Google

திருமணம் பற்றி ஓஷோ பதிவு



திருமணம் பற்றி ஓஷோ பதிவு

❤திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது அல்ல. இங்கேதான் இது சூழ்ச்சிக்கார புரோகிதர்களால் சாமியார்களால் நடத்தப்படுகிறது. ஆனால் சமுதாயத்துடனான விளையாட்டில் நீங்கள் சேர்ந்துகொள்ள விரும்பினால், அதேசமயம் தனிப்பட்டு நிற்க விரும்பினால், உங்கள் மனைவியிடமோ, கணவரிடமோ இந்த திருமணம் வெறும் விளையாட்டுத்தான் என்பதை தெளிவாக்கி விடுங்கள். ஒருபோதும் இதை பிரச்னைக்குரியதாக எடுத்துவிடாதே. திருமணத்திற்கு முன்பு இருந்தமாதிரியே நான் சுயேச்சையாகத்தான் இருப்பேன். நீயும் திருமணத்திற்கு முன்பு இருந்தது போலவே சுயேச்சையாக இரு. உன் வாழ்வில் நான் குறுக்கிடப் போவதில்லை. என் வாழ்வில் நீயும் குறுக்கிடாதே. நாம் நண்பர்களாக சேர்ந்து வாழ்வோம். நம் சந்தோஷத்தை, சுதந்திரத்தை பகிர்ந்து கொள்வோம். ஒருவர் மற்றவருக்கு பாரமாக மாற மாட்டோம்.
எந்த கணத்தில் வசந்தம் ஓய்ந்து விட்டதாக, தேனிலவு தேய்ந்து விட்டதாக நாம் உணர்கிறோமோ அக்கணமே மேற்கொண்டு நடிக்கத் தொடங்காத அளவுக்கு ஒருவரிடம் ஒருவர் பின்வருமாறு சொல்லி விடுமளவுக்கு நேர்மையாக இருப்போம். “நாம் நிரம்ப காதலித்தோம், என்றென்றும் ஒருவருக்கொருவர் நன்றியுடன் இருப்போம், நாம் காதலித்த நாள்கள் பொன்னான நாள்களாக நம் நினைவுகளிலும் கனவுகளிலும் நம்மைத் தொடர்ந்து வரும். ஆனால் வசந்தம் முடிந்து விட்டது. நாம் பிரிய வேண்டிய இடம் வந்துவிட்டது. இது வேதனையாக இருந்தாலும் இனியும் நாம் சேர்ந்து வாழ்வது அன்பின் அடையாளமாக இருக்காது. நான் உன்னை காதலிப்பது உண்மையென்றால் என் காதல் உனக்கு துன்பமாக மாறிவிடுவதை கண்ட அக்கணமே நான் உன்னை விட்டு நீங்கி விடுவேன். நீ என்னை உண்மையாக காதலித்தால் உன் காதல் எனக்கு சிறையாக மாறுகிறது என்பதை காணும் அக்கணமே நீ என்னை விட்டு நீங்கி விடுவாய்.”
அன்பே வாழ்வின் உன்னத மதிப்பீடாகும். மூடச்சடங்குகளாக அதை தாழ்த்தி விடக்கூடாது. அன்பும் சுதந்திரமும் ஒன்றிணைந்தே செல்லும் – ஒன்றை தேர்ந்தெடுத்து மற்றதை விட்டுவிட முடியாது. சுதந்திரத்தை அறிகிற மனிதர் அன்பு நிறைந்தவராய் இருப்பார். அன்பை அறிகிற மனிதர் எப்போதுமே சுதந்திரம் தர சித்தமாய் இருப்பார். நீங்கள் நேசிக்கும் ஆளுக்கே சுதந்திரம் வழங்க உங்களால் முடியாவிட்டால் வேறு யாருக்குத்தான் சுதந்திரம் தருவீர்கள் சுதந்திரம் தருவது என்பது பூரணமாய் நம்புவதே தவிர வேறல்ல. சுதந்திரம் என்பது அன்பின் வெளிப்பாடு.
எனவே திருமணம் ஆனவராயினும் ஆகாதவராயினும் நினைவில் கொள்ளுங்கள். எல்லா திருமணங்களுமே போலியானவைதான். சம்பிரதாய வசதிக்காகத்தான். உங்களை சிறைப்படுத்தி ஒருவருடன் ஒருவரை பிணைத்துப் போடுவதல்ல அவற்றின் நோக்கம். இருவரும் சேர்ந்து வளர்வதற்கு உதவுவதே அவற்றின் நோக்கம். ஆனால் வளர்ச்சிக்கு சுதந்திரம் அத்தியாவசியம். ஆனால் கடந்த காலத்தின் எல்லா கலாசாரங்களுமே, சுதந்திரம் இல்லையென்றால் அன்பு மரணமடைகிறது என்பதை மறந்து விட்டன.❤

Comments

Post a Comment