நீ மோசஸையும் அவரது பத்து கட்டளைகளையும் கேட்க வேண்டியதில்லை. - OSHO
நீ மோசஸையும் அவரது பத்து கட்டளைகளையும் கேட்க வேண்டியதில்லை. நீயே உன்னுடைய கட்டளைகளை கண்டு பிடித்துக் கொள். பிரபஞ்ச இயற்கையுடன் நீ நேரிடையாக தொடர்பு கொள்ளாத வரை உன்னுடைய செய்கைகள் எல்லாமே ஒரு போலிமுகத்துடன்… ஒரு பொய்முகமாக, போலியானதாக, ஏமாற்றுதலாகத்தான் இருக்கும்.
நான் கேள்விப்பட்டது இது : கடவுள் இந்த உலகத்தை படைத்துவிட்டு, பின் பத்து கட்டளைகளுடன் இந்த உலகை சுற்றி வந்தார். அவர் பாபிலோன் காரர்களிடம் சென்று, ஒரு கட்டளையை பெற்றுக் கொள்கிறீர்களா என்று கேட்டார்.
அவர்கள் – அது என்ன – என்று கேட்டனர். இயல்பாகவே, முதலில் கட்டளை என்னவென்று கட்டாயம் கேட்க வேண்டுமே.
கடவுள் – நீங்கள் கள்ளத்தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது – என்றார்.
அதற்கு அவர்கள், – அதை மறந்து விடு. பின் நாங்கள் என்ன செய்வது இந்த அர்த்தமற்ற வாழ்வில் கள்ளத்தொடர்பு ஒன்று தான் சுவாரசியமான ஒரு விஷயம். ஆகவே போய் விடு – என்றனர்.
கடவுள் மிகவும் ஆத்திரம் கொண்டார். ஆனால் என்ன செய்வது அவர் எகிப்தியர்களிடம் சென்றார். பின் மற்ற எல்லோரிடமும் சென்றார், ஆனால் ஒவ்வொருவரும் முதலில் கட்டளை என்னவென்று கேட்டனர். கேட்ட பின் எல்லோரும் மறுத்துவிட்டனர். அவர்கள், வேறு யாரும் நாங்கள் என்ன செய்ய வேண்டுமென்று எங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை. எது சரி, எது தவறு என்று நாங்களே எங்களுடைய உள்ளுணர்வின் மூலம் கண்டு பிடித்துக் கொள்வோம். என்றனர்.
இறுதியில் அவர் மோசஸை சந்தித்தார். அப்போது அவர் சவுதி அரேபியாவின் பாலைவனத்தில் புனித பூமியான இஸ்ரேலை கண்டு பிடிக்க நாற்பது ஆண்டுகளாக சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். அவர் எகிப்திலிருந்து கூட்டி வந்த குழுவில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு பேர் வழியிலேயே இறந்து விட்டனர். அவர் இஸ்ரேலை அடைந்த சமயம் அவருக்கு மிகவும் வயதாகி விட்டிருந்தது. மிகவும் ஓய்ந்து விட்டார். அவரது நண்பர்கள் யாவரும் இறந்து விட்டனர். ஒரு புதிய தலைமுறை வந்து விட்டிருந்தது. உண்மையில் மூன்றாவது தலைமுறையே வந்து விட்டது. அவர்களுக்கு மோசஸிடம் எந்த மதிப்பும் இல்லை. உண்மையில் அவர்களுக்கு யார் இவர் எப்போது பார்த்தாலும் இதை செய், அதை செய்யாதே என்று சொல்லிக் கொண்டேயிருக்கிறார் என்ற கேள்வி இருந்தது.
ஆனால் அது அவருடைய தப்பல்ல. அது கடவுளுடையது.
அவர் மோசஸை சந்தித்த போது அவர் மோசஸிடம், – ஒரு கட்டளையை வாங்கி கொள்கிறாயா – என்று கேட்டார்.
தான் ஒரு யூதனிடம் பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதையோ, அவர்களது குணம் பற்றியோ எதுவும் தெரியாமல் மிகவும் தயக்கத்தோடு கேட்டார். ஏனெனில் அவர் ஒவ்வொரு இடத்திலும் மறுக்கப்பட்டுக் கொண்டிருந்தார்.
ஆனால் மோசஸ் வேறு விதமான ஒரு கேள்வியைத்தான் கேட்டார்.
அவர், என்ன கட்டளை என்று கேட்க வில்லை. அவர் அதன் விலை என்ன என்று தான் கேட்டார். ஒரு யூதன் அப்படித்தான் கேட்பான்.
கடவுள், – அதற்கு விலையில்லை – என்றார்.
அப்போது மோசஸ், – நான் பத்து எடுத்துக் கொள்கிறேன் விலையில்லை என்றால் ஏன் ஒன்றே ஒன்று – என்றார்.
ஆனால் எந்த கட்டளையாக இருந்தாலும் சரி. யாரிடமிருந்து எடுத்துக் கொண்டிருந்தாலும் சரி, அது கடவுளாக இருந்தாலும் தான் அது உன்னுடைய இருப்பில் எந்த மாற்றத்தையும் உண்டாக்கப்போவதில்லை. அது உன்னிடம் ஒரு நடிகனை, மறைப்பவனை, அமுக்கிக் கொள்பவனை, வளர்ச்சியற்றவனை, மேலோட்டனமானவனை, குற்றவுணர்ச்சி கொள்பவனைத்தான் உருவாக்கும். ஆனால் பத்து கட்டளைகள் என்பது ஒவ்வொரு புத்த சன்னியாசியும் பின்பற்ற வேண்டிய கௌதமபுத்தருடைய 3300 கட்டளைகளை ஒப்பிடும்போது ஒன்றுமேயில்லை. அவ்வளவை உன்னால் நினைவு படுத்திக் கொள்ளக் கூட முடியாது. 3300 கட்டளைகள்?
உன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு கணமும் முழுக்க முழுக்க வெளிப்புறத்திலிருந்து கட்டுப்படுத்தப்படுகிறது.
வெளிபுறத்திலிருந்து கட்டுப்படுத்தப்படுதல் என்ற இந்த யோசனையையே நான் வெறுக்கிறேன். நான் உன்னுடைய இருப்பு மலர்வதைத்தான் விரும்புகிறேன். எனக்கு உறுதியாக தெரியும். ஏனெனில் உன்னுடைய ஆற்றல் வெளிப்படும்போது எது சரி எது தவறு என்ற தேர்ந்தெடுத்தலே தேவைப்படாது.
நீ தேர்ந்தெடுக்காமலே சரியானதை செய்வாய். அது தேர்ந்தெடுத்தல் அற்ற ஒன்றையே செய்தலாக இருக்கும்.
தெளிவான, உறுதியாக தெரிந்து கொண்ட, மனதை கடந்த ஒளி கொண்ட, மனிதனுக்கு வாழ்க்கை தேர்வற்ற விஷயமாகும். நீ சரியானதைத்தான் செய்வாய்.
ஆகவே நான் உனக்கு எந்த கட்டுப்பாட்டையும் எந்த ஒழுக்கத்தையும் போதிக்கவில்லை. விழிப்போடு இருக்க சொல்லிக் கொடுக்கிறேன். உன்னுடைய விழிப்பில் நீ எந்த தவறானதையும் செய்ய முடியாது. உன்னால் யாரையும் காயப்படுத்த முடியாது. யாருடைய சுதந்திரத்திலும் தலையிட முடியாது. யாருடைய எல்லைக்குள்ளும் உள்ளே நுழைய மாட்டாய். வாழ்க்கையின் மீது மிகுந்த மரியாதை, ஆவல், எழும்.
அது உன்னுடைய மதம் சம்பந்தப்பட்டது எல்ல, அது உன்னுடைய எந்த நம்பிக்கையுடன் சம்பந்தப்பட்டது அல்ல.
விழிப்புணர்வுடன் அமைந்த மனிதன் அமைப்பாக இருக்கும் எந்த மதத்தையும் சேர்ந்தவன் அல்ல. மதஅமைப்பு மததன்மைக்கு எதிரானது. ஒவ்வொரு மத அமைப்பும் உண்மையை கொன்று விடுகிறது.
-OSHO
Christianity: The Deadliest Poison and Zen: The Antidote to All Poisons Chapter #1
Comments
Post a Comment