என் செய்தி உங்களை வந்தடையும் 🌸💮 ஓஷோ 💮
என்னுடைய வார்த்தைகள் ஒரு நாள் உங்களை வருடும் மலர்களாக இருக்கும்
ஒரு நாள் உங்களுக்குள்ளே செருகப்படும் கூர்மையான கத்திகளாக இருக்கும்
ஒரு நாள் என் வார்த்தைகள் வலி நிவாரணிகளாக இருக்கும்
மற்றொரு நாள் அவை தீக்கங்குகளாக உங்களைச் சுட்டுக் காயப்படுத்தும்
நேர்மறை - எதிர்மறை இரண்டையும் சந்தித்தால்தான்
நீங்கள் இறுதியில் உங்கள் வீட்டை அடைய முடியும்
உங்கள் வீட்டில் அவை இரண்டும் ஒரே இடத்தில் சந்திக்கும், சங்கமிக்கும்
பல பருவங்களில் பல மனநிலைகளில் நீங்கள் என்னுடன் வாழ வேண்டும்
அப்போதுதான் வளமை என்ற சொல்லின் பொருள் புரியும்
என்னுடைய எல்லா வழிகளையும் ஏற்றுக்கொள்ளுங்கள்
ஒவ்வொரு வழியும் உங்களுக்குள் இருக்கும் ஏதாவது ஒன்றை உடைத்தெறியும்
உறைந்து போன ஒரு பகுதியை உருக்கி அதை மீண்டும் நீரோட்டம் போல் பாயவைக்கும்
நான் உங்களைப் பல வகைகளில் தாக்குவேன்
அதை மௌனமாக ஏற்றுக்கொள்வதுதான் நீங்கள் என்னிடம் செய்த சரணாகதியின் அடையாளம்
நான் உங்களைச் சரணடைந்து விட்டேன்
நீங்கள் எங்கு சென்றாலும் பின்தொடர்வேன்
என்று சொல்லிவிட்டு சொர்க்கத்திற்குப் போனால் வருவேன்
நரகத்திற்குப் போனால் வரமாட்டேன் என்று சொன்னால் எப்படி.....???
அது முழுமையான சரணாகதியாகாதே...!!!
நரகத்தின் அடிமட்டத்தை உங்களால் தொடமுடியவில்லை என்றால்
உங்களுக்கு சொர்க்கம் என்றால் என்னவென்று தெரியாது
நரகத்தின் பணியே அதுதான்
அதுதான் உங்களிடம் உள்ள தேவையில்லாதவற்றை அழித்து உங்களைத் தூய்மைப் படுத்துகிறது
அந்த நிலையில்தான் உங்களுக்குள் சொர்க்கம் மலரும்
நான் சொல்வது முரண்பாடுபோல் தோன்றும்
ஆனால் இது முக்காலும் உண்மை
சொர்க்கத்தின் மலர் நரகத்தின் அடியாழத்தில்தான் மலர்கிறது
ஒரு காலம் வரும்
அப்போது நீங்கள் என் பேச்சைக் கேட்பீர்கள்
உங்களுக்குள் சோகமோ மகிழ்ச்சியோ இருக்காது
அப்போது என் வார்த்தைகள் மலர்களாகவும் இருக்காது
சுட்டெரிக்கும் நெருப்பாகவும் இருக்காது
தூய்மையான மௌனத்தில் நான் சொல்வதைக் கவனிப்பீர்கள்
அப்போது வேறு எந்தச் சத்தமும் அங்கே இருக்காது
அப்போதுதான் என் செய்தி உங்களை வந்தடையும்
ஓஷோ
Comments
Post a Comment