருப்பம் கொண்டவர்கள்.

ஆண்களே உங்களது வாழ்க்கை சொர்க்கமாய் அமைய வேண்டுமா? பெண்களை நேசியுங்கள்.

- "பெண்ணின் பெருமை" யிலிருந்து ஓஷோ

Comments